இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?

Apr 06, 2026,05:19 PM IST

- எழுத்தாளர் சுசரிதா


Situationship.. 

Ghosting.. 

Breadcrumbing.. 

Homiehopping.. 

Benching.. 

Hard launch.. 

Soft launch.. 


இதுபோன்ற சொற்கள் உங்களுக்குப் பரீட்சையமா? சத்தியமாய்த்  தெரியவில்லையா? ஆங்கிலம் தெரிந்தும் இவை புரியவில்லை என்றால் நீங்கள் Boomer தான்! 


Gen Z அல்லது Gen Alpha யாரையாவது பிடித்து இவற்றின் பொருளைக் கேளுங்கள்! 


இதெல்லாம் யார் என்கிறீர்களா? ஏலியன்கள் எல்லாம் இல்லைங்க! உங்கள் வீட்டிலோ உங்களைச் சுற்றியோ இருக்கும் இளைய தலைமுறையினர் தான்! நம் நாட்டின் நிகழ்காலம் தான்! 


பிறந்த வருடங்களை வைத்துத் தலை முறைகளை இப்படி விதவிதமாய் பெயரிட்டிருக்கிறார்கள். 




1928 - 1945  Silent generation

1946 - 1964 Boomers

1965-  1980 Generation X

1981- 1996 Millenials

1997 - 2012 Gen Z

2013 - present Gen Alpha


இதில் Gen Z என்றுஅழைக்கப்படுவோர் தான், தற்போது 14 முதல் 29 வயது வரை உள்ளவர்கள். 


நிலவைக் காட்டி சோறு ஊட்டப்படாத, கைபேசியைக் காட்டி வளர்க்கப்பட்ட தலைமுறை!


பீட்சா பர்கர் போன்றவற்றை தமிழ் உணவு முறையோடு சேர்த்துவிட்டவர்கள்! இணையத்தில் தங்கள் இதயத்தை இழந்துவிட்டவர்கள்!  தொழில்நுட்பமே வாழ்க்கையாய்ப்  பழகிவிட்டவர்கள்! புதிதாய்ப் பணியில் சேர்ந்து இருப்பவர்கள்! அல்லது சில வருட பணி அனுபவம் பெற்றவர்கள்! தமிழ்ச் சமுதாய வழிமுறையின்படி இவர்களில் பலர் திருமண வயதில் இருப்பவர்கள்! 


சரி, இப்போது அவர்களுக்கு என்ன? என்கிறீர்களா! மேலே குறிப்பிடப்பட்ட சொற்கள், இவர்களின் மொழி! வாழ்க்கை முறை! 


இந்த மொழியும் வாழ்வியலும் மூத்த தலைமுறையினர் பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். சிலருக்கு ஆஹா.. இந்தத் தலைமுறையில் பிறக்காமல் போய் விட்டோமே என்று ஆதங்கமாகக் கூட இருக்கலாம். 


அதனால், இந்த  எழுத்து Gen Z குறித்தக் குற்றப் பத்திரிக்கை அல்ல. இவர்களைப் புரிந்துகொண்டு, தலைமுறை இடைவெளியை ஏற்றுக்கொண்டு, சேர்ந்து பயணித்தல் அவசியம் என்பதை இயம்பவே. 


வாழ்க்கைப் பற்றின இவர்களின் பார்வையே வேறு. தங்கள் தனித்துவத்தோடு சுதந்திரமாய் இருக்க விரும்புகிறவர்கள்.  அவர்களுக்குப் பிடித்ததை மட்டுமே செய்கிறார்கள். 


சொந்தங்கள் என்ன பேசுவார்கள், சமுதாயம் என்ன நினைக்கும் என்று பூச்சாண்டி காட்டி இவர்களைப் பணிய வைக்க முடியாது. இந்த நிமிட வாழ்க்கையை வாழ்வதைத் தான் பெரும்பாலானவர்கள் இஷ்டப்படுகிறார்கள்.

செய்யும் தொழிலே தெய்வம்! என்ற தத்துவம் எல்லாம் இவர்களுக்கில்லை.  வேலை இவர்களின் அடையாளமும் இல்லை. பிடிக்காத வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு, என்னுடைய passion! என்று தனக்குப் பிடித்ததைச் செய்ய, சம்பந்தமே இல்லாத வேறு களத்தில் கூட இவர்களில் பலர் குதித்துவிடுகிறார்கள்.   


பெற்றவர்கள், கடன உடன வாங்கி அண்டா குண்டா அடகு வச்சு, ஒரே பிள்ளையைச் செல்லமாய் வளர்த்து, இன்ஜினியரிங் டிகிரி தேடி கொடுத்து, கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆனதும் பிள்ளை வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டதாகப் பெருமூச்சு விட்டு, சொந்த பந்தங்களிடம் முரசு கொட்டி கொண்டாடி தீர்த்தாலும், நிலைமை இதுதான்! 


கார்ப்பரேட் உலகம் இவர்கள் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்குகிறது. இளம் வயதிலேயே நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், பெரிய பதவி வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதற்குக் கடின உழைப்பு வேண்டாமா? தொடர் கற்றல் வேண்டாமா? 


தொழில்நுட்ப அறிவு இல்லை, நிலையாய் ஒரு வேலையில் இருப்பதில்லை, ஒழுங்கினமாய் இருக்கிறார்கள், படிப்படியாய் வளர்ச்சி அடையப் பொறுமை இல்லை, ஆலோசனைகள் என்றால் வேம்பாய் கசக்கிறது. 

மூத்தவர்களை விட தங்களை அதிக மேதாவிகளாக நினைக்கிறார்கள், முகத்தில் அறைந்தார் போல் பேசுகிறார்கள், சகிப்புத்தன்மையின்றி, எளிதில் காயம்பட்டுப்போகும், தொட்டால் சிணுங்கிகளாக இருக்கிறார்கள். 


'Bare minimum Mondays'  எதிர்பார்க்கிறார்கள்.. 


இப்படிக் குற்றப்பட்டியல் நீளுகிறது. இவற்றையெல்லாம் முழுமையாக மறுக்க முடியாவிட்டாலும் இந்த் தலைமுறையின் பக்கமிருந்தும் நாம் சிந்திக்கத் தான்  வேண்டியிருக்கிறது. 


கும்பலோடு கோவிந்தா போடும் தலைமுறை இல்லை இது! அதனாலேயே நிறைய ஸ்டார்ட் அப் ( start up) கம்பெனிகளைப் பார்க்க முடிகிறது. நிறைய வாசித்துப் பகுப்பாய்வு செய்து கடினமாய் உழைக்கும் இளைய தலைமுறையினர் உண்டு.


மூத்த தலைமுறையினர் பணி நிமித்தமாகப் பேருந்திலும் ரயிலிலும் பயணம் செய்தனர். அவர்களின் ஸ்திரமான வேலையை நம்பிக் குடும்பப் பொறுப்புகள் இருந்தன. குடும்ப பாரத்தைச் சுமந்தார்கள். பொதுவாகவே வேலை வாய்ப்புகளும் குறைவாகவே இருந்தன.


Gen Z விமானத்தில் பறக்கிறார்கள்.  ஒரு நிறுவனம் இல்லையானால் மற்றொன்று! என்ற துணிவு அவர்களுக்கு இருக்கிறது. தான் வேலையை விட்டுவிட்டு, வேறு புது முயற்சிகள் செய்தாலும், தன் குடும்பம் ஆதரவாய் நிற்கும் என்ற சூழ்நிலை பெரும்பாலானோருக்கு இருக்கிறது. இன்றைய அபரிமிதமான தொலைத்தொடர்பு வசதிகளால் மாற்று வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள் விரல் நுனியில் கிடைக்கின்றன.


இருப்பினும்,  சமூக வலைதளங்கள் மூலமான அழுத்தங்கள் இவர்களுக்கு மிக அதிகம். மூத்த தலைமுறையினர் தங்கள் சின்ன உலகத்தில் மட்டுமே தங்களை நிலை நிறுத்திக் கொண்டனர். Gen Z, முழு உலகிற்கும், தங்கள் தினப்படி வாழ்க்கையை, வேலையை, காதலை, வெற்றியை, சோகத்தை, தோல்வியை அனைத்தையும் பிரகடனப்படுத்திக் கொள்ள வேண்டிய  தேவையும் அழுத்தமும்  மறைமுகமாக வேணும் இருக்கிறது.


காதல்.. !


இவர்களின் புனிதமானவை பட்டியலில் எல்லாம் அது இல்லை! ஷார்ட்ஸ்(shorts) மீம்ஸ், இமோஜியால் சூழப்பட்ட இவர்களின் உலகில், dating, breakup, patch up, committed, long distance relationship, one night stand, ghosting போன்ற பலவும் இருக்கிறது.


பூமர் தலைமுறை அதில் சிலவற்றையேனும் அறிந்து கொள்ளுதல் நலம் பயக்கும்.




Situationship - நட்புக்கு மேலே ஆனால் காதல் இல்லை

Ghosting - திடீரென காரணம் கூறாமல் எல்லா தொடர்புகளையும் துண்டித்துக் கொள்வது

Homiehopping - ஒரே நட்பு வட்டத்தில் பலரையும் டேட்டிங் செய்வது

Benching - ஒருவரை பிடியில் வைத்துக் கொண்டே வேறு சிலருக்கு ரூட்டு விடுவது

Hard launch - சமூக வலைத்தளத்தில் வெளிப்படையாய் காதலை அறிவித்து விடுவது

Soft launch - சமூக வலைத்தளத்தில் காதலரின் முகத்தை மறைத்துப் பதிவிடுவது

One night stand - ஒரே ஒரு இரவு கூடலுக்குப் பின் தொடர்பைத் துண்டித்துக் கொள்வது


காதல், சரி.. கல்யாணம்.. என்கிறீர்களா? அந்தக் கஷ்டமெல்லாம் யாருக்கு வேணும்?என்பது தான் பெரும்பாலான  Gen Z மனநிலை. அதிலும் குறிப்பாய், நகரத்தில் வாழும் பெண்கள் திருமண உறவில் ஆர்வம் காட்டுவதில்லை.

 பிடித்தால் திருமணம் செய்து கொள்வேன், தோன்றினால் குழந்தை பெற்றுக்கொள்வேன், இல்லையானால்..


இல்லையானால்? 


நாய், பூனை, கிளி ஏதாவது வளர்த்து pet parent ஆக இருப்பேன்! அடங்கப்பா. .எல்லா காலத்திலும் ஆசைக்காக அல்லது பொழுதுபோக்கிற்காக செல்லப்பிராணி வளர்த்தார்கள், இந்தத் தலைமுறை குழந்தைகளுக்குப் பதிலாக  வளர்க்கிறேன் என்கிறது. 


மணம் முடித்துக் கொண்டாலும், ஆணும் பெண்ணும் எல்லாவற்றிலும் சமம் தான். அப்ப சோத்துக்கு பிரச்சினை வந்தா.. அன்னமிட ஸ்வீகீயே (swiggy) சரணம். 


எதிர்காலத்தில், கல்யாணங்கள் இல்லாமற் போகுமா, திருமணங்கள் காலாவதியாகுமா, குடும்பங்கள் காணாமல் போகுமா? தெரியவில்லை! ஆனால் குறைந்துவிடும் என்பது மட்டும் அப்பட்டமாய்த் தெரிகிறது. 


எது எப்படியோ.. இவர்கள் உருவாக்கும் உலகம், புதுமையானதாய் முற்றிலும் வேறாக இருக்கும் என்பது தான் நிதர்சனம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை

news

இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?

news

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்

news

Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!

news

கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?

news

சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!

news

Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!

news

இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is

news

சிந்தனைச் சிதறல்.. இருக்கும் வரை தாங்கிப் பிடிப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்