வெயிலும், நிழலும் கொள்கைப் போராளிகளுக்கு சமமே.. தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிச்சாமி

Jun 04, 2024,07:12 PM IST

சென்னை: லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார். நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் வெயிலும், நிழலும் கொள்கைப் போராளிகளுக்கு சமமே என்று அவர் தெரிவித்துள்ளார்.


மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்திலும் அதிமுகவால் வெல்ல முடியாமல் போய் விட்டது. அதிமுக கூட்டணிக் கட்சிகளும் எந்த இடத்திலும் வெல்ல முடியாமல் தோல்வியுற்றுள்ளன. இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:




'கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது'


நெடிய அரசியல் பயணத்தில் வெயிலும், நிழலும் கொள்கைப் போராளிகளுக்கு சமமே!


வீழ்த்த முடியாத மக்கள் பேரியக்கம்  அதிமுக  என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.


நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போலவே அதிகார பலமும், பண பலமும், பொய்ப் பிரச்சார பலமும், அறத்திற்கு அப்பாற்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்கு சாதகமாக வந்திருக்கின்றன.


தற்போது வெளிவந்துள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள், மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு, அஇஅதிமுக வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.


இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது. 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்.


“எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை இடரவைத்து, தள்ளப் பார்க்கும் குழியிலே அத்தனையும் தாண்டி காலை முன் வையடா - நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா! சத்தியமே லட்சியமாய் கொள்ளடா" என்ற புரட்சித் தலைவரின் பாடல் நமக்கு என்றைக்கும் வழிகாட்டும் என்று அவர் கூறியுள்ளார்.


கூட்டணியை வலுவாக்குமா அதிமுக?


இந்த அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டிருக்கும் ஒரு வாசகம் கவனம் ஈர்த்துள்ளது. அதாவது 2026 சட்டசபைத் தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் என்ற பாடத்தை இந்த தேர்தல் கற்றுக் கொடுத்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் சட்டசபைத் தேர்தலில் கூட்டணியை வலுவாக்க அதிமுக முயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவைப்பட்டால் பாஜகவுடன் கை கோர்க்கும் முடிவையும் கூட அதிமுக எடுக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.


காரணம், லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 15 தொகுதிகள் வரை அதிமுக - பாஜக வேட்பாளர்கள், வெற்றி பெற்ற வேட்பாளர்களை விட அதிக வாக்குகளைப் பெற்றுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. எனவே இதை கருத்தில் கொண்டு அடுத்து வரும் தேர்தலை சந்திக்க அதிமுக திட்டமிடக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்