- ஆ.வ. உமாதேவி
பாடல்களை கேட்டல் ஒரு சுகமான அனுபவம் தான். அதிலும் கருத்துள்ள, சிறந்த பாடல்களை கேட்பது நம் உணர்வுகளை மீட்டு எடுக்கும் ஒரு அற்புத சுகம் தான். இதை உணர்ந்து கொண்டால் ஒழிய, சொல்ல வார்த்தைகளை தேட வேண்டி இருக்கும்.
2004 ஆம் ஆண்டு மாலை, பள்ளியை விட்டு வீட்டுக்கு ஒரு தனியார் பேருந்தில் பயணம். ஜன்னலோரத்தில் உட்கார்ந்து கொண்டு, வெளியில் உள்ள இயற்கை பசுமையை ரசித்தவாறு, சுகமான சுத்த காற்றை சுவாசித்தபடி, அன்றைய வகுப்பறை நிகழ்வுகளை அசை போட்டபடி வந்த, என் காதில் ஒரு அருமையான பாடல் வந்து விழுந்தது. அது பேருந்தில் இருந்த ஒலிநாடாவில் ஒலித்தது. அந்தப் பாடலை முழுமையாக உள்வாங்கி, அணு அணுவாய் வரிவரியாய் அனுபவித்து ரசித்தேன். அப்போது அந்தப் பாடலை கேட்டபோது அதை பாடியவர் யார்? எழுதியவர் யார்? என்ற எந்த தகவலும் எனக்குத் தெரியாது. ஆனால், பாடல் வரிகள் என்னை மிகவும் பாதித்தது.

ஒவ்வொரு சொல்லும் என் மனதில் ஆணி அடித்தார் போல் பதிந்தது மீண்டும் மீண்டும் கேட்க ஆவலை தூண்டிய பாடல். தந்தையை இழந்த, ஏழ்மையில் வாடும் ஒரு பெண் குழந்தை, விடுதியில் தங்கி படிக்கும்போது வீட்டு வேலை செய்து, ஒற்றைப் பெற்றோராக தன்னை காப்பாற்றும், தன் தாய்க்கு கடிதம் எழுதுவதாக அமைந்த பாடல். இப்போது நீங்கள் அது எந்த பாடல் என்பதை கண்டுபிடித்து இருப்பீர்கள். உங்களுக்கும் பிடித்த பாடல் தானே!
"அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்" என்ற பாடல் தான் என் கண்களில் கண்ணீரை வரவழைத்து என்னை உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்த பாடல். இது ஒரு நாட்டுப்புற பாடல் ஆகும். இதை எழுதியவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. அவருக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் பாடலை பாடியவர் சின்னப்பொண்ணு அவர்கள். சின்னப்பொண்ணு அவர்கள் பாடியதாலேயே, இது மிகவும் பிரபலமானது. வேறு பல பாடகர்களும் அருமையாக பாடியுள்ளனர்.
மரிக்கொழுந்தே என்னும் ஆல்பத்தில் இடம்பெற்ற பாடல் இது. இத்தனை தகவல்களும் எனக்கு பாடலை கேட்டபோது தெரியாது. ஆனால் பாடல் மட்டும் மிகவும் பிடித்திருந்தது. அது கைபேசி, கைகளில் தவழாதகாலம். அதனால் எந்த தகவலும் தெரிந்து கொள்ள முடியவில்லை. அந்தப் பாடலை மீண்டும் கேட்க விருப்பப்பட்டும் கேட்க வாய்ப்பு கிடைக்கவில்லை. 2019ல் தான் நான் ஆண்ட்ராய்டு போன் வாங்கினேன். அதற்குப் பிறகு ஆசை தீர சின்ன பொண்ணு அம்மாவின் குரலில் பாடலை பலமுறை கேட்டு ரசித்தேன்.
பள்ளிக்கூடம் சேர்க்கனுன்னு பாத்திரத்தை வித்தீங்களே!
எந்த பானையில் சமைக்கிறேன் னூ எழுதுங்க!
தோட்டக்கார அய்யா வீட்டுல பழைய சட்டை தருவதா சொன்னீங்களே!
வரும்போது மறக்காம வாங்கி வாங்கம்மா!
பாத்திரம் தேய்த்த கை எல்லாம் காயமுன்னு சொன்னாங்க. நெஞ்சு வேதனை எனக்கு நீ! மஞ்சப்பத்தும் போட்டுக்கம்மா.
என்ற வரிகள் உயிரையே உரைய வைக்கும், கலங்காத உள்ளத்தையும் கலங்க வைக்கும் பாடல் வரிகள். வறுமையில் உள்ள குழந்தைகள் இந்த ஒரு பாடலை, நெஞ்சில் நிறுத்தினால் போதும். பெற்றோரின் கஷ்டம் புரிந்து, நன்கு படித்து, முன்னேறுவர். அதனால் தான், ஏழ்மையிலிருந்து பள்ளிக்கு வரும் எனது கிராமத்து குழந்தைகளுக்கு, அவ்வபோது இப்பாடலை பாடி காட்டுவேன். பாடல் வரிகளின் பொருளை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி ஊக்கப்படுத்துவேன்.
சமீபத்தில் இந்தப் பாடலை எழுதியவர் சீர்காழி தாலுகா, வைத்தீஸ்வரன் கோயில் அருகில் உள்ள கதிராமங்கலம் கிராமத்தை சேர்ந்த, நீலமேகம் என்று அறிந்தேன். அவருக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை- என்னும் அவ்வையாரின் பாடல் வரிகளை இப்பாடல் நினைவூட்டுகிறது.
இந்தப் பாடல் வரிகள் ஒரு ஏழை தாயின் வாழ்க்கையை கண் முன்னே காட்சியாய் கொண்டு வந்து நிறுத்துகிறது. எத்தனை முறை கேட்டாலும் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் பாடல். பொறுப்புணர்ந்து படிக்கும் அந்த மகளை போல நம் பிள்ளைகள் அனைவரும் இருந்துவிட்டால், வளமான இந்தியாவை விரைவில் காணலாம்.
(ஆ.வ. உமாதேவி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார்)
விஜய்யிடம்.. காலை 11 மணி முதல் 4 மணி வரை.. சிபிஐ விசாரணை.. நாளை விசாரணை இல்லை என தகவல்
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பாஜகவினர் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது: செல்வபெருந்தகை பேட்டி!
தமிழகத்தில் கொலை நடைபெறாத நாட்களே இல்லை... திமுக ஆட்சியில் யாருமே பாதுகாப்பை உணரவில்லை: அண்ணாமலை
புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்: ஆர்ஏசி, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் கிடையாதாம்
பாஜகவால் மட்டுமே கேரளாவில் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்: மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி
2026 பொங்கல் எப்போது? ஜனவரி 14-ஆ அல்லது 15-ஆ? - ஒரு தெளிவான விளக்கம்
தமிழகத்தில் ஜனவரி 15 வரை கடும் குளிர்: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
திமுக.,வை வீழ்த்த பாஜகவின் 90 நாள் அதிரடித் திட்டம்...நிதின் நபின் வேண்டுகோள்
{{comments.comment}}