"கத்துக்குட்டி அண்ணாமலை.. கட்டுச்சோறு பெருச்சாளி".. கொந்தளித்த ஜெயக்குமார்!

Jun 13, 2023,10:26 AM IST
சென்னை: ‘முதல்வர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்’ என அண்ணாமலை கூறியதற்கு அதிமுக.,வின் ஜெயக்குமார் கடுமையான வார்த்தைகளால் அண்ணாமலையை கண்டித்துள்ளார். இதனால் மீண்டும் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அதிமுக தலைமைக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே அவ்வப்போது மோதல் வெடித்து வருகிறது. தமிழ்நாடு பாஜக.,வில் இருந்து சில நிர்வாகிகள் விலகி, கூட்டணி கட்சியான அதிமுக பக்கம் சேர்ந்தனர். இதனால் கடுப்பான அண்ணாமலை, அதிமுக.,வை வம்புக்கு இழுத்தார். ‘‘நான் ஜெயலலிதா எடுத்த மாதிரியான முடிவுகளை எடுப்பேன். என் தாய், ஜெயலலிதா அம்மையாரைவிட 100 மடங்கு பவர்புல், என் மனைவியோ ஜெயலலிதாவை விட 1000 மடங்கு பவர்புல்.’’ எனப் பேசியிருந்தார்.



ஜெயலலிதா உடன் தன்னை ஒப்பிட்டு பேசிய அண்ணாமலைக்கு அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல், அதிமுக கூட்டணியில் இருந்து பா.ஜ., விலகி போட்டியிட்டால்தான் கட்சி வளரும். தேர்தலில் அதிமுக., உடன் கூட்டணி அமைத்தால் நான் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும் தன் கட்சி நிர்வாகிகளிடம் சூளுரைத்தார் அண்ணாமலை. இதனால், அதிமுக - பா.ஜ., இடையிலான பிரச்னை வெட்ட வெளிச்சமானது. இதன் வெளிபாடாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையை பற்றிய கேள்விகளுக்கு ஆவேசமாகவே பதிலளித்தார்.

அதன்பின்னர், டில்லி சென்ற பழனிசாமி அண்ட் கோ, அமித்ஷாவை சந்தித்தது. அப்போது, அண்ணாமலையும் உடன் இருந்தார். இச்சந்திப்பில் கூட்டணி ‛பஞ்சாயத்து’ தீர்த்து வைக்கப்பட்டது. சந்திப்பிற்கு பின்னர் இருவரும் கூட்டணி உறுதி என்ற நிலைபாடை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், அண்ணாமலை - அதிமுக மோதல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. 



ஜெயலலிதா - ஊழல்

தனியார் செய்தி நிறுவனத்திற்கு அண்ணாமலை அளித்த பேட்டியின்போது, செய்தியாளர், ‛ஊழலை பொறுத்தவரையில், கடந்த 1991 முதல் 1996 வரையிலான ஆட்சி காலம் மோசமானவை என்பதை ஒப்பு கொள்வீர்களா?’ என கேள்வி எழுப்பினார். அதற்கு அண்ணாமலை, ‛தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதல்வர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது’ என பதிலளித்தார். 

அதாவது, 1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியை அண்ணாமலை ஊழல் மிகுந்ததாக குறிப்பிட்டது மீண்டும் கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது. அண்ணாமலையின் இந்த பதிலால் ஆடிப்போன அதிமுக தரப்பு தன் எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளது. 



இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்ளிடம் கூறியதாவது: மாநில தலைவருக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. பிரதான எதிரியான திமுக.,வை விமர்சிக்காமல் தோழமை கட்சியை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அண்ணாமலையின் செயல்பாடுகளை பார்க்கும்போது, பாஜ., – அதிமுக தொடரக்கூடாது, மோடி பிரதமராக ஆக கூடாது என்ற நிலையில் இருக்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது. 

கர்நாடகாவில் இவர் தேர்தல் பொறுப்பாளராக இருந்ததால் அங்கு அக்கட்சி ‘அம்போ’ ஆனது. அங்கு பா.ஜ.க., ஆட்சி 40 சதவீத கமிஷன் வாங்கியதாக புகார் எழுந்தது. ஊழலை பற்றி பேசும் அண்ணாமலை, கர்நாடகாவில் அதைப்பற்றி பேச வேண்டியது தானே. எங்கள் தலைமையிலான கூட்டணியில் இருக்கும்போது தான் பா.ஜ.க.,விற்கு தமிழ்நாட்டில் அடையாளம் இருக்கிறது. கூட்டணியை முறிக்கும் செயலை அண்ணாமலை செய்கிறார். இதனை அமித்ஷாவும், நட்டாவும் கண்டிக்க வேண்டும். அண்ணாமலை மெச்சூரிட்டி இல்லாமல் தன்னை முன்னிலைப்படுத்தும் நோக்கில் இப்படி செயல்படுகிறார்.



அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை

அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி. கட்டுச்சோறில் இருக்கும் பெருச்சாலி போல் அண்ணாமலை செயல்படுகிறார். அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். இனியும் தொடர்ந்தால் அவர் வாங்கிக்கட்டிக்கொள்வார். இத்துடன் அவர் பேசுவதை நிறுத்த வேண்டும். அண்ணாமலை தனிக்காட்டு ராஜா மாதிரி நடக்கிறார். இவ்வாறு கடும் வார்த்தைகளால் தன் எதிர்ப்பை பதிவு செய்தார் ஜெயக்குமார்.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவான நாட்களே இருக்கும் நிலையில், இரு கட்சியும் இப்படி மாறி மாறி மோதிக்கொள்வது, தேர்தல் வரை கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக.,வை எதிர்க்க இரு கட்சிகளும் கூட்டணியாக இருப்பதே நல்லது; அதனால் பா.ஜ.க தலைமை தலையிட்டு மீண்டும் பிரச்னையை முடித்து வைக்கும் எனவும் சிலர் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர். எது எப்படியோ இது திமுக.,வுக்கு சாதகமாகவே அமையும் என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

தாய்!!!

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்