பெண் ஜவுளி கடை பொம்மையா?

Jun 03, 2025,04:57 PM IST

- முனைவர் ராணி சக்கரவர்த்தி


ஒரு கல்யாண நிகழ்ச்சியில் அழகுக்கலை நிபுணருக்கு மட்டும் ரூபாய் 65 ஆயிரம் கொடுத்தது பார்த்து எனக்குத் தலை சுற்றிவிட்டது. என்னப்பா இது? எனக் கேட்டதற்கு, பெண்ணுக்கு மட்டும் 30 ஆயிரம், பெண்ணின் அம்மா, சித்தி அத்தை அவர்களின், பெண்கள் என அனைவருக்கும் சேர்த்துத் தான் இந்தப் பணம் என்றனர். நகரங்களின் நடைபெறும் பெரும்பாலான திருமணங்களில் இதைப் பார்க்க முடிகிறது. பெண்ணின் உச்சி முதலில் உள்ளங்கால் வரை அனைத்து மாற்றப்பட்டு விடுகிறது. அவளின் நிறம், உயரம், தலைமுடி, கண் இமை, நகம் எல்லாம் பொய்.  மாப்பிள்ளை இது நாம பார்த்த பெண்தானா, இல்லை மாத்திட்டாங்களா எனச் சந்தேகப்படும் அளவு பெண்ணை அலங்காரம் செய்கின்றனர். இது ஏன்? பெண் என்ன காட்சிப் பொருளா? ஜவுளிக்கடை அலங்காரப்  பொம்மையா? தன் மகளை, அவளின் அழகை, அனைவரும் ரசிக்க வேண்டும் என்று பெற்றோர் நினைக்கிறார்களா? அல்லது அந்தப் பெண் ஆசைப்படுகிறாளா?


அதே மேடையில், மாப்பிள்ளை இரண்டு நாள் தாடியுடன் மிகவும் சாதாரணமாக நிற்பதைப் பார்க்கும் போது, நான் எப்படி இருந்தாலும் அழகு தான். ஆனால் பெண், முழு அலங்காரத்தோடு நின்றால் தான் அழகு என்ற பொது கற்பிதம் நம்மை வேதனையடையச் செய்கிறது. இந்த இடத்தில் பெண் காட்சி பொருளாகிறாள். இந்த அலங்காரங்கள், மணப்பெண்ணுக்குப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், அசெளகரியமாக இருந்தாலும், அனைத்து திருமணங்களிலும் இது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மணப்பெண், எளிமையான அலங்காரத்தில் இருந்தால், பெண்ணுக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லையோ? என புறம் பேசும் குணமும் அதிகமாகிவிட்டது.




இதே நிலையை நாம் விமானத்தில் பயணிக்கும் போதும் பார்க்கலாம். விமான பணிப் பெண்கள் அதிக ஒப்பனையோடும், அதில் பணிபுரியும் ஆண்கள் சாதாரணமாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. எந்த அலுவலகமானாலும், பொது நிகழ்ச்சியானாலும், மருந்துவமனை ஆனாலும் ஒப்பனை செய்யப்பட்ட பெண்கள் வரவேற்பில் நிறுத்தப்படுவதன் உளவியல் பின்னணி, பெண்ணை அலங்கார பொம்மையாக இந்த சமூகம் பார்க்கிறது என்பதுதான். இது பள்ளி, கல்லூரிகள் இருந்தே ஆரம்பித்து விடுவதால், சிறு வயது முதலே பெண் குழந்தைகள், ஒப்பனைக்கும், அலங்காரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். பெண்கள், அலங்காரப் பதுமைகளாகத் தான் இருக்க வேண்டும் என்று ஆண் குழந்தைகள் மனதிலும் விதைக்கப்படுகிறது. இந்த விதையானது, பெண்கள் பற்றிய  அவர்களின் கண்ணோட்டத்தை, அணுகுமுறையை நிர்ணயிக்கிறது. அதனால்தான் இந்த சமூகம் பெண்ணுக்கு உடை, நகை, அலங்காரம் தவிர வேறு ஏதும் பேசத் தெரியாது என நினைக்கிறது.


கணவன் வேலையில் இருந்து வீட்டுக்குத் திரும்பும் போது, நல்ல அலங்காரத்தோடு மனைவி வாசலில் வரவேற்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் செல்லும் போதும், அவள் என்ன உடை அணிய வேண்டும் என்பதை அவளின் கணவன் மற்றும் கணவர் விட்டார் தான் முடிவு செய்ய வேண்டும் போன்ற பிற்போக்குத்தனமான எண்ணங்களில் இருந்து இன்னும் விடுபடாமல் இருக்கிறோம். இந்த எண்ணத்தின் வெளிப்பாடு தான், திருமணத்திற்குப் பெண் தேடும் போது, பெண் வெள்ளையாக இருக்க வேண்டும், நீளமுடி வேண்டும், ஒல்லியாக இருக்க வேண்டும், பல்வரிசைச் சீராக இருக்க வேண்டும் என தேடுவதுடன், தைரியமாக திருமணத் தகவல் வலைதளத்திலும், தங்களின் இந்த அபத்தமான எதிர்பார்ப்பை பதிவிடுவதும் அதிகரித்துள்ளது.


பெண்ணை அலங்கரித்து, மாப்பிள்ளை வீட்டார் முன் நிற்க வைக்கும் அந்தப் பெண் பார்க்கும் படலமே பெண்ணை இழிவுபடுத்தும் செயல்தான். கறுத்த பெண்கள், கல்யாணச் சந்தையில் படும் வேதனைகளும், அவமானங்களும் அனைவரும் அறிந்த ஒன்று. பல இளம் பெண்களின் தாழ்வு மனப்பான்மைக்குக் காரணமாக இருப்பது அவர்களின் நிறம் தான். வெள்ளை நிறமும், அலை அலையாய் நீண்ட கூந்தலும், நளினமான நகப் பூச்சும் கொண்ட பெண் தான் அழகானவள் என்று நாம் அன்றாடம் பார்க்கும் அனைத்து விளம்பரங்களும் காட்சிப்படுத்தப்படுகிறது. நிறம் குறைந்த, குண்டான பெண்கள், திரை துறையிலும், ஊடகத் திரையிலும் எவ்வாறெல்லாம் காட்சிப்படுத்தப்படுகிறார்கள், கேவலப்படுத்தப் படுகிறார்கள் என்பதை நாம் தினம் தினம் பார்க்கிறோம்.


பெண்ணின் வெளி அலங்காரம் மட்டுமே முக்கியத்துவம் பெறும்போது, அவளின் திறமைகள், குணங்கள், ஆசைகள் மங்கி விடுகிறது. பெண்கள் தங்களின் விருப்பத்திற்கு உடை அணியக்கூடாதா? தன்னை அலங்கரித்துக் கொள்ளக் கூடாதா? என கேட்டால், கூடாது என சொல்லவில்லை. பெண்ணின் அலங்காரம், பெண்ணை காட்சிப் பொருளாக மாற்றக்கூடாது. நமக்குப் பிடித்த உடையை நாம் அணிவது, நமது சுதந்திரம்.


நமது உடை மற்றும் அலங்காரங்கள் நமது ஆளுமையின் வெளிப்பாடு. நம் ஆளுமையின் மௌன மொழி.


பெண்ணை அழகுப்படுத்தும் சிறந்த அணிகலன்கள் அவளின் தைரியம், நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை மற்றும் அவலின் செறிந்த ஞானம் ஆகியவையே, பெண்ணின் கம்பீரப் புன்னகை போல் எந்த நகையும் ஜொலிப்பதில்லை. தன்னம்பிக்கையும், தைரியமும்,சுயமதிப்பீடும், தெளிந்த சிந்தனையும், உறுதியான நோக்கமும், மனித நேயமும், சமூக அக்கறையும் உடைய பெண் எந்த அணிகலனும், அலங்காரமும் இல்லாமலேயே மிக அழகாகவும், கம்பீரமாகவும் காட்சியளிப்பாள். ஆம்... ஒவ்வொரு பெண்ணும் அழகானவள் தான்.


கட்டுரை: முனைவர் ராணி சக்கரவர்த்தி எழுதிய மனதோடு பேசுவோம் தோழி நூலிலிருந்து.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முருகனுக்குக் கிடைக்காமல் போன ஞானப்பழத்தின் கதை தெரியுமா?

news

பாஜக மாநில அளவிலான பதவியில் குஷ்பு.. விஜயதாரணிக்கு இந்த முறையும் பதவி இல்லை!

news

மத்திய அரசுக்கு நேற்று.. மாநில அரசுக்கு இன்று.. கண்டனத்திலும் பேலன்ஸ் செய்யும் ஓ.பி.எஸ்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 31, 2025... இன்று இந்த ராசிகளுக்கு நல்ல செய்தி தேடி வரும்

news

3I/ATLAS.. சூரியனை நோக்கி வரும் மர்மப் பொருள்.. வேற்றுகிரக விண்கலமா.. பூமிக்கு ஆபத்தா?

news

வரலாற்றுப் பிழை செய்து விட்டார் ஜெயலலிதா.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சால் பரபரப்பு!

news

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

1967,1977 தேர்தலைப் போல 2026 தேர்தலும் முக்கியமானதாக அமையும்: தவெக தலைவர் விஜய்!

news

மை டிவிகே... உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்தார்... தவெக தலைவர் விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்