முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை...பேசவும் தடையில்லை

Jul 07, 2026,12:04 PM IST

புதுடில்லி : முதல்வர் விஜய் கரூர் செல்வதற்கோ, கரூர் சம்பவம் குறித்து பேசுவதற்கோ எந்த தடையும் விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. திமுக தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ததுடன், வாபஸ் பெறவும் அவகாசம் அளித்துள்ள சுப்ரீம் கோர்ட், அமைச்சர் உள்ளிட்டோரும் கரூர் சம்பவம் குறித்து பேசுவதற்கு எந்த தடையும் கிடையாது என தெரிவித்துள்ளது.


கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தவெக கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகியும், அமைச்சருமான ஆதவ் அர்ஜூனா, "கரூர் சம்பவத்தில் காவல் துறையின் துணையுடன் திமுக தான் மக்களை கொன்று குவித்தது. கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தார். கரூர் விவகாரத்தில் எங்களுக்கும் திமுக.,வுக்கும் தனிப்பட்ட கணக்கு உள்ளது. அதை முடிக்காமல் விட மாட்டோம்" என்று பேசினார். 


வழக்கின் பின்னணி: 




கடந்த ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கரூர் நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ (CBI) விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பிறர் பொதுவெளியில் கருத்துகள் தெரிவிப்பதைக் கட்டுப்படுத்தக் கோரி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (DMK) பொதுச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.


நீதிமன்றத்தின் கேள்வி: 


விடுமுறை கால அமர்வு நீதிபதிகளான கே.வி. விஸ்வநாதன் மற்றும் அலோக் ஆராதே ஆகியோர் இந்த மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். "முதலமைச்சரின் கூட்டங்களையும், அவரது பயணத் திட்டங்களையும் உச்ச நீதிமன்றம் தான் ஒழுங்குபடுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா?" என்று திமுக தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், வழக்கில் முதல் குற்றவாளியாக முதல்வர் விஜய் இருப்பதாகக் குறிப்பிட்டார். அதைத் திருத்திய நீதிபதி விஸ்வநாதன், சிபிஐ பதிவு செய்துள்ள எஃப்.ஐ.ஆர் (FIR) நகலில் முதல்வர் விஜய் குற்றவாளியாகச் சேர்க்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், "பேச்சுரிமைக்கு நாங்கள் எவ்வாறு தடை விதிக்க முடியும்? அரசியல் எதிர்ப்பை அரசியலாகவே எதிர்கொள்ளுங்கள். நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம். உங்கள் சண்டையை கோர்ட்டுக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாதம் என்னவோ அதை முறையாக மனுவாக தயாரித்து, தாக்கல் செய்து, உரிய நிவாரணத்தை பெற்றுக் கொள்ளுங்கள்" என்றும் அறிவுறுத்தினர்.


நிவாரண உதவி குறித்து: 


ஜூலை 10 அன்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து முதல்வர் விஜய் அரசு தரப்பில் தலா ரூ. 10 லட்சம் நிவாரண உதவி மற்றும் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்க திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பு மற்றும் அரசு நலத்திட்டங்கள் சாட்சிகளைப் பாதிக்கலாம் என திமுக தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவது எவ்வாறு சிபிஐ விசாரணையைப் பாதிக்கும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.


உச்ச நீதிமன்ற அமர்வு இந்த மனுவை நிராகரிக்க முற்பட்டதால், திமுக தரப்பு வழக்கறிஞர் இந்த மனுவை வாபஸ் (திரும்பப் பெற) பெற்றுக் கொள்வதாகக் கூறினார். சட்டப்படி கிடைக்கக்கூடிய பிற வழிகளை நாட மனுதாரருக்கு அனுமதி வழங்கி, இந்த மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டதாகக் கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராகத் தனியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவும் திமுக தரப்பு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்