- அரியூர் ரேணுகா நாராயணன்
தனியார் வங்கியின் உதவி மேலாளர் சந்திரசேகருக்கு ஒரு விநோதமான 'நல்ல பழக்கம்' உண்டு. தினமும் அலுவலகத்திற்கு வரும் வழியில், நடைபாதைக் குப்பைகளை எடுத்துத் தொட்டியில் போடுவது, கீழே கிடக்கும் ஆணி, உடைந்த பாட்டில்களை அப்புறப்படுத்துவது எனச் சாலையைச் சுத்தப்படுத்துவார்.
ஆனால், உடன் பணியாற்றும் சக அதிகாரிகள் அவரைப் பார்த்துச் சிரிப்பார்கள். "சுத்தமா இருக்கிறது நல்லதுதான் சார்... ஆனா இதுக்குன்னு ஒரு துப்புரவுப் பணியாளர் இருக்காரே! நீங்க ஒரு பெரிய பேங்க் ஆபீசர், ரோட்டுல குப்பையெல்லாம் பொறுக்கிட்டு இருக்கீங்க... இது என்ன பழக்கம்?" என்று ஏளனம் செய்வார்கள். சந்திரசேகர் மென்முறுவலுடன் தன் வேலையைத் தொடர்வார்.
அன்று திங்கட்கிழமை காலை. தலைமை அலுவலகத்திலிருந்து வரவிருக்கும் பொது மேலாளரின் ஆய்வுக் கூட்டத்திற்காக அந்த வங்கியே பதற்றத்தில் இருந்தது. பெரிய அதிகாரியின் காரை வரவேற்கக் கிளை மேலாளரும் மற்ற ஊழியர்களும் வாசலிலேயே பூங்கொத்துடன் காத்திருந்தனர்.
சாலையின் வளைவில் பொது மேலாளரின் சொகுசு கார் வந்து திரும்பியபோது, சாலையோரத்தில் உடைந்த கண்ணாடி பாட்டிலின் கூர்மையான பாகம் ஒன்று டயரை நோக்கி மின்னியது. அந்தக் கார் அதன் மேல் ஏறியிருந்தால், டயர் வெடித்துப் பெரும் விபத்து நேர்ந்திருக்கக்கூடும்.

அப்போது வழக்கம்போல நடந்து வந்த சந்திரசேகர், சற்றும் யோசிக்காமல் தன் கைக்குட்டையை மடித்து, அந்த உடைந்த கண்ணாடித்துண்டுகளை நொடிப்பொழுதில் கையிலெடுத்து ஓரமாக இருந்த தொட்டியில் போட்டார். கார் எவ்வித ஆபத்துமின்றி மென்மையாக வந்து நின்றது.
காரிலிருந்து இறங்கிய பொது மேலாளர், சந்திரசேகரின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டார்.
"தம்பி... உள்ளே இருந்தபடியே உன் செயலைப் பார்த்தேன். கார் டயர் பஞ்சராகியிருந்தா பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கும். அடுத்தவனுக்கு ஆபத்து வந்துடக் கூடாதுன்னு ஒரு நொடியில யோசிச்சுச் செயல்பட்டியே, இது வெறும் தூய்மைப் பணி இல்ல... பிறர் நலன் காக்கும் மிக உன்னதமான 'நல்ல பழக்கம்'!" என்று மனதாரப் பாராட்டினார்.
சுற்றி நின்று வேடிக்கை பார்த்த சக ஊழியர்களின் தலைகள் வெட்கத்தில் தானாகவே குனிந்தன. எளிய பழக்கமும் பிறர் காக்கும்போது மாபெரும் தர்மமாகிறது என்பதை அனைவரும் உணர்ந்தனர்!
(அரியூர் ரேணுகா நாராயணன், இல்லத்தரசி. திருச்சியைச் சேர்ந்தவர். பிஏ தமிழ் இலக்கியம் பயின்றவர். நகைச்சுவைத் துணுக்குகள், சமூகம் சார்ந்த கட்டுரைகள், கதைகள், கவிதைகள் உள்ளிட்டவற்றை எழுதி வருகிறார். பல்வேறு முன்னணி தமிழ் நாளிதழ்கள், வார இதழ்களில் அவரது படைப்புகள் வெளியாகியுள்ளன)
பரிசு
Short Story: நல்ல பழக்கம்!
Chettinadu Recipes: வாய்க்குச் சுவையான ருசியில் எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி
பெரம்பூர் தொகுதி வெற்றியை எதிர்த்த வழக்கு : முதல்வர் விஜய்யின் மனு தள்ளுபடி
அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தல் நடத்த தடையில்லை ; 3 தொகுதிகளுக்கு தடை நீடிப்பு
என் காதல்
உன் காதணி பாடும் கவி என்னை கவிஞனாய் மாற்றுதடி!
இரவு!
முன்கோபம்
{{comments.comment}}