சென்னை: நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக மாறி வருகிறது. ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து தனித்து மட்டுமே போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி பாமக, மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகளுக்கே பெரும் சவால் விடும், அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவெடுத்து நிற்கிறது.
தமிழ்நாட்டு அரசியலில் நாம் தமிழர் கட்சி ஒரு தனித்துவமான சக்தியாக வளர்ந்து வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் உணர்ச்சிப்பூர்வமான பேச்சுகள், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தனித்தமிழ் தேசிய அரசியலை முன்னிறுத்துவது, மற்றும் தொடர்ச்சியான தேர்தல் களப்பணிகள் ஆகியவை அக்கட்சியின் பலமாகப் பார்க்கப்படுகின்றன.
தொடங்கியது முதல் தனித்து மட்டுமே போட்டி. ஒரு தேர்தலையும் விடுவதில்லை. எல்லாத் தேர்தல்களிலும் போட்டி. தோல்விகள் மட்டுமே அடையாளம்.. ஆனாலும் தளர்ச்சி அடையாமல், தேர்ச்சி பற்றிக் கவலையும் படாமல் மக்களுடன் களம் நிற்பது மட்டுமே எங்களது வேலை என்பதையே இலக்காக வைத்து தனது தம்பிகளை தட்டிக் கொடுத்து தொடர்ந்து களத்தில் நிற்க வைத்து வருகிறார் சீமான்.
கட்சி தொடங்கியது முதலே தனித்துவமான கொள்கையுன், அந்த கொள்கைப் பிடிப்புடன் வலம் வரும் நாம் தமிழர் கட்சிக்கு மக்களின் ஆதரவும் படிப்படியாக கூடிக் கொண்டே போகிறது. ஒருமுறை வாங்கிய வாக்குகளை விட அடுத்த தேர்தலில் கூடுதல் வாக்குகளை வாங்கிக் கொண்டே வருகிறது நாம் தமிழர் கட்சி என்பது குறிப்பிடத்தக்கதுய
நாம் தமிழர் கட்சி 2010 இல் தொடங்கப்பட்டு, படிப்படியாக தனது வாக்கு சதவீதத்தை உயர்த்தி வருகிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில் 1.07% வாக்குகள் பெற்று, ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது நாம் தமிழர் கட்சி. யாருமே வெற்றி பெறவில்லை.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் 3.89% வாக்குகள் பெற்று கணிசமான வளர்ச்சியைப் பெற்றது நாம் தமிழர் கட்சி. 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.72% வாக்குகள் பெற்று, மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்கான தகுதியை எட்டியது. பல தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. திமுக, அதிமுகவுக்கு கடும் சவாலாக மாறியது இந்தத் தேர்தலில்தான்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் இக்கட்சிக்கு மிகப் பெரிய திருப்புமுனை தேர்தலாகும். அதாவது சுமார் 8.19% வாக்குகள் பெற்று, தமிழ்நாட்டில் தனது வாக்கு வங்கியை மேலும் உறுதிப்படுத்தி அசத்தியது நாம் தமிழர் கட்சி. சில தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததோடு, சில தொகுதிகளில் சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று கவனத்தை ஈர்த்தது. அதிமுகவுக்கு கடும் டஃப் கொடுத்ததையும் பார்க்க முடிந்தது. இந்தத் தேர்தலுக்குப் பிறகுதான் நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக உருவெடுத்து அசத்தியது.
இந்த தொடர்ச்சியான வளர்ச்சி, நாம் தமிழர் கட்சிக்கு கணிசமான வாக்காளர் தளத்தை உருவாக்கி இருப்பதைக் காட்டுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியிலும், சமூக வலைத்தளங்களிலும் சீமானின் கருத்துகளுக்கு ஆதரவு பெருகி வருவதையே இது நிரூபித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் பால் இளைஞர்கள் ஈர்க்கப்பட என்ன காரணம்?
திமுக மற்றும் அதிமுகவுக்கு ஒரு வலுவான மாற்று அரசியலை முன்வைப்பது, மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களை ஈர்க்கிறது. எந்தக் கூட்டணியிலும் சேராமல் தனித்துப் போட்டியிடும் கொள்கை, "துணிச்சலான கட்சி" என்ற பிம்பத்தை உருவாக்குகிறது.
சீமான் ஒரு சிறந்த பேச்சாளர். அவரது அடுக்குமொழிப் பேச்சும், சமூகப் பிரச்சினைகளைத் தனது பாணியில் அணுகும் விதமும் பலரைக் கவர்ந்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவரது பேச்சுகளும், கொள்கைகளும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவரது பேச்சுக்களை வைத்து ரீல்ஸ் போடும் அளவுக்கு அவை தாக்கத்தைக் கொடுப்பதாக உள்ளன.
யூடியூப் மற்றும் பிற சமூக வலைத்தளங்கள் மூலம் தனது கருத்துக்களை மக்களை எளிதில் சென்றடையச் செய்கிறார். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளில் சிறந்த ஐடி விங்கை வைத்துள்ள கட்சியாகவும் நாம் தமிழர் கட்சி உள்ளது கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
ஆண்-பெண் வேட்பாளர்களுக்கு சம வாய்ப்பு அளிப்பது போன்ற சீர்திருத்தங்கள், முற்போக்கு சிந்தனை கொண்டோரை கவர்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் 50 சதவீத பெண் வேட்பாளர்கள், 50 சதவீத ஆண் வேட்பாளர்கள் என்ற பார்முலாவை சீமான் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார். வேறு எந்தக் கட்சியிலும் இந்த முறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சவால்கள் மற்றும் பலவீனங்கள்:
வாக்கு சதவீதம் அதிகரித்து வந்தாலும், ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாதது ஒரு பெரிய சவாலாக உள்ளது. இது வாக்காளர்கள் மத்தியில் "வெற்றி பெறாத கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?" என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. அதேசமயம், வாக்குகளைப் பிரிக்கும் மிகப் பெரிய சக்தியாக நாம் தமிழர் கட்சி வருவதால் வரும் தேர்தலில் பெரும் தாக்கத்தை இது ஏற்படுத்தக் கூடும்.
ஒரு கட்சி வெற்றி பெற, வெறும் வாக்கு சதவீதம் மட்டும் போதாது. வலுவான பூத் கமிட்டிகள், களப்பணியாளர்கள், நிதியாதாரம் போன்ற கட்டமைப்பு வசதிகள் தேவை. நாம் தமிழர் கட்சிக்கு இந்த அம்சங்களில் இன்னும் பலம் தேவை.
தமிழ்நாட்டில் கூட்டணி அரசியல் பிரதானமாக உள்ளது. திமுக மற்றும் அதிமுக வலுவான கூட்டணிகளுடன் களமிறங்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தனித்துப் போட்டி என்பது பெரும் சவாலாக இருக்கும். ஒரு வேளை அதிமுக அல்லது விஜய் கட்சி போன்றவற்றுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் பல தொகுதிகளின் வெற்றி தோல்வியை இந்த கூட்டணி நிர்ணயிக்க முடியும். ஆனால் அதேசமயம், நாம் தமிழர் கட்சியின் சொந்த செல்வாக்கு சரியவும் வாய்ப்பு அதிகம்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் 'கரும்பு விவசாயி' சின்னம் கிடைக்காதது அக்கட்சிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. 2026 இல் மீண்டும் கரும்பு விவசாயி சின்னம் கிடைத்து விட்டது. இது நிரந்தர சின்னமாகியிருப்பதால் கட்சிக்கு புது உத்வேகம் கிடைத்துள்ளது.
விமர்சனம் என்று பார்த்தால், சீமானின் சில கருத்துகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகின்றன. இது சில தரப்பு வாக்காளர்களை அன்னியப்படுத்தலாம். அதேசமயம், தனது கருத்துக்களில் அவர் பிடிவாதமாகவும், நிலையாகவும் இருக்கிறார். இது கூடுதல் வாக்காளர்களை அவர் பக்கம் திருப்பவும் உதவும்.
நடிகர் விஜய் தனது 'தமிழக வெற்றி கழகம்' கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், மாற்று வாக்காளர்கள் மத்தியில் மற்றொரு போட்டி உருவாகியுள்ளது. இது நாம் தமிழர் கட்சியின் வாக்குகளைப் பிரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை, எனது ஆதரவாளர்கள் வேறு, எனது களம் வேறு என்று சீமான் நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.
2026 தேர்தல் சாத்தியக்கூறுகள்:
2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இப்போது கணிக்க முடியாததாக உள்ளது. காரணம் விஜய் களத்தில் நுழைந்திருப்பதால் போட்டிகள் வேறு வேறு அவதாரங்களில் மாற ஆரம்பித்துள்ளன. அதேசமயம், சீமானின் வாக்கு வங்கி மேலும் ஸ்திரப்படும் அல்லது கூடுதலாகும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக 10 சதவீத அளவுக்கு அவர் வாக்குகளைப் பெறக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் 10% அல்லது அதற்கு மேலும் உயரவும் வாய்ப்புள்ளது.
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி, ஆளும் திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் வாக்கு வங்கியில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைப் பிரிக்கக்கூடும். இது சில தொகுதிகளில் திமுக அல்லது அதிமுகவின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கலாம். பெரும்பாலும் திமுகவுக்கே இது பாதகத்தை ஏற்படுத்தலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
கடந்த முறை 3வது இடத்தை சில தொகுதிகளில் பிடித்த நாம் தமிழர் கட்சி, வருகிற தேர்தலில் 2 வது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. அதேசமயம், வெற்றி என்பதை இப்போதைக்கு உறுதியாக கூற முடியாத நிலையே உள்ளது. காரணம், திமுக, அதிமுகவைத் தாண்டிய சக்தியாக அது இன்னும் விஸ்வரூபம் பெறாமல் இருப்பதே. ஒரு வேளை கூட்டணி வைத்தால் அதற்கு வெற்றி வசப்படலாம்.
நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் ஒரு மாற்று சக்தியாக வளர்ந்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை. சீமானின் தொடர்ச்சியான அரசியல் பயணம், அவரது உணர்ச்சிப்பூர்வமான கருத்துக்கள், மற்றும் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் ஆதரவு ஆகியவை அக்கட்சியின் பலம். ஆனால், ஒரு சில தொகுதிகளிலாவது வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைவது என்பதே அவர்களுக்கான அடுத்த பெரிய இலக்காக இருக்கும். 2026 சட்டமன்றத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி ஒரு தனிப்பெரும் சக்தியாக உருவெடுக்கவில்லை என்றாலும், அதன் வளர்ச்சி தமிழக அரசியலில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்.. விஜய் வழி தனி வழி.. தெளிவா சொல்லிட்டாரு.. 4 முனைப் போட்டிதான்!
அரசியல் ஆலோசகர் பிரஷாத் கிஷோர் விலகலுக்கு.. விஜய்யின் அதிரடி அறிவிப்பே காரணமா?
கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான காலியிடங்களை நிரப்ப தடை போடுவது ஏன்? டாக்டர் அன்புமணி
தேர்தலுக்குத் தேர்தல்.. படிப்படியாக முன்னேறும் சீமான்.. 2026 தேர்தலில் யாருக்கெல்லாம் ஆப்பு?
என்னைப் பற்றி பேசுவதாக நினைத்துக்கொண்டு தன்னைப் பற்றி பேசுகிறார் முதலமைச்சர்: எடப்பாடி பழனிச்சாமி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. குஷ்பு, கெளதமி.. எந்தெந்த நடிகைகள் போட்டியிட சீட் கிடைக்கும்?
முருகனின் 2ம் படை வீடான.. திருச்செந்தூரில் ஜூலை 7 கும்பாபிஷேகம்.. போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பாகிஸ்தானுக்கு பை பை சொல்கிறது மைக்ரோசாப்ட்.. ஊழியர்களைக் குறைத்து வந்த நிலையில் மூடு விழா!
{{comments.comment}}