- ஜோபிரபா
செயற்கை நுண்ணறிவின் மூலம் – அதன் தத்துவார்த்த மையம்
செயற்கை நுண்ணறிவு பற்றி பேசும்போது, நாம் பெரும்பாலும் கணினி, மென்பொருள், தரவு இவைகளைப் பற்றியே பேசுகிறோம்.
ஆனால் AI-யின் உண்மையான தொடக்கம்
ஒரு கேள்வியில்தான் இருக்கிறது.
- “சிந்தனை என்றால் என்ன?”
- “அதை ஒரு இயந்திரம் செய்ய முடியுமா?” இந்தக் கேள்விகள்தான் செயற்கை நுண்ணறிவின் தத்துவார்த்த மையம்.
தொன்மை வேர்கள் – மனிதன் கண்ட முதல் கனவு
மனிதர்கள் இயந்திரங்களை உருவாக்கத் தொடங்கிய நாளிலிருந்தே, ஒரு கனவு அவர்களோடு இருந்தது.
அந்த கனவினையும்,ஆட்டோமேட்டாக்கள் பற்றியும், சென்ற அத்தியாத்தில் பார்த்தோம்.

கற்பனையிலிருந்து அறிவியலுக்கான நகர்வு நீண்ட காலம் வரை, புராணங்களிலும், கதைகளிலும் தான் இருந்தன. ஆனால் 1900-களின் ஆரம்பத்தில்,“செயற்கை மனிதர்கள்” என்ற கருத்து ஊடகங்களில் பரவத் தொடங்கியது.
இதன் விளைவு? விஞ்ஞானிகள், தத்துவவாதிகள், சமூக சிந்தனையாளர்கள் எல்லோரும் ஒரே கேள்வியை வேறு வேறு கோணங்களில் கேட்கத் தொடங்கினர்.
கேட்க சாதாரணமாக இருக்கும் அசாதாரான கேள்வி அது – இயந்திரம் சிந்திக்குமா? செயற்கை நுண்ணறிவின் மையமும் இந்த ஒரு கேள்வி தான்.
“ஒரு இயந்திரம் சிந்திக்க முடியுமா?”
இந்தக் கேள்வி வெறும் தொழில்நுட்பக் கேள்வி அல்ல.ஏனெனில், சிந்தனை, நுண்ணறிவு, உணர்வு - இவை மனிதனின் அடையாளங்கள்.
ஒரு இயந்திரமும் இந்த திறன்களைப் பெறும் என்றால்…
அதற்கு உரிமைகள் இருக்குமா?
அது பொறுப்பேற்க வேண்டுமா?
மனிதனுக்கும் இயந்திரத்துக்கும்
எல்லை எங்கே?
இந்தக் கேள்விகள் AI-யை அறிவியலைத் தாண்டி சட்டம், தத்துவம், நெறிமுறை என எல்லாவற்றையும் தொட செய்கின்றது.
செயற்கை நுண்ணறிவின் (AI) முன்னேற்றம் என்பது வெறும் வேகமான கணினிகள், அதிக கணக்கீட்டு திறன் அல்லது பெரும் தரவுத்தொகுப்புகளின் விளைவு மட்டுமல்ல.
அது, மனித நுண்ணறிவு எவ்வாறு உருவாகிறது, சிந்தனை என்றால் என்ன, நுண்ணறிவு உயிரியல் மூளையுடன் மட்டும் கட்டுப்பட்டதா, அல்லது கணித–அல்காரிதமிக் கட்டமைப்புகளாலும் உருவாக்க முடியுமா என்ற அடிப்படை அறிவியல் மற்றும் தத்துவக் கேள்விகளுக்கான தொடர்ச்சியான ஆய்வும் மறுபரிசீலனையும் ஆகும்.
AI வளர்ச்சி, மனிதன்–இயந்திரம் இடையிலான வேறுபாடுகளை மட்டுமல்லாது, நுண்ணறிவின் இயல்பை அறிவியல் ரீதியாகப் புரிந்து கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாகவும் திகழ்கிறது.
சைபர்நெட்டிக்ஸ் – AI உருவாகும் முன் அமைந்த கருத்தியல் அடித்தளம்
“AI” என்ற சொல்லே பயன்படுத்தப்படாத காலகட்டத்தில், மிக முக்கியமான ஒரு சிந்தனைப் போக்கு உருவெடுத்தது.
அதுதான் சைபர்நெட்டிக்ஸ் (Cybernetics).
1948 ஆம் ஆண்டு, நார்பர்ட் வீனர் ஒரு புதிய அறிவியல் பார்வையை முன்வைத்தார்.
அவர் அளித்த வரையறை:
“விலங்குகளிலும் இயந்திரங்களிலும்
கட்டுப்பாடு (Control) மற்றும்
தகவல் தொடர்பு (Communication) பற்றிய ஆய்வு.”
இந்த வரையறை, மனித மூளையும் இயந்திரங்களும் ஒரே மாதிரியான அடிப்படை விதிகளின் கீழ் செயல்படக்கூடும் என்ற புரட்சிகரமான எண்ணத்தை உருவாக்கியது. அதாவது, சிந்தனை, பின்னூட்டம், முடிவு எடுப்பது
இவை உயிரினங்களுக்கும் இயந்திரங்களுக்கும் பொதுவான செயல்முறைகள் ஆகலாம் என்ற பார்வை முதன்முறையாக அறிவியல் ரீதியாக முன்வைக்கப்பட்டது.
சைபர்நெட்டிக்ஸ் என்பது ஒரு தனித்துறை அல்ல. அது—
- உயிரியல்
- கணிதம்
- இயற்பியல்
- பொறியியல்
என பல துறைகள் ஒரே மேசையில் அமர்ந்து உரையாடத் தொடங்கிய முதன்மையான அறிவியல் முயற்சி.
AI ஒரு தனி ஆய்வு துறையாக உருவாகும் முன்னரே, அதற்கான கருத்தியல் அடித்தளம் இந்த பல்துறை சிந்தனையிலேயே உருவானது.
இன்றும், நெறிமுறை AI (Ethical AI), AGI போன்ற சிக்கலான சவால்களை ஒரே ஒரு துறையின் மூலம் தீர்க்க முடியாது என்பதே உண்மை. அந்த உண்மையை, சைபர்நெட்டிக்ஸ் தொடங்கிய ஆரம்பகால பல்துறை சிந்தனை இன்றும் நமக்கு வழிகாட்டியாக உள்ளது.
ஒரு திறந்த கேள்வியுடன்…
“ஒரு இயந்திரம் உண்மையாகவே சிந்திக்கத் தொடங்கினால், மனிதனின் தனிப்பட்ட சிறப்பு என்ன ஆகும்?”
“மூளையிலிருந்து கணினிச் சில்லுகளுக்குள் நிகழப்போகும் அந்த மாற்றம் எப்படி இருக்கும்?”
இந்தக் கேள்விகளுக்கு முக்கியமான அடித்தளத்தை ஒரு மனிதன் அமைத்தார்.
அடுத்த அத்தியாயத்தில், அந்த மனிதன் இந்த கேள்வியை எப்படி அறிவியல் பிரச்சினையாக மாற்றினார் என்பதைப் பார்க்கலாம்.
(பயணம் தொடரும்….)
(திருவாரூர் அரசுப் பள்ளி ஆசிரியர் ஜோபிரபா என்கிற ச.பிரபாகரன், திருவாரூர் புத்தகத் திருவிழா இலச்சினையை வடிவமைத்தவர். தேனி புத்தகத் திருவிழா ஸ்லோகன் போட்டி மற்றும் 'விஞ்ஞான துளிர்' இதழின் கட்டுரையாளர். மேலும், தமிழ்நாடு அரசின் 'போதையில்லா தமிழ்நாடு', 'சமத்துவம் காண்போம்', 'என் பள்ளி என் பெருமை' போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்)
கூட்டணி ஆட்சி பற்றி இனி யாரும் கேட்க மாட்டார்கள்...என்ன ஆர்.எஸ்.பாரதி இப்படி சொல்லிட்டார்?
தமிழில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன்: மத்திய அமைச்சர் அமித்ஷா
அவர் எல்லாம் ஒரு ஆளா? அதெல்லாம் ஒரு கட்சியா?: நயினார் நாகேந்திரனுக்கு செங்கோட்டையன் பதிலடி!
40 சீட் கொடுத்தே தீரனும்...மீண்டும் புயலை கிளப்பிய மாணிக்கம் தாகூர்
சாயந்திரம் ஆயிருச்சா.. வாங்க வாழைக்காய் கனவறுவல் செஞ்சு சாப்பிடலாம்!
மதுரை மீனாட்சி நகரின் காதல்!
அன்பு!
தமிழகத்தை மீட்போம்: பிப். 21 முதல் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம்! – அதிமுக அறிவிப்பு
உணர்வு
{{comments.comment}}