அறுபதிலும் ஆசைகள் வரும்!

Jun 05, 2025,12:43 PM IST

- முனைவர் ராணி சக்கரவர்த்தி


பொதுவாக பெண்கள் தன் தேவைகள், உரிமைகள் மற்றும் தன்நிலை உணராமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், அதிலும் 60 வயதைக் கடந்த பெண்கள் தியாகச்சுடர்களாகவே வாழப்பழகி இருக்கிறார்கள். வயதான பிறகும் தன்னைப் பற்றியும், தன் சந்தோஷத்தைப் பற்றியும் சிறிதும் சிந்திக்காமல் சமையல் அறையில் அடைப்பட்டுக் கிடக்கிறார்கள். சமையல் அறையையும், குடும்ப நிர்வாகத்தையும் சில பெண்களுக்கு விட்டுக் கொடுக்க மனமில்லை. சில பெண்களுக்கு விட முடியாத சூழல் ஏற்படுகிறது. பேரக் குழந்தைகளை வளர்க்கும் பெரிய பொறுப்பு, பல பாட்டிகளின் மேல் விழுகிறது. 


பல உடல் உபாதைகளோடு பேரக் குழந்தைகளை வளர்க்கும் பாட்டிகளை பல வீடுகளில் பார்க்க முடியும். வாழ்க்கையில் சரியான திட்டமிடல் இல்லாமல் போவதால் பல பெண்கள் தங்களின் வயதான பருவத்தில் மகன்களையும், மருமகள்களையும் சார்ந்து வாழ  வேண்டியுள்ளது. அந்த சார்பு நிலையில், தனக்கான மரியாதை குறைந்துவிட்டது போன்றும், தான் தனித்து விடப்பட்டதைப் போன்றும், தான் பிறருக்கு பாரமாய் இருப்பது போலவும் தோன்றுவதால், இவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். இதிலிருந்து விடுபட என்ன வழி?


என்னுடைய தோழி, என் தாயை விட இரண்டு வயது சிறியவர். எழுபைதக் கடந்தவர். அரசு அதிகாரியாக இருந்து பணி ஓய்வு பெற்றவர். ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள், தனித்து வாழ்ந்த போராளியான இவரின் அன்பும், கண்டிப்பும் கலந்த வளர்ப்பு முறையில் வளர்ந்ததால்,  இவரின் மகளும், மகனும் நன்கு படித்து அரசு வேலையில் இருக்கும் இவர்கள், திருமணமாகி குழந்தைகளோடு நல்ல நிலையில் உள்ளார்கள். பணி ஓய்வின் போதே என் தோழி எடுத்த உறுதியான முடிவு, நான் தனியாகத்தான் வசிப்பேன். என் வீடு எனக்கான இடம், ஒரு தாய்க்கான கடமையை நான் முடித்துவிட்டேன். இனி எனக்கான வாழ்க்கையை வாழப் போகிறேன் என்பது தான். அதன்படி அவரின் விருப்பத்திற்கு, தேவைக்கு ஏற்ப வீட்டை வடிவமைத்துக் கொண்டார். வீட்டைச் சுற்றி செடி கொடிகள், முற்றத்தில் ஊஞ்சல், தனக்கே தனக்கான சமையல் என வாழ்க்கையில் தவறவிட்ட அனைத்தையும் மீட்டெடுத்திருக்கிறார். உறவுகளும், தோழமைகளும் கூடும் இடமாகத் தன் இல்லத்தை மாற்றி உள்ளார்.




விசேஷ நாட்கள் வீடு நிரம்பி இருக்கும் வயதானவர்கள், சமையலறையை, இளையவர்களுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, முற்றத்தில் அமர்ந்து கதையடிப்பார்கள், பார்க்கவே ஆனந்தமாக இருக்கும். என் தோழி, தன் மகன் மகளுக்கு உதவித் தேவைப்படும் போது சென்று பத்து நாட்கள் தங்கி இருந்து உதவி செய்துவிட்டு தன் வீடு திரும்பி விடுவார். தோழிகளோடு சேர்ந்து பயணிப்பது அவருக்கு மிகவும் பிடிக்கும். பயணத்தை திட்டமிட்டு அனைவரையும் ஒருங்கிணைந்துச் செல்வதும் அவர்தான். குழந்தையின் குதூகலிப்பும், தாயின் கனிவும் ஒரு சேரப்பெற்ற, அவரோடு பயணிப்பது, இதயத்திற்கு நெருக்கமான உணர்வைத் தரும். புத்தகத் திருவிழா, பொருட்காட்சி, தரமான சினிமா, சுவையான உணவகம், இளையராஜா இசைக் கச்சேரி என எதையும் தவறவிடுவதில்லை. அவரின் உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருப்பதால், அவர்  இளமையாகவே தெரிவார். அதனால் யாராவது அவரைப் பாட்டி என்று கூப்பிட்டால் கோபம் தலைக்கேறும்.


அவரின் உடல்நிலை பற்றி புரிதலும், அக்கறையும் அவருக்கு இருப்பதால் தினமும் நடைபயிற்சி, சத்தான உணவுடன் முறையான பரிசோதனை மற்றும் மருத்துவமனைகளையும் முறைப்படுத்திக் கொள்வார். பொதுநலச் சேவையில் நாட்டம் அதிகம் இருப்பதால், தான் இருக்கும் பகுதியில் அனைத்து பொது வேலைகளையும் முன்நின்று செய்வது, பொங்கல், புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது, மரம் நடுவது, பகுதி மக்களின் சுக துக்கங்களில் பங்கேற்பது என அந்தப் பகுதியின் முடிசூடா மாமியாக வலம் வருவார். தன் மனதை புதுப்பித்துக் கொள்ள நிறைய வாசிப்பார். நூலகம் செல்வது அவரை உற்சாகப்படுத்தும். ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்வது அவரை மேலும் முற்றாகப்படுத்தும். நேர்த்தியான உடை அணிவது, சுறுசுறுப்பான நடை, கனிவான பார்வை, கண்டிப்பான கட்டளைகள், நேர்த்தியான செயல்பாடு, நேரம் தவறாமை, சுய நேசிப்பு, நேர்மை, நேர்மையான எண்ணம்,  மன உறுதி, தெய்வ பக்தி இவை அனைத்தும் ஒரு சேரப்பெற்றவர் தான் என் தோழி மொகரம் பீவி.


என் தோழியின் வாழ்க்கை நமக்கு சொல்லித் தரும் பாடம் 60களில் நமக்கு நிறைய தேவைகள், ஆசைகள் இருக்கும். நம் வாழ்க்கையின் எல்லைகளையும், வரையறைகளையும் நாமே நிர்ணயிக்க வேண்டும். நமக்கான வாழ்க்கையை வாழ முயற்சி எடுக்க வேண்டும். பிள்ளைகளிடம் பேசி நம் தேவைகளை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.


நம் மனதுக்குப் பிடித்த விஷயங்களில் ஈடுபட வேண்டும். சுயசார்போடு இருக்க பழக வேண்டும். என் பிள்ளைகள், நான் இல்லை என்றால் மிகவும் கஷ்டப்படுவார்கள், திணறிப் போவார்கள் என்று நினைப்பதே மிகப்பெரிய அபத்தம். நீங்கள் இருந்தாலும், இல்லை என்றாலும் அவர்கள், அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள். பிள்ளைகளை அவர்களின் திருமணத்திற்குப் பிறகும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, அவர்களின் பிரச்சனைகளை நம் தலையில் போட்டுக் கொள்வது, அவர்களுக்கான முடிவுகளை நாமே எடுப்பது போன்றவை அவர்களை தனித்து இயங்க விடாமல் செய்வதுடன், உங்களின் மன நிம்மதியைக் கெடுத்து உறவுகளிலும் விரிசலை ஏற்படுத்தும்.


மருமகளைச் சார்ந்து இருக்கவும் வேண்டாம், கட்டுப்படுத்தவும் வேண்டாம், கற்பிக்கவும் வேண்டாம். உங்கள் மகளுக்கு தேவை என நீங்கள் எதிர்பார்க்கும் உரிமையும், சுதந்திரமும், மருமகளும் பெற வேண்டும். எனவே அவர்கள், அவர்களின் வாழ்க்கையை வாழட்டும். நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ முயற்சி செய்யுங்கள். உங்களின் ஆசைகளை, கனவுகளை கண்டறிந்து புத்துயிர் கொடுங்கள். குடும்பப் பொறுப்புகளை இறக்கி வையுங்கள். ஓடி, ஓடி வேலை செய்தது போதும், பிறருக்காக வாழ்ந்தது போதும், உங்களுக்காக வாழத் துவங்குங்கள். மனதுக்குப் பிடித்த  பாடல் கேட்டுக் கொண்டே தேநீர் அருந்துங்கள். உங்களுக்குள் புதைக்கப்பட்ட திறமைகளைத் தூசி தட்டி எழுப்புங்கள். தியானம் பிடித்தால் தியானத்தில் அமருங்கள். நடனம் பிடித்தால் நடனமாடுங்கள். உங்களுடைய உணவு, உங்களுடைய நேரம், உங்களுடைய பணம் என எதுவாக இருந்தாலும், பிறருக்காகத் தியாகம் செய்யாதீர்கள். எந்த நொடியும் மீண்டும் கிடைக்காது. ஒவ்வொரு நொடியும் அனுபவித்து, மகிழ்ந்து வாழ முயற்சி செய்யுங்கள். சோகம், புலம்பல், கோபம், ஏமாற்றம் என உங்களின் முதுமை சுருங்க வேண்டாம்.


சிறகை விரித்தால் வானமே எல்லை...!


கட்டுரை: முனைவர் ராணி சக்கரவர்த்தி எழுதிய மனதோடு பேசுவோம் தோழி நூலிலிருந்து.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முருகனுக்குக் கிடைக்காமல் போன ஞானப்பழத்தின் கதை தெரியுமா?

news

பாஜக மாநில அளவிலான பதவியில் குஷ்பு.. விஜயதாரணிக்கு இந்த முறையும் பதவி இல்லை!

news

மத்திய அரசுக்கு நேற்று.. மாநில அரசுக்கு இன்று.. கண்டனத்திலும் பேலன்ஸ் செய்யும் ஓ.பி.எஸ்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 31, 2025... இன்று இந்த ராசிகளுக்கு நல்ல செய்தி தேடி வரும்

news

3I/ATLAS.. சூரியனை நோக்கி வரும் மர்மப் பொருள்.. வேற்றுகிரக விண்கலமா.. பூமிக்கு ஆபத்தா?

news

வரலாற்றுப் பிழை செய்து விட்டார் ஜெயலலிதா.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சால் பரபரப்பு!

news

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

1967,1977 தேர்தலைப் போல 2026 தேர்தலும் முக்கியமானதாக அமையும்: தவெக தலைவர் விஜய்!

news

மை டிவிகே... உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்தார்... தவெக தலைவர் விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்