நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா அருகே நடந்த கோரமான விபத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில், 25 பயணிகள் உயிரோடு கருகி பலியானார்கள்.
இன்று அதிகாலையில் இந்த சம்பவம் சம்ருத்தி - மஹாமார்க் நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. பஸ் ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. தொடர்ந்து பஸ்சில் தீப்பிடித்துக் கொண்டதால், தீயில் சிக்கி 25 பயணிகள் பரிதாபமாக கருகிப் போனார்கள். இறந்தவர்களில் 3 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. எட்டு பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.
இந்தப் பேருந்தில் 33 பயணிகள் இருந்துள்ளனர். புனேவுக்கு இந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை புல்தானா என்ற இடம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென விளக்குக் கம்பம் ஒன்றில் மோதி சாலையோரம் கவிழ்ந்தது. டயர் வெடித்ததால் பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர விளக்குக் கம்பத்தில் மோதியதாக கூறப்படுகிறது. அதேவேகத்தில் பஸ் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தீ வேகமாக பஸ்ஸுக்குள் பரவியதால் உள்ளே இருந்தவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர்.
இந்த விபத்தில் பஸ் டிரைவர் உள்பட 8 பேர் காயத்துடன் உயிர் தப்பினர். அவர்களை புல்தானாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளும் காணும் பணி நடந்து வருகிறது. அதிகாலையில் நடந்து விட்ட இந்த கோரமான விபத்து மற்றும் உயிரிழப்பால் மகாராஷ்டிராவில் சோகம் நிலவுகிறது. சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கலும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ள மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீட்டை அறிவித்துள்ளார்.
{{comments.comment}}