TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

Dec 09, 2025,02:43 PM IST

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் இதுவரை தமிழகத்தில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர், நாமக்கல், கரூர், காஞ்சிபுரம் என 8 மாவட்டங்களில் மக்களை சந்தித்துள்ளார். கரூர் சம்பவத்திற்கு முன்பு வரை அந்தந்த ஊர்களுக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்து பேசி வந்தார் விஜய். ஆனால் கரூர் சம்பவத்திற்கு பிறகு சாலைகளில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் மக்களை அழைத்து சந்தித்தார்.


தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் விஜய் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், புதுச்சேரியில் ரோடுஷோ நடத்த தவெக.,வினர் திட்டமிட்டனர். ஆனால் அதற்கு புதுச்சேரி போலீசார் அனுமதி மறுத்ததால் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டனர். இதற்கு அனுமதி கிடைத்ததால் டிசம்பர் 09ம் தேதியான இன்று புதுச்சேரியில் பெரிய மைதானம் ஒன்றில் மக்களைக் கூட்டி, தனது பிரச்சார வாகனத்தின் மீது நின்றபடி உரை நிகழ்த்தினார் விஜய். காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்த போதிலும் வழக்கமாக தமிழகத்தில் பேசுவது போல் அதே 14 நிமிடங்கள் தான் புதுச்சேரியிலும் விஜய் பேசினார். 




வழக்கமாக தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் போது அந்தந்த மாவட்ட பிரச்சனைகளை சிலவற்றை பட்டியலிடுவார். பிறகு திமுக அரசை கடுமையாக தாக்கி பேசுவார். அதிலும் திருவாரூர் பிரச்சாரத்தில் இருந்து அந்தந்த மாவட்ட அமைச்சரையும் கடுமையாக தாக்கி, பஞ்ச் டயலாக்குடன், உணர்ச்சிகரமாக பேசுவார் விஜய். இதனால் அடுத்த வாரம் பிரச்சார கூட்டத்தில் விஜய் பேசுவது வரை, அது தான் தமிழக அரசியல் களம், மீடியா விவாதங்கள் என ஹாட் டாப்பிக்காக இருந்து கொண்டிருக்கும். திமுக.,வை சேர்ந்தவர்களும், மற்ற கட்சியனரும் விஜய்யின் பேச்சு குறித்து தங்களின் கருத்தை கூறி வருவார்கள்.


ஆனால் புதுச்சேரியில் அப்படி நடக்கவில்லை. விஜய்யின் பேச்சில் பெரிதாக காரமும் இல்லை, சாரமும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், அங்கு ஆளும் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதல்வருமான ரங்கசாமி, விஜய்க்கு நெருக்கமானவர். அதே சமயம் புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு திமுக.,வை தாக்குவதற்கான வேலையே இல்லை. தாக்கி பேசினால் தனது கொள்கை எதிரி என விஜய் குறிப்பிடும் பாஜக.,வை தான் விமர்சிக்க வேண்டும். இதனால் விஜய் இன்று என்ன பேச போகிறார் என அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தனர்.


விஜய் காரசாரமாக ஏதாவது பேசுவார், புதுச்சேரி மக்களை கவர அவரது பேச்சு மாறுபட்டதாக இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. காரணம், வழக்கம் போல் புதுச்சேரிக்கு உட்பட்ட பிரச்சனைகள் சிலவற்றை பட்டியலிட்டார். அதுவும் மக்களை பெரிதும் கவருவதாக இல்லை. அதனால் அவர் பேசும் போது, அந்த இடத்தில் ஆரவாரம் இல்லாமல் அமைதி தான் காணப்பட்டது. ஆட்சியில் அங்கம் வகிக்கும் பாஜக.வை,விமர்சித்தால் அது ரங்கசாமியையும் விமர்சிப்பதாக ஆகி விடும் என்று நினைத்தோ, என்னவோ பெரிதாக பாஜக பற்றி விஜய் பேசவில்லை. பாஜக என்ற பெயரை கூட அவர் குறிப்பிடவில்லை. மாறாக மத்திய அரசு என்று மட்டும் தான் குறிப்பிட்டார். 


அதே சமயம் தனது பேச்சில் பஞ்ச் இருக்க வேண்டும் என்பதற்காக திமுக.,வை நம்பாதீர்கள். இங்கு கொடுக்கப்பட்டதை போல் தங்களின் பிரச்சாரத்திற்கு தமிழகத்தில் திமுக அரசு பாதுகாப்பு கொடுத்தது கிடையாது என்று மட்டும் சொல்லி, திமுக.,வை தாக்கினார். தமிழ்நாட்டைப் போல அனல் பறக்கப் பேச புதுச்சேரியில் ஸ்கோப் இல்லை என்பதால் விஜய்யின் இன்றைய பேச்சு பெரிதாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


அதேசமயம், தமிழ்நாட்டைப் போலவே வெறித்தனமான ரசிகர்களை புதுவையிலும் விஜய் வைத்திருக்கிறார் என்பதை இன்று கூடிய கூட்டம் நிரூபித்தது. கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது, காவல்துறையினரும் அதை கட்டுப்படுத்த தமிழ்நாடு போலீஸார் போல திணறியதையும் பார்க்க முடிந்தது.


2026 சட்டசபை தேர்தலில் புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் என மறைமுகமாக பேசினாரே தவிர, புதுச்சேரியில் தவெக  எப்படி போட்டியிடும், கூட்டணி உண்டா.. அப்படியே கூட்டணி வைத்தால் யாருடன் என்பது குறித்து விஜய் சூசகமாக கூட உணர்த்தவில்லை.  இருப்பினும் முதல்வர் ரங்கசாமியை அவர் புகழ்ந்து பேசியுள்ளதால் அவருடன் கூட்டணி வருமா என்ற எதிர்பார்ப்பு புதுச்சேரியில் எழுந்துள்ளது.


ஆக மொத்தத்தில் தமிழ்நாடு அளவுக்கு விஜய்யின் புதுச்சேரி பேச்சு சூடாக இல்லை என்பது உறுதி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

news

கடந்த 2 நாட்களாக அமைதியாக இருந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்தது... எவ்வளவு குறைவு தெரியுமா?

news

ஆலயம் தொழுவது சாலவும் நன்று.. அவ்வளவு நன்மைகள் உள்ளன கோவிலுக்கு செல்வதில்!

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

முதல் முறையாக.. சொன்ன நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த தவெக தலைவர் விஜய்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 09, 2025... இன்று வெற்றிகள் அதிகரிக்கும்

அதிகம் பார்க்கும் செய்திகள்