500 ரூபாய் பென்சனுக்காக 90 வயது மாமியாரை முதுகில் சுமந்து சென்ற மருமகள்!

May 25, 2026,05:01 PM IST

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில் மனதை உருக்கும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஜங்கல்புரா என்ற கிராமத்தைச் சேர்ந்த சுக்மனியா என்ற பெண், தனது 90 வயது மாமியாரை முதுகில் சுமந்து கொண்டு பல கிலோமீட்டர் தூரம் வெயிலில் நடந்து சென்றுள்ளார்.


அரசாங்கம் தரும் 500 ரூபாய் மாதாந்திர பென்சன் பணத்தைப் பெறுவதற்காகவே அவர் இந்த கடுமையான துயரத்தை சந்தித்துள்ளார். கடந்த நான்கு மாதங்களாக அந்த மூதாட்டிக்கு பென்சன் பணம் வரவில்லை. இதற்குக் காரணம், வங்கியின் 'கே.ஒய்.சி' (வாடிக்கையாளர் விவரங்கள்) சரிபார்ப்பு முறை முழுமையடையாமல் இருந்ததே ஆகும்.


இதற்கு முன்பு, வங்கி ஊழியர் ஒருவர் நேராக இவர்களது வீட்டிற்கே வந்து பென்சன் பணத்தைக் கொடுத்துச் சென்றுள்ளார். ஆனால், ஆவணங்கள் சரியாக இல்லாததால் கடந்த நான்கு மாதங்களாக பணம் நிறுத்தப்பட்டது. இதனால் வேறு வழியின்றி, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுக்மனியா தன் மாமியாரைத் தூக்கிக் கொண்டு மென்பாட் நகரில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா கிளைக்கு நடந்து சென்றுள்ளார்.




இவர்கள் சாலையில் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து அரசு அதிகாரி குஷ்பூ சாஸ்திரி கூறுகையில், ஆவணங்கள் சரியாக இல்லாததால் தான் பணம் நிறுத்தப்பட்டது. தற்போது வங்கிக்கு வந்தவுடன் அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, நிலுவையில் இருந்த 2,000 ரூபாய் பணம் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும், அடுத்த மாதம் முதல் அவர்களின் வீட்டிற்கே சென்று பென்சன் பணம் வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.


ஏழை எளிய மக்கள் தங்களுக்குச் சேர வேண்டிய சிறிய தொகையைப் பெறுவதற்குக் கூட எவ்வளவு கஷ்டப்பட வேண்டியுள்ளது என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.


சமீபத்தில் இப்படித்தான் ஒடிஷா மாநிலத்தில் தனது சகோதரியின் பணத்தை வங்கி அதிகாரிகள் தர மறுத்ததால் இறந்து புதைக்கப்பட்ட தனது சகோதரியின் எலும்புக் கூட்டைத் தோண்டி எடுத்து தோளில் போட்டுக் கொண்டு வங்கிக்கு வந்தார் ஒரு முதியவர் என்பது நினைவிருக்கலாம்.


வங்கிகள் தங்களது விதிமுறைகளில் காலத்திற்கேற்ற வகையில் பெருமளவிலான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டிய அவசியத்தை இவை உணர்த்துகின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்