கனவு மெய்ப்பட!

Jan 17, 2026,10:21 AM IST

- சே.ஷீபா


எங்கு பார்த்தாலும் மாணவர்கள் கூட்டம் அலைமோத, அனல் பறக்கும் வெயிலிலும் அத்தனைப் பேர் முகத்திலும் அப்படி ஒரு உற்சாகம். தென்மாவட்டத்தின் மையப்பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாவட்ட அளவிலான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஏறத்தாழ ஊரின் எல்லா பள்ளிகளிலுள்ள மாணவர்களும் அங்கு தான் குவிந்திருந்தனர். ஒருபுறம் ஒலிபெருக்கியில் வெற்றி பெற்ற பள்ளியின் பெயர்கள் அறிவிக்கப்பட்டதும், மறுபுறம் மாணவர்களின் உற்சாக கொண்டாட்டம் ஆரம்பமானது.


"நம்ம ஸ்கூல் நிறைய போட்டிகள்ல ஜெயிச்சிருக்கோம்ல மலர்" என்று கண்ணன் பெருமையாக மலரிடம் சொன்னான்.


 "ஆமா கண்ணா கலை நிகழ்ச்சிகள் மட்டுமில்லாம நிறைய விளையாட்டுப் போட்டிகளையும் நம்ம ஸ்கூல் பசங்க தான் முதல்ல வந்திருக்காங்க" என்று மலரும் பெருமைப் பேசினாள்.    


போட்டிகள் அனைத்தும் முடியும் தருவாயில் இருந்தன. அங்கு ரவி ஓடி வந்து "கண்ணா, மலர், வாங்க பரிசு கொடுக்கப் போறாங்க.. டீச்சர் எல்லாரையும் கூட்டிட்டு வரச் சொன்னாங்க வாங்க போலாம்"  என்றதும் மூவரும் விளையாட்டுத் திடல் அருகில் இருந்த மேடையை நோக்கி ஓடினர். 


பரிசுகள் அறிவிக்கப்பட்டன:




கபடி முதலிடம்: அரசு மேல்நிலைப் பள்ளி, பாச்சலூர்.

கைப்பந்தாட்டம் மூன்றாம் இடம் :அரசு மேல்நிலைப்பள்ளி, பாச்சலூர்.  

நடனம் இரண்டாம் இடம்: பாச்சலூர், அரசு மேல்நிலைப்பள்ளி என பெரும்பான்மை போட்டிகளில் அரசு மேல்நிலைப்பள்ளி பாச்சலூர் முதல் மூன்று இடங்களில் ஏதோ ஒன்றை தக்க வைத்தது.


பரிசுகள் அறிவிப்பு இன்னும் முடியவில்லை.


"ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் யாருக்கு கிடைக்கப் போகுது"என்ற ஆவலுடன் இருந்த மாணவர்களுக்கு "ஓவரால் சாம்பியன்ஷிப் பெறுபவர்கள், அரசு மேல்நிலைப் பள்ளி பாச்சலூர், பள்ளி மாணவர்கள் என்ற அறிவிப்பு வந்தவுடன் மாணவர்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம், கட்டித் தழுவி கொண்டனர். 


ஆசிரியர்களுடன் வெற்றியைப் பகிர்ந்து கொண்டனர். பள்ளி மாணவர்களுடன் ஆசிரியர்களும் சேர்ந்து மேடையேறி இணைந்து அந்த தடாகையை வாங்கும்போது அப்பப்பா என்ன ஒரு சந்தோஷம். ஆனால் கூட்டத்திலோ  ஒரே சலசலப்பு.    


"என்னடா இது! ஆச்சரியமா இருக்கு எக்ஸாமுக்கே பாதிப்பேர் வரமாட்டானுங்க இந்த ஸ்கூல்ல இருந்து, இப்ப போட்டியில ஓவரால் சாம்பியன்ஷிப்பா! எப்படிடா இது!" என்று வேறு பள்ளியின் மாணவர்கள் ஆச்சரியப்பட்டனர்.


மாணவர்களுக்கு மட்டுமா மற்ற பள்ளி ஆசிரியர்களுக்கும் இது ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. பாச்சலூர் பள்ளி என்றாலே அந்தப் பக்கம் ஓரளவு அனைவருக்கும் தெரிந்ததே.....


இவர்களின் ஆச்சரியத்தை அதிகரிக்கும் விதத்தில் அந்த ஆண்டு தேர்வு முடிவுகள் வெளிவந்தன. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் நூறு சதவீதத் தேர்ச்சி, மேலும் பல மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர். பாச்சலூர் பள்ளி அனைவரின் பேசுப் பொருளாக மாறியது. சிறிது நாட்களிலேயே அப்பள்ளி மாவட்டத்தின் சிறந்தப் பத்து பள்ளிகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

        

"ஏல! முனுசாமி எங்கய்யா இவ்வளவு அவசரமா போயிட்டு இருக்கீய?" என மாணிக்கம் கேட்க,


"அண்ணாச்சி விஷயமே தெரியாதா? நம்ம ஊரு ஸ்கூலுக்கு பெரிய பெரிய ஆபீஸர்லாம் வர போறாங்களாம், நம்ம பிள்ளைகளுக்கும், பள்ளிக்கோடத்துக்கும் ஏதோ பரிசு தரப் போறாங்களாம்... அங்கதான் போறேன்" என முனுசாமி நிற்காமல் பதில் சொல்லிச் செல்ல,


"ஏல அப்படியா!நம்ம பள்ளிக்கோடத்துக்குப் பரிசா! இதோ வரேன்ல" என மாணிக்கம் பள்ளியை நோக்கி விரைந்தார்.

        

ஊரேத் திருவிழாப் போன்று களைக்கட்டியது. பள்ளிக்கூடமும் கோவில் போன்றே அலங்கரிக்கப்பட்டிருந்தது.ஊரில் அனைவரும் பள்ளியை நோக்கி விரைந்தனர்.


ஓட்டை குடிசையில் படுத்திருந்த ராஜம்மா பாட்டி "ஏல வேலு, செத்த என்ன அந்த பள்ளிக்கோடம் வரை கூட்டிப் போயேன், நம்ம புள்ள ஏதோ மொத மார்க் எடுத்ததுக்கு பரிசு கொடுக்க போறாங்களாம் நான் பாக்கணும்த"


"ஏய் ஆத்தா! சீக்கு வந்து கெடக்குற எதுக்கு நீ அங்க போகணும்னு சொல்லுத, அங்க பெரிய ஆளுகலாம் வருவாங்க, அதெலாம் முடியாது பேசாத கெட"


"ஏய்! ஆக்கங்கெட்ட கூவ, இனி பெரியவக சின்னவகலாம் இல்லல அந்த பாரதி புள்ள டீச்சரா வந்ததிலிருந்து எல்லாம் ஒன்னு தான்..... ஏன் மக்கா மேடை ஏறி பரிசு வாங்க போறத நான் பாக்கணும்த"  என்று சொன்னதும் வேலு கோபம் தெறிக்க”  என்ன படிக்க விடாம பாதியில துரத்தி  புட்டானுவ இப்ப படிக்காம கஷ்டப்படுத, அங்க நான் போகல... என்றான்.


“ஏல நீ சொல்றது சரிதான்.. ஆனா இப்ப உன் புள்ள படிக்குதுல...மொத மார்க் ராசா...வா போலாம்" என வீம்பு பிடித்த மகனை ராஜம்மா பாட்டி இழுத்துக்கொண்டு போனார்.


ஏறக்குறைய அவ்வூரின் ஒவ்வொருவரின் மனநிலையும் இதேதான்...


விழா அரங்கம் முக்கியஸ்தர்களால் நிரம்பியிருந்தது. ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மற்றும் பல அதிகாரிகள் என அனைவரும் இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள்.

பள்ளி மாணவர்கள் ஒரு புறம் இருக்க, ஊர் பெரியவர்கள் மற்றும் மக்கள் மறுபுறம் என நிற்க இடமில்லாமல் திடல் நிறைந்திருந்தது. விருது வழங்கும் தருணம் தலைமை ஆசிரியர் யாரையோ தேடுகிறார். "எங்க பாரதி டீச்சர்?" என மற்றொரு ஆசிரியரிடம் கேட்க "பாரதி டீச்சர் எப்போதும் போல மாணவர்களோடு தான் இருப்பாங்க" என்று கூறினார்.


பாரதி எந்த சலனமும் இல்லாமல் மாணவர்களுடன் ஒருவராக அமர்ந்து விழாவை ரசித்துக் கொண்டிருந்தாள்.

தலைமையாசிரியர், "பாரதி டீச்சர் இங்க வாங்க, இந்த விருதை வாங்க நீங்கதான் தகுதியானவங்க" என்றார்.


பாரதி "இல்ல சார் நீங்களே வாங்குங்க, விருது வாங்கும் அளவுக்கு நான் எதுவும் செய்யல" என்றாள். "ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த, இப்பள்ளியின் மற்றும் சமூகத்தின் கொள்கைகளை மாற்றி மிகச் சிறந்த பள்ளியாக உருவாக்கினதுல உங்களோட பங்கு அதிகம். நீங்க இல்லன்னா இந்த பள்ளி இல்ல நீங்க விருதை வாங்குறீங்க... இது என் வேண்டுகோள்" என தலைமையாசிரியர் கூற, பாரதியும் இசைந்தாள்.


விழா மேடையில் ஒவ்வொருவராக பள்ளிப் பெருமையைப் பேச, மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடந்தேற பாரதி மட்டும் தன் நினைவலைகளால் பின்னோக்கி நகர்ந்தாள்.

      

வீட்டினுள் காரசாரமான விவாதம். பாரதியின் தந்தை விடுவதாக இல்லை. பாரதியின் ஆசிரியர் படிப்புக்கு சுந்தரம் பாரதியின் தந்தை ”ஏமா பாரதி உன் அத்த மக கமலி டாக்டருக்கு படிக்கிறா… சித்தி பொண்ணு விஜயா சிஏ படிக்கிறா…. உன் அண்ணன் ராஜா ஐஐடியில் பெரிய லெக்சரரா இருக்கான் .. நீ ஏன்மா படிச்சா டீச்சர்  வேலைக்குத் தான் படிப்பேனு இப்படி பிடிவாதம் பிடிக்கிற” என்றார் 


பாரதி தீர்மானமாக சொன்னாள் “நான் படிச்சா டீச்சர் வேலைக்கு தான்பா படிப்பேன் இல்லனா படிக்கவே இல்லை” என்றாள்.


ஒரு வழியாக போராடி ஆசிரியர் பணிக்கான படிப்பை முடித்து அடுத்து தான் படித்த பள்ளியில் சேர்வதற்கான பணியில் ஆயத்தமானாள். தகுதி தேர்வில் முதல் பத்து  இடங்களில் தேர்வாகி தான் விரும்பியபடி பாச்சலூர் பள்ளியை தேர்வு செய்யும் நேரத்தில் சுந்தரம், “பாரதி  டீச்சருக்கு தான் படிப்பேனு பிடிவாதமா படிச்சு முடிச்சுட்ட அது சரி இப்போவாது  நான் சொல்றத கேளு .நம்ம டவுன் பக்கமே ஏதாவது ஒரு ஸ்கூல்ல செலக்ட் பண்ணு ஏன் அவ்வளவு தொலைவுல வேலைக்கு போகணும் நினைக்கிற” என்றார்.


“ இல்ல நான் முடிவு எடுத்துட்டேன் வேலை செஞ்சா நான் படிச்ச அந்த ஸ்கூல்ல தான் செய்வேன்” என்றாள்.


“பாரதி நீ படிச்சப்ப உன் அப்பத்தா வீடு அங்க இருந்துச்சு இப்போ எல்லாரும் இங்கதான் இருக்கோம்” என்றார் சுந்தரம் .

“அப்பா நான் முடிவு எடுத்துட்டேன் அந்த ஸ்கூல்ல  நான் செஞ்சு முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு என்று தீர்மானமா சொன்னாள்.“பாரதி.


சுந்தரம் இயல்பாகவே தன் பெண்ணின் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுப்பவர் வேறு வழியின்றி அவரும் சம்மதித்தார் .

         

அதன்படி ஐந்து ஆண்டுகளுக்கு முன் இப்பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தாள். மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்ற நம்பிக்கையில்.. ஆனால் அவள் எதிர்பார்த்த மாற்றத்தை விட மோசமான சூழலில் அப்பள்ளி இருந்தது. முதலில் மாற்றத்தை மாணவர்களிடம் கொண்டு வர முயற்சி செய்தாள்.


வகுப்பறையில் சாதிக் குழுக்களாக அமர்ந்திருந்த மாணவர்கள் இடத்தை மாற்றி,உயர வரிசைப்படி அமர வைத்தாள்.   அதற்கு ஒரு மாணவன்" டீச்சர் நான் இந்த ராமு பக்கத்தில உக்கார கூடாதுன்னு எங்க அம்மா சொல்லி இருக்கு" என்றான்.


"அம்மாட்ட நான் பேசுறேன், நீ உக்காரு" என்று கனிவுடன் சொன்னாள் பாரதி. இன்று அந்த மாணவனும் ராமுவும் உற்ற தோழர்கள்..


இது மட்டும் போதாது இதைப் பற்றி தலைமை ஆசிரியரிடம் பேசியே ஆக வேண்டும் என நினைத்து “சார் நம்ம பள்ளியில மாணவரின் இடைநிற்றல், சாதி ரீதியான தலையீடுகள் போன்ற பிரச்சனைகளை முழுமையா தவிர்க்கணும், அதுக்கு நம்மனால முடிந்த அனைத்து பணிகளையும் இப்போதே செய்யணும். அதுக்கு தங்கள் அனுமதி வேணும் சார்.”


“சரி பாரதி டீச்சர் ஆனா இதுக்கு மற்ற ஆசிரியர்கள் ஒத்துக்குவாங்களா பாதிப்பேர் தங்கள் பணிப் பாதுகாப்பை சொல்லி எதுவும் செய்ய மாட்டாங்க என்ன செய்யலாம்” என்றார் தலைமையாசிரியர்.


பாரதி தலைமை ஆசிரியரின் உதவியுடன் ஆசிரியர் கூட்டம் போட்டு அதில் இந்த பிரச்சினைப் பற்றி பேசினாள்.


“எத்தனையோ நல்லாப் படிக்கிற பிள்ளைங்க பாதையில ஸ்கூல் வராம நின்னுடுறாங்க அப்பல்லாம் நாம வருத்தப்படறோமேத்  தவிர அந்த குழந்தைகளை பள்ளியில சேக்க முயற்சி பண்றது இல்ல” என்ற பாரதியை பார்த்து ….

ஒரு ஆசிரியர்” இங்க நம்மள சுத்தி பிரச்சனைகள் நிறைய இருக்கும்போது எப்படி அதில் கவனம் செலுத்துறது” என்றார்.


மற்றொரு ஆசிரியர் ”வருத்தமாதான் இருக்கு. ஆனால் ஊர் பிரச்சனைகள்ல தலையிட முடியாதுல” என்றார்.


பாரதி அதற்கு “ஊருன்னு எதை சொல்றீங்க நாம உருவாக்குவது தான் ஊர். நாம எதை மாணவர் மனசுல விதைக்கிறோமோ அதுதான் விளையும். இந்த ஊர்ல மலிந்து கிடக்கிற சாதி பிரச்சனைகளை ஒழிக்கணும்னா அது நம்மனாலதான்முடியும்”.


“இப்போ நம்ம ஸ்கூல்ல பசங்களுக்கிடையே ஒற்றுமை இல்லை, சாதி ஏற்றத்தாழ்வுகள் நிறையவே இருக்கு இதெல்லாம் நாம மாத்தனும்”


“மாணவர்களுக்கு குழு உணர்வையும் ஒற்றுமையும் சொல்லிக் கொடுத்தா அதன் மூலம் கிடைக்கிற வெற்றி அவங்க மனச மாத்தும். இதற்கு எல்லா ஆசிரியர்களோட ஒத்துழைப்பும் தேவை” என்றாள் .


உடனே அப் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர்” சரி சொல்லுங்க இப்ப என்ன செய்யலாம்” என்றார். பாரதி “எல்லா மாணவர்களும் பங்கேற்குற மாதிரி விளையாட்டுப் போட்டிகள் நடத்தணும் வேறு பள்ளிகளில் நடக்கிற போட்டிகளுக்கு அழைச்சிட்டுப் போகணும். அவங்க வெற்றி தோல்வினா என்னன்னு கத்துக்கணும். இதற்கு கலை ஆசிரியர்களுடைய ஒத்துழைப்பும் தேவை .


உடனே அப்பள்ளியின்  கலையாசிரியர் “நானும் கண்டிப்பா இதற்கு உதவி செய்வேன் பிள்ளைகளோட மனசுல கலை சார்ந்த ஆர்வத்தை உருவாக்குவேன்” என்றார்.  அனைத்து ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து தங்கள் பணியை ஆரம்பிக்க தயாராகினர்.

       

அச்சமயம் பாரதியின் தோழியும்,மற்றொரு ஆசிரியருமான நீலா பாரதியிடம் "இந்த ஸ்கூல்ல உள்ள எல்லா டீச்சரும் அவங்கவங்க வேலைய பார்க்கும்போது நீ மட்டும் ஏன் இந்த மாதிரி விஷயங்கள்ல ஈடுபடுற இது உண்மையாவே உன்னோட பொதுநலமா? இல்ல சுயநலம் இதுல இருக்கா ?" என்று கேட்க....பாரதி தன் பள்ளிக் கால நிகழ்வுகளைப் பகிர்ந்தாள்.


பாரதியின் பள்ளி காலங்கள் அவள் படித்த வகுப்பறை, ஆசிரியர்கள், அவள் நண்பன் முத்தையா என அனைத்தும் அவள் கண்  முன் விரிந்தன. பாரதி நன்கு படிக்கும் மாணவி. ஆசிரியர்களின் விருப்பமான மாணவியும் கூட.... ஆனால்  அந்தப் பள்ளியிலும் சரி, ஊரிலும் சரி சாதி ஏற்றத்தாழ்வுகள் மலிந்து கிடந்தன.


கீழத்தெருவில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த பிள்ளைகள் படிக்கக்கூடாது. அவர்கள் பள்ளியை விட்டு எந்நேரமும் நிறுத்தப்படுவார்கள். அவர்களுக்கு மேல் படிப்பு என்பதே கிடையாது அப்போதெல்லாம் பாரதி ஆசிரியரிடம் "ஏன் அவங்க பள்ளிக்கூடம் வரல டீச்சர்? அவங்கல்லாம் படிக்கக் கூடாதா?" என்ற கேள்வி கேட்க மட்டுமே தெரிந்திருந்தாள். பத்தாம் வகுப்பு வரை கண்ணும் கருத்துமாக படித்து பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றாள்.

          

பதினொன்றாம் வகுப்பு பாரதியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முதல் படி. பௌதீகம் கற்றுத் தராத வாழ்க்கைப் பாடத்தை வரலாறு கற்றுத்தரும் என்று நினைத்தாலோ என்னவோ வரலாற்று பிரிவைத் தேர்ந்தெடுத்தாள்.


முதல் நாள் வகுப்பு .ஆசிரியர் தன் வகுப்பில் புதிய வருகை  என முத்தையாவை அறிமுகப்படுத்தினார்.  


“பசங்களா கவனிங்க… நம்ம வகுப்புக்கு ஒரு புது ஸ்டூடண்ட் வந்திருக்கான் பேரு முத்தையா. ரொம்ப நல்ல பையன் அவன் படிச்ச ஸ்கூல்ல பத்தாம் வகுப்பில முத்தையா தான் முதல் மதிப்பெண்” என்று கூறி முத்தையாவை அமர வைத்தார் .


ஆறு மாத கால ஓட்டத்தில் அடுத்தடுத்த சிறுத்தேர்வுகளில் முத்தையாவின் தேர்ச்சி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. இது பாரதிக்கும் சவாலாக இருந்தது. பாரதியின் தோழி கண்மணி “என்னடி இப்பல்லாம் செகண்ட் ரேங்க் எடுக்கிற அந்த முத்தையாவ முந்த முடியலையா”  என கேலியாக கேட்டாள்.


“ அதெல்லாம் ஒன்னும் இல்ல பப்ளிக் எக்ஸாம்ல பாரு நான் தான் முதல் மார்க் வாங்க போறேன்” என்று கோபமாக சொன்னாள்.


எனக்கு அப்படி தோணலடி….. அவன் எப்பவும் புக்கும் கையுமா யாரிடமும் பேசாத தூண் மேல சாஞ்சி  படிச்சிட்டே இருக்கா அத பாத்துக்க” என்று கண்மணியை எச்சரித்தவளாய் நகர்ந்தாள்.


ஓரிரு நாட்களில் வகுப்பு மாணவர்கள் பேசுவதை பாரதி கேட்டாள் .”அந்த முத்தையாவுக்கு அப்பா இல்லையாம் .அம்மா வீட்டு வேலை செய்றாங்களாம் அவனும் சாயங்காலம் ஹோட்டல்ல வேலை பாக்குறானாம் அதான் வீட்ல படிக்க நேரம் இல்லாம ஸ்கூல்ல படிச்சிட்டே இருக்கானாம்”


இதைக் கேட்ட பாரதிக்கு முத்தையா மேல் உள்ள பொறாமை நட்பாக மாறியது. பாரதியும் அவளாகவே முத்தையாவிடம் சென்று “நானும் உன் கூட சேர்ந்து படிக்கவா முத்தையா?” என்று கேட்டாள்.


கொஞ்ச நாட்களிலேயே இருவருக்குமான  நட்பு ஆழமானது. ஒருவருக்கொருவர் பாடத்தில் உள்ள சந்தேகங்களை கலந்து விவாதித்து பாடங்களை படித்தனர்.


அவ்வப்போது முத்தையா பாரதியிடம்” பாரதி நம்ம ஸ்கூல்ல கீழத்தெரு பிள்ளைங்கல  அப்பப்ப ஸ்கூல்ல இருந்து நிறுத்துறது எனக்கு கஷ்டமா இருக்கு நான் படிச்சு பெரிய வழக்கறிஞராகி இதெல்லாம் மாத்துவேன்” என்று சொல்லிக் கொண்டே இருப்பான்.


பாரதியும் “ஆமா முத்தையா இதெல்லாம் நம்ம மாத்தணும்” என்று அவள் பங்குக்கு சொல்வாள்.


பொதுத்தேர்வு நெருங்கியது. தேர்வுக்கு முத்தையாவும் பாரதியும் தயாரானார்கள். இதற்கிடையே முத்தையா பொதுத்தேர்வு எழுதவிருப்பது  ஊரில் ஒரு சிலரை சலனமடைய செய்தது.


“என்ன செய்யலாம்” என்று யோசித்த ஊர் தலைவருக்கு பொறி தட்டியது. முத்தையா வகுப்பு மாணவர்கள்  நான்கு பேர்  வரவழைக்கப்பட்டனர் .  “இந்த பாருல முத்தையானு ஒரு  கீழத்தெரு பய  பரீட்சை எழுத போறானாமே அவன்ல்லாம் படிச்சு பெரிய ஆளானா நம்ம ஊர் என்னத்துக்கு ஆகுறது. உனக்கெல்லாம் என்ன மறுவாத கிடைக்கும். என்ன பண்ணுவியோ தெரியாது அந்த பைய பரீட்சை எழுதப்படாது. அவ்வளவுதான் என மாணவர்களை உசுப்பேத்தினார்.


நான்கு மாணவர்களும் கத்தி அரிவாளுடன் தேர்வுக்கு முந்தைய நாள் முத்தையா வீட்டிற்கு சென்றனர். அரிவாள் அவன் வலது கையை பதம் பார்த்தது," இதுக்கு மேல படிப்பேன்னு சொன்ன உன் உடம்புல உசுரு இருக்காது" என்று மிரட்டி சென்றனர்.  அன்று பொதுத்தேர்வு. தேர்வுக்கு முத்தையா வரவில்லை. பாரதிக்கு ஒன்றும் விளங்கவில்லை. தேர்வு முடிந்ததும் முத்தையா வீட்டிற்கு பாரதி சென்றாள். வீடு பூட்டப்பட்டிருந்தது




பக்கத்து வீட்டுக்காரர் "நாலு பசங்க நேத்து அருவா கத்தி கம்போட வந்து அந்த புள்ள கையை வெட்டி புட்டானுவ, அது மட்டுமில்லாம  நீ படிச்சா கொன்னுபுடுவேன்னு சொல்லி மிரட்டிட்டு போயிட்டாங்க, பாவம் அவங்க குடும்பம் ராத்திரியோட ராத்திரியா ஊரை விட்டு போய்ட்டாங்க" என்றார்.


அப்போதுதான் விளங்கியது முத்தையாவும் கீழத்தெருவை சேர்ந்தவன் என்று.


முத்தையாவின் திடீர் இழப்பு பாரதியை புரட்டிப் போட்டது .கேவலம் சாதி ஒரு மாணவனின் கனவை குழப்பதா?... இதற்கெல்லாம் தீர்வு இல்லையா?  தந்தையை இழந்த ஒரு மாணவனுக்கு இழைக்கும் அநீதி அல்லவா? கலைந்தது முத்தையாவின் கனவு மட்டுமல்ல பாரதியின் எதிர்காலத்தை நோக்கிய எதிர்பார்ப்புகள் ….வாழ்க்கையில் அச்சமும் அவநம்பிக்கையும் அவளை ஒரு சேர  ஆக்கிரமித்தது போல் ஒரு அழுத்தம். அவள் மனக்குரல் சமூகத்தை நோக்கி எழுப்பிய கேள்வி “எது நாகரீகம்? எது பண்பாடு?


சக உயிர் தன் முன்னே கூனி குறுகுவதை, செயலிழந்து பணிவதை தங்களின் கவுரவம் என்று வாழ்வது வாழ்வா? இதற்குப் பெயர் கலாச்சார பெருமையா? இல்லை கடைந்தெடுத்த அயோக்கியத்தனமா? ஆயிரமாயிரம் கேள்விகள் பாரதியை உலுக்கியது.


அன்று ஒரு முடிவெடுத்தாள். தான் படித்தால் ஆசிரியர் பணிக்கு மட்டுமே... அதுவும் தான் படித்த பள்ளியிலேயே பணி புரிய வேண்டும் என்ற தீர்மானம் எடுத்தாள்


இதை கேட்டதும் ஆசிரியர் நீலாவிற்கு பாரதியின் உள்நோக்கம் புரிய, அவளும் பாரதியுடன் சேர்ந்து பள்ளியின் மாற்றத்திற்கு உற்ற துணையாக நின்றாள்.  அதன் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகி படிக்கவும் தொடங்கினர். மாணவர்களின் ஒற்றுமை பெற்றோரை கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றியது. 


பெற்றோர்களின் எண்ணம் பிள்ளைகளின் முன்னேற்றத்தின் மேல் திரும்பியது. சாதியின் சுவடு மறைய தொடங்கியது. தற்பொழுது மாவட்டத்தின் சிறந்த பள்ளிகளில் ஒன்று இப்பள்ளி... "பாரதி, பாரதி டீச்சர்...  என்னாச்சு? விருது வாங்க மேடைக்கு போங்க.." என தலைமையாசிரியர் குரல் கேட்டது. 


பாரதி பெருமிதத்துடன் மேடையில் ஏற, மாணவர்களின் ஆரவாரங்களுக்கிடையே விருதை ஆட்சியர் கையிலிருந்து  வாங்குகிறாள் .அவள் கண்கள் குளமாகின. விருதை பெற்றதற்காக அல்ல.... அவள் கனவு நிறைவேறியதற்காக..... இன்னும் ஓரிரு வருடங்களில் இந்த ஊரின் சமூக சிக்கல்களை முற்றிலுமாக மாற்ற முடியும் என்ற புது நம்பிக்கையுடன் "பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்" தன் வகுப்பை நோக்கி நடந்தாள்.


(சே.ஷீபா, ஆங்கில பட்டதாரி ஆசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காணும் பொங்கல் மட்டுமல்ல.. இவரைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டிய தினம் இன்று!

news

பொங்கல் சீர் வரிசை!

news

காக்காப்பிடி கணுப்பிடி.. உடன் பிறந்தாரின் நன்மைக்காக இருக்கும் நோன்பு!

news

தலைவர் 173 ஷூட்டிங்...சூப்பர் ஸ்டார் ரஜினியே பகிர்ந்த மாஸ் அப்டேட்

news

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!

news

காணும் பொங்கல் .. அப்படீன்னா என்ன.. ஏன் இதைக் கொண்டாடுகிறோம்?

news

திமுக கூட்டணியில் தொடர ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ்...டெல்லி கூட்டத்தில் இன்று முக்கிய முடிவு

news

ஆட்சியில் பங்கு.. டெல்லிக்குப் போகிறேன்.. மாணிக்கம் தாகூர் டிவீட்டால்.. காலையிலேய கலகல!

news

திமுக கூட்டணியில் இணைகிறாரா ராமதாஸ்? உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிபந்தனை?

அதிகம் பார்க்கும் செய்திகள்