மே 23 ஆமைகள் தினம்.. மாணவர்களுக்கான நீதி கதை.. "கடைசியாக வந்த கோமதி"

May 23, 2026,01:43 PM IST

- முனைவர் கோ. லதா


அது ஒரு அழகான கிராமத்துப் பள்ளி. வருடத்தின் கடைசி விளையாட்டுப் போட்டி அறிவிக்கப்பட்டது. "காட்டைச் சுற்றி ஓடும் பந்தயம்" - யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு தங்கப் பதக்கம்.


முயல் முதல், மான் இரண்டாம், நரி மூன்றாம் பரிசு வாங்க தயாரானார்கள். ஆனால் எல்லாரும் கேலி செய்த ஒரே ஒருத்தி கோமதி ஆமை. "நீயா ஓடப்போகிறாய்? ஊர்ந்து வருவதற்குள் சூரியன் அஸ்தமித்துவிடும்" என்று சிரித்தார்கள்.


கோமதிக்கு அழுகை வந்தது. ஆனால் அவள் ஆசிரியையிடம் சென்றாள். ஆசிரியை சொன்னார்: "கோமதி, நீ மெதுவாகத்தான் போகிறாய். ஆனால் நின்று விடாதே. விழுந்தாலும் எழுந்து நட. பந்தயம் வேகத்தில் அல்ல, மன உறுதியில் இருக்கிறது."


பந்தயம் தொடங்கியது. முயல் புயல் போல ஓடி, பாதியில் ஆற்றங்கரையில் உள்ள நிழலைப் பார்து "கொஞ்சம் தூங்கி விட்டு பிறகு ஓடலாம்" என்று படுத்தது. மான் துள்ளிக் குதித்து ஓடியது, ஆனால் வழியில் அழகான பூக்களைப் பறிக்க நின்றது. நரி குறுக்கு வழியில் ஓடி நேரத்தை வீணாக்கியது.


இதற்கிடையில் கோமதி மெதுவாக, ஆனால் நிற்காமல் நடந்தாள். கால் வலித்தது, ஓடு கனத்தது. மழை வந்தது, வெயில் அடித்தது. ஆனால் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தாள். வழியில் ஒரு குஞ்சு குருவி மரத்திலிருந்து விழுந்து கிடந்தது. எல்லாரும் ஓடினார்கள், கோமதி மட்டும் நின்று அதை பத்திரமாக கூட்டில் வைத்துவிட்டு சென்றாள்.




மாலை ஆனது. எல்லாரும் ஆச்சரியப்பட்டு பார்தார்கள். கடைசியாக, மூச்சு வாங்க, ஆனால் புன்னகையுடன் கோமதி வெற்றிக் கோட்டை தொட்டாள். முயல் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தது.


பள்ளி முதல்வர் கோமதிக்கு தங்கப் பதக்கம் அணிவித்து சொன்னார்: "மாணவர்களே, வாழ்கை 100 மீட்டர் ஓட்டம் அல்ல. அது மாரத்தான் ஓட்டம். வேகம் முக்கியமல்ல, விடாமுயற்சி, நேர்மை, இரக்கம் தான் முக்கியம்."


அன்று மே 23. உலக ஆமைகள் தினம். அன்றிலிருந்து அந்த பள்ளியில் கோமதியின் படம் மாட்டப்பட்டது. கீழே ஒரு வாசகம்: 


மெதுவாகப் போனாலும் முறைப்படி போ. நில், ஆனால் நிலை குலையாதே.


தோற்றாலும் பரவாயில்லை, முயற்சியை நிறுத்தாதே. அவசரம் அழிவைத் தரும், பொறுமை வெற்றியைத் தரும். உன் இலக்கை விட, உன்னைச் சுற்றி உள்ளவர்களின் வலி முக்கியம்.


வேத வசனம் ஒன்று உள்ளது.. ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள், ஆகிலும் ஒருவனே பந்தயத்தைப் பெறுவான் என்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்" - 1 கொரிந்தியர் 9:24


மாணவச் செல்வங்களே, நீங்கள் படிப்பிலோ, விளையாட்டிலோ, வாழ்கையிலோ மெதுவாக இருக்கலாம். பரவாயில்லை. ஆனால் ஒருபோதும் நிறுத்திவிடாதீர்கள். நீங்களும் ஒரு கோமதி தான் 


மே 23 ஆமைகள் தின வாழ்த்துக்கள்!


--


மே மாதம் இருபத்து மூன்றாம் நாள்,  

மேலாம் தினம் மூன்றின் நினைவு நாள்.  

தாய்மையை போற்றும் தயவின் நாள் இது,  

தரணியில் வாழும் தாயரை காப்போம்.


மகப்பேறு புரையின் மயக்கம் தீர,  

மங்கையர் நலத்தை மகத்தாய் காப்போம்.  

கருணை கொண்டு கரம் நீட்டி நிற்போம்,  

இருண்ட வாழ்வை ஒளியாய் மாற்றுவோம்.


ஆமைகள் தினமிது அகிலம் போற்றும்,  

ஆழ்கடல் வாழ்வை அன்பாய் காப்போம்.  

பொறுமையின் வடிவாய் பூமியில் வாழும்,  

புனித ஜீவனை போற்றி வணங்குவோம்.


மெதுவாய் சென்றாலும் முடிவை தொடுவாய்,  

முயற்சி தன்னால் முன்னேறி வாழ்வாய்.  

இயற்கையை நேசி இன்பம் பெருகும்,  

பயிரை பாதுகாப்பாய் பாரினில் வாழ்வாய்.


கோதுமை தினமிது குலத்தை காக்கும்,  

குன்றா உணவை கொடுக்கும் நாள் இது.  

விவசாயி வியர்வை விலையாய் மாறும்,  

அவனியை வாழவைக்கும் அன்னமாய் மாறும்.


பசியை போக்கிடும் பயிரை வணங்கு,  

பஞ்சம் வராமல் பாதுகாத்து நிற்கு.  

மூன்று தினமும் மாண்பாய் நினைந்து,  

மேலாம் வாழ்வை மேவிட செய்வோம்.


மனிதம் வளர்கும் மே திங்கள் நாள்,  

மகிழ்வாய் கொண்டாடி மனதை உயர்த்துவோம்.


(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா,  கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர்,  சென்னை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்