சென்னை: கோயம்புத்தூர் சரக டிஐஜி விஜயக்குமார் தற்கொலை செய்து கொண்டது வியப்பளிக்கிறது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
கோயம்புத்தூர் சரக டிஐஜியாக இருந்து வந்தவர் விஜயக்குமார். கடந்த ஜனவரி மாதம்தான் இந்தப் பொறுப்புக்கு அவர் வந்திருந்தார். சிறப்பாக செயல்பட்டு வந்த அவர் இன்று காலை தனது முகாம் அலுவலகம் வந்தார். அங்கு அறையைப் பூட்டிக் கொண்டு துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர வைத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
இந்தநிலையில், விஜயக்குமார் மரணம் குறித்து தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கோவை சரக டி ஐ ஜி விஜயகுமார் அவர்கள் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மன அழுத்தத்தின் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படுகிற நிலையில், உயர் காவல் துறை அதிகாரி, ஐ பி எஸ் பயின்றவர், மன உறுதி படைத்தவர் திடீரென விபரீத முடிவுக்கு சென்றுள்ளது வியப்பளிக்கிறது.
தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வல்ல என்றாலும், அலுவல் ரீதியாக அவர் மன அழுத்தத்திற்கு ஆளானாரா என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டும். தமிழக காவல் துறை அல்லாத சி பி ஐ போன்ற வேறு ஒரு அமைப்பின் மூலம் விசாரணை நடத்த தமிழக அரசு முன் வரவேண்டும்.
அப்படி செய்வதனால் மட்டுமே தவறுகள் நடந்திருந்தால் களையப்பட வாய்ப்புள்ளது என்பதோடு அலுவல் ரிதியாக அழுத்தங்கள் இல்லையென்பது தெளிவாகும் பட்சத்தில் காவல்துறை மீதான சிறு களங்கம் கூட துடைத்தெறியப்படும். இந்த கோரிக்கையை அரசியலாக பார்க்காமல் அரசின் நிர்வாகத்திற்கான ஆலோசனையாக கருதி செயல்படுத்துவது முதல்வருக்கு சிறப்பை தரும் என்று அவர் கூறியுள்ளார்.