என் காதல்

Nov 27, 2026,10:56 AM IST

- கண்ணகி அண்ணாதுரை


நீ என்னுடன் வாழ்ந்த காலங்கள் நான்கு வருடங்கள் கூட இல்லை. ஆனால், என்னை பெற்றவர்கள், நண்பர்கள் என யாரும் பார்த்திடாத என் கண்ணீர் துளிகளையும், வெட்கச்சிரிப்பையும், வார்த்தைகள் இல்லா மெளன வலிகளையும் பார்த்துள்ளாய். நீ வந்தபின் தனிமை என்பது எனக்கு வார்த்தையாகத்தான் தெரிந்தது. நீ என்னைவிட்டுப் போனபின் தனிமை என்பது வலியாக இருக்கிறது. 


முதன்முதலில் நீ என்னிடம் வந்த நாள் என் வாழ்க்கையில் நான் மறக்கமுடியாத நாள். உன்னைப் போல் என்னிடம் அதிகநேரம் செலவழித்தவர்கள் யாரும் இல்லை. உடன் இருக்கும் தருணங்களில் பார்த்துக்கொண்டதில்லை. 


உன்னால், நான் தலை நிமிர்ந்த தருணங்கள் அதிகம். தனிமை என்ற ஒரு இருள் என்னைச் சூழாமல் எப்போதும் உடன் இருந்தாய்.




நீ வந்த பின்னேதான் எனக்கும் திறமை உள்ளது என்று என்னை பெற்றவர்கள் நம்ப ஆரம்பித்தார்கள். பல அவமானங்கள், இழிசொற்களுக்குப் பின்னே என் கைகளில் நீ கிடைத்தாய். 


யார் உன் மீது கை வைத்தாலும் சட்டென்று கோவம் வரும். என் உடன் பிறந்தவன் உன் மீது கை வைத்த போதுகூட சண்டை பிடித்துள்ளேன். மழை, வெயில் என்று அனைத்து நாட்களிலும் உன்னை,  பாதுகாத்தேன். உன்னை சுமக்கும் போது என் கைகள் வலிகளை உணர்ந்தது இல்லை. 


என் நினைவுகளை என்னைவிட நீதான் அதிகம் சேர்த்து வைத்தாய். என் மனதில் இருந்து மறைந்துபோன சில முகங்களையும் நீ பத்திரப்படுத்தியுள்ளாய். மறக்க வேண்டும் என்று நினைக்கும் முகங்களையும் பத்திரப்படுத்தி இம்சை செய்வாய். 


என்னைவிட அதிகம் தெரிந்து கொண்ட உன்னை, எப்போதும் என் கட்டுப்பாட்டில் வைத்திருப்பேன். எதை எப்போது செய்ய வேண்டும் என்று உனக்கு வேலை கொடுப்பது நானாகத்தான் இருந்தேன். சில நேரங்களில் உன் வலிகளை என்னிடம் பகிருவாய். சில நாள் 24 மணிநேரம்கூட என்னுடன் என் பேச்சைக்கேட்டு அமைதியாய் ஒத்துழைத்தாய்.


தனிமையில் வாடும் நேரங்களில் தோழானாய் தோள் கொடுப்பாய். பேயின் பயம் கருதி இருட்டில் துயில மறுத்து உன் வெளிச்சத்தில் உறங்கிய இரவுகள் அதிகம். என் திறமைகளை வெளியில் தெரிவித்தாய். நீ என்னுடன் இருந்த நேரமெல்லாம் கர்வம் கொண்டுள்ளேன்.


பழகியவர்கள் என்னை விட்டுப் பிரிந்தபோதும், உயிரை வேரோடு அறுத்தெறிந்த துரோகங்களைச் சந்தித்தபோதும். அப்பா மடி தேடி ஆறுதலாய் தலை சாயும் போதும், இசையுடன் மனதை அமைதியாக்கினாய். நாளை என்ற நம்பிக்கையைக் கொடுத்தாய். பசி என்று கதறும் போதும் தாமதமாகவே உனக்கு உணவளிப்பேன். பல நேரங்களில் வைரஸால் அவதிப்படும்போதெல்லாம் காலநேரம் பார்க்காமல் ஹார்டுவேர் டாக்டரிடம் கொண்டுபோய் உள்ளேன். 


மனதிலிருந்து அழிக்கமுடியாத பல நினைவின் புகைப்படங்களை உன்னிலிருந்து மொத்தமாக ஷிப்ட் டெலிட் கொடுத்து அழித்துள்ளேன். படிப்புக்காக உன்னை பயன்படுத்தியதைவிட பொழுதுபோக்கு, வேலை, திறமையை நிரூபிக்க என்றுதான் அதிகம் பயன்படுத்தியுள்ளேன். 


பெற்றவர்கள்கூட என் ஆசையை நிறைவேற்ற காலதாமதம் எடுப்பார்கள்; ஆனால், நீ என் எண்ணங்களைப் புரிந்துக்கொண்டு, அதற்கு ஏற்றார்போல் புகைப்படங்களை வடிவமைக்க உதவுவாய். உன்னைப்போல் ஒரு நண்பன் யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. உன்னைத் தவறவிட்டதே என் பெரிய வலியாக இருக்கிறது.


சிறிது கணம்தான் இருக்கும் நீ மெளனமான வினாடி, உன்னைத் தடவிக் கொடுத்த என் கைகளில் உயிர் இல்லை. மனதில் இருந்த வலி, கண்ணீராய் வெளிவந்தது. “இதுக்கு எதுக்குகா அழறீங்க சரி பண்ணிடலாம், சின்ன பிரச்சனைதான்” என்று உடன் இருந்த தம்பிகள் ஆறுதல் கூறினார்கள். 


என் வலிகளையும் மெளன கண்ணீரையும் உன்னைத்தவிர யாரும் புரிந்துக் கொண்டிருக்கமாட்டார்கள். என்னைச் சுற்றி நின்ற அனைவருக்கும் நீ வெறும் மடிக்கணினி. உன் மீது எனக்கிருந்த காதலை பைக்/ திறன்பேசி மீது காதல் கொண்டவர்களால் மட்டுமே புரிந்துக் கொள்ள முடியும்.


(கட்டுரையாளர் கண்ணகி அண்ணாதுரை, சிங்காரச் சென்னையில் வசித்து வருபவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்