சென்னை: மறைந்த கலைஞர் கருணாநிதி சந்திக்காத வெற்றிகள் இல்லை என்று கூறுவதை விட, சந்திக்காத தோல்விகள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சியும் சந்திக்காத அளவுக்கு வரலாறு காணாத தோல்விகளைச் சந்தித்த ஒரே தலைவர் கலைஞர்தான்.
ஆனால் அத்தனைத் தோல்விகளையும் தாண்டி, எல்லாவற்றையும் தாங்கி, திமுக என்ற மாபெரும் இயக்கத்தை உறுதிபட காத்து நின்றவர் கருணாநிதி. தோல்வியால் எந்த ஒரு சபலத்துக்கும் ஆளாகி தடுமாறாமல், தனித்த பெரும் இயக்கமாக திமுகவை உறுதிபட மாற்றிக் காட்டிய சாதனையாளர் கருணாநிதி.
சிங்கிள் டீ குடித்து துண்டை உதறி தோளில் போட்டு அடிமட்டத் தொண்டர்கள், ரத்தமும் சதையுமாக வளர்த்த இயக்கம்தான் திமுக. இன்று தவெகவின் வருகையால் திமுக தடுமாறிப் போய் நிற்பது திமுகவினரை மட்டுமல்லாமல் பிற கட்சியினரையும் கூட வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த நேரத்தில்தான் கலைஞரை நினைத்துப் பார்க்க வேண்டிய நிலையில் இன்றைய திமுகவினர் உள்ளனர்.

இன்றைய சமூக வலைதளங்களில் வலம் வரும் திமுகவினர் பார்த்திராத, அனுபவித்திராத பேரனுபவம்தான் கருணாநிதி. அந்தப் பழைய கருணாநிதியின் பாதைய சரியாக புரிந்து கொள்ளாமல்தான் இன்றைய திமுக பல விதங்களிலும் தடுமாறிப் போய் நிற்கிறது.
2014ம் ஆண்டு.. தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி முதல் முறைாக ஆட்சிக் கட்டிலில் ஏறிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஆண்டு. அந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசியது. தமிழ்நாட்டில் அது அப்படியே தலைகீழாக இருந்தது. மோடியா லேடியா என்று கேட்டு அந்தத் தேர்தலைச் சந்தித்தார் ஜெயலலிதா. தனித்துத் துணிச்சலாக 39 தொகுதிகளிலும் போட்டியிட்டார்.
விஜயகாந்த் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலைச் சந்தித்தது. மறுபக்கம் திமுக தலைமையில் வலுவான அணி களம் காண்கிறது. அந்தத் தேர்தலில் திமுக படு தோல்வியைச் சந்திக்கிறது. ஜெயலலிதாவின் அதிமுக 37 தொகுதிகளை அள்ளிச் செல்கிறது. பாமகவுக்கு ஒரு தொகுதியும், பாஜகவுக்கு ஒரு தொகுதியும் கிடைக்கின்றன. திமுகவுக்கு ஒரு இடம் கூட இல்லை.
அந்தத் தேர்தல் முடிவுகள் திமுக தரப்பை அதிர வைத்தன. ஆனால் அதிராமல் நிலையாக இருந்தவர் கருணாநிதி மட்டுமே. தன்னைச் சந்தித்த செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, மாறாத அவரது ஸ்டைல் புன்னகையுடன், மக்கள் தீர்ப்பிற்கு தலைவணங்குகிறேன். திமுக கடந்த காலங்களில் இது போன்ற தோல்விகளையும் சந்தித்துள்ளது, அதேபோல் மாபெரும் வெற்றிகளையும் குவித்துள்ளது.
எங்கள் கட்சி நிறுவனர் அண்ணா சொன்னது போல, தோல்வியைக் கண்டு நாங்கள் தொய்வடைய மாட்டோம், அதே நேரத்தில் வெற்றி தலைக்கேறவும் விடமாட்டோம். மக்கள் நலனுக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று சொன்னதோடு, தேசிய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பாஜகவிற்கும், பிரதமர் பதவியை ஏற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கும் அவர் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
அதன் பிறகு 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வரலாற்றை மாற்றி எழுதியது. 38 தொகுதிகளை அள்ளி எடுத்தது. ஒரு இடத்தில் மட்டுமே அதிமுக வென்றது. இதுதான் திமுக என்று அப்போது சொல்லாமல் சொன்னார்கள் அக்கட்சியினர்.
2006ம் ஆண்டு திமுக சட்டசபைத் தேர்தலில் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. கருணாநிதி தலைமையிலான அந்த ஆட்சியின்போது பல நலத் திட்டங்களை திமுக அறிவித்து அமலாக்கி அதிர வைத்தது. அதில் மிக முக்கியமானது இலவச வண்ணத் தொலைக்காட்சி. அந்தத் திட்டம் மிகப் பெரிய அளவில் மக்களை சென்றடைந்தது. அந்தத் திட்டம் மட்டுமல்லாமல் மேலும் பல திட்டங்களையும் அந்த ஆட்சியில் அமல்படுத்தியது திமுக. ஆனால் 2011 சட்டசபைத் தேர்தலில் திமுக பெரும் தோல்வியைத் தழுவியது. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.
விஜயகாந்த் அப்போது திமுகவுக்குப் பெரும் பின்னடைவைக் கொடுக்கக் காரணமாகி விட்டார். அதற்குப் பிறகு 2016ல் வந்த தேர்தலிலும் திமுக தோல்வியை சந்தித்தது.
ஒவ்வொரு தேர்தல் தோல்விக்குப் பிறகும் தொண்டர்கள் சுருண்டு போவார்கள், சோர்ந்து போவார்கள்.. ஆனால் ஒவ்வொருவரையும் தட்டி எழுப்பி தனது கடமையை சிறப்பாக செய்தவர் கருணாநிதி. அதேசமயம், ஏன் தோற்றோம், எங்கு தவறு செய்தோம் என்பதை ஆராய்ந்து அதை சரி செய்யும் முயற்சியிலும் முறையாக இறங்குவதும் அவரது ஸ்டைல். தோல்வியால் முடங்கிப் போய் விடாமல் அடுத்த நாளே அறிவாலயம் வந்து அமர்ந்து தனது வேலைகளைச் செய்வதில் அவருக்கு நிகர் அவர்தான்.
இன்றைய திமுகவினர், வேறு யாரிடமிருந்தும் பாடம் கற்கத் தேவையில்லை. கருணாநிதியின் செயல்பாடுகளை நினைவுபடுத்திக் கொண்டாலே போதும்.. திறம்பட மீண்டு வர முடியும். அதுதான் இப்போது அவர்களுக்குத் தேவையானதும் கூட.
மாறாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் எம்.ஏ. பேபி சொன்னது போல அதிமுக ஆட்சியமைக்கட்டும், நாம் ஆதரவு கொடுப்போம் என்ற நிலைப்பாட்டுக்குப் போவதெல்லாம் கருணாநிதிக்கும் பெருமை சேர்க்காது, திமுகவுக்கும் அது கெளரவமாக இருக்காது என்பதை அடி மட்டத் தொண்டர்கள் மற்றும் நீண்ட கால திமுகவினரின் கருத்தாக இருக்கும்.
மக்கள் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது.. ஆளுநர் ஜனநாயகத்தைப் புறக்கணிக்கிறார்.. சிபிஎம்
தாலியை கையில் வைத்துக் கொண்டு.. இது வேண்டாம் விஜய்.. கஸ்தூரி அட்வைஸ்
நரை வந்தபோதும் கரைதொட்டு மோதுவதும்.. ஆதலால் காதல் செய்வீர்!
DMK: தோல்வி கண்டு தொய்வடைய மாட்டோம்.... அன்று கருணாநிதி சொன்னது!
Happy Mother's Day: அன்னையர் தினம்.. தியாகத்தையும் அன்பையும் கெளரவிக்கும் நாள்!
தந்தைக்கு ஓர் மடல்.. என் தந்தையே... என் விந்தையே...!
என்றாலும் முடியும்!
தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!
தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
{{comments.comment}}