பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில்.. தெற்கு திசை நோக்கிய ஆலயம்!

Jun 19, 2026,12:42 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் பாதையில் 12 கிலோமீட்டர் தொலைவில் பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆலயம் தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது இந்த ஆலயத்தின் மிகச் சிறப்பான விஷயம் ஆகும். இக்கோவிலை பற்றிய  சுவாரஸ்யமான தகவல்களை காண்போம்...


எங்கும் நிறைந்துள்ள அன்னை பரா சக்தியை பூரணி என்றும், ராஜராஜேஸ்வரி என்றும், முத்தொழில்கள் செய்யும் இடத்தில் பிராமினி, வைஷ்ணவி, ருத்ராணி என்றும், ஈஸ்வரனுக்கு ஒப்பாகும்போது அவளுக்கு துர்க்கை என்றும்,கால  சொரூபிணியாக  கருதப்படும் போது அவள்  காளி,மகாமாரியம்மன் என்றும் அழைக்கப்படுகிறாள். 


இவ்வாறு ஒரு தெய்வம் வேறுபட்ட பல பெயர்களால் அழைக்கப்பட்டாலும் எல்லாம் சக்தி மையமே. அதிலும் கொங்கு நாட்டின் வடமேற்கு எல்லை அருகில் வீற்றிருக்கும் அருள்மிகு  பண்ணாரி மாரியம்மன் சக்தி மிகவும் வியப்பிற்குரியது.


இக்கோவில் அமைந்துள்ள இடம் காடுகள் அடர்ந்த தோப்பாக ஒரு காலத்தில் இருந்தது. இங்கு கிராம மக்கள் தங்கள் மாடுகளை மேய்க்க இந்த காட்டிற்கு வருவது வழக்கம். அதில் ஒரு பசுமாட்டை அந்த பசுவின் சொந்தக்காரர் மாலையில் பால் கரக்க முற்பட்டபோது அதன் மடியில் பால் இல்லாததை கண்டு வியந்தார். தினமும் ஒரு புதினுள் சென்று பால்  சுரந்து விட்டு வருவதை கண்டு திகைத்தார். உடனே அந்த இடத்தில் சென்று பார்க்க அங்கு புற்கள் சூழ்ந்த ஒரு புற்றும்,அதன் அருகில் ஒரு லிங்கமும் இருப்பதைக் கண்டு வியப்பில் திக்கு முக்காடினார். உடனே ஊர் மக்களிடம் சென்று அவர் கூற,ஊர் மக்கள் யாவரும் அந்த அதிசயத்தை காணவந்தனர். 




அப்போது கூட்டத்திலிருந்து ஒருவருக்கு அருள் வந்து தன்னை "பண்ணாரி மாரியம்மன் "ஆக கொண்டாடுமாறு அருள்வாக்கு கூற, மக்களும் அவ்வாறே செய்தனர்.கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து அதே இடத்தில் பச்சிலையால் பந்தல் அமைத்து அம்மனை வழிபடத் தொடங்கினர். பிறகு ஓலை கொண்டு கூரை வைத்து அம்பிகை வழிபட்டு வந்தனர்.சில காலம் கழிந்து ஓடுகளால் ஆன கூரை அமைத்து பின் கோபுரத்துடன் கூடிய அம்பிகையின் கோவில் கட்டப்பட்டது.


மைசூருக்கு செல்ல வனப்பகுதியில் வண்ணாரக்காடு என்ற ஊரில் இருந்து ஒரு பாதை உள்ளது. இந்த வழியே வியாபாரிகள்  பொதி மாடுகளில் வியாபாரத்திற்கு பொருட்களை ஏற்றி செல்வர்.அப்போது இரவு நேரத்தில் இக்கோவிலில் தங்குவார்கள்.அந்த சமயம் ஒருவருடைய கனவில் அம்பாள் தோன்றி,அன்பர்களே நான் உங்களுடைய துணையாய் வந்தேன். இங்கே பண்ணாரி மாரி என எழுந்தருளியுள்ளேன். உங்கள் வியாபாரம் செழிக்கும். கவலை வேண்டாம் எனக் கூறியதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.


அம்பிகைக்கு பால் சுரந்த பசுவின் சொந்தக்காரர் வெள்ளியம்பாளையம் தனகார போரப்ப கவுண்டர் வம்சத்தினர். இந்த வம்சத்தினர் 'தேவராடி குடும்பம்' என்ற பெயர் வழங்கி அழைக்கப்படுகின்றனர். இவர்களே ஒக்கலியக் குடியான வம்சத்தினர் ஆவர்.


எனினும் பண்ணாரி மாரியம்மன் குறித்த பழைய புராணமோ, சரித்திரமும் இல்லை என்று கூறப்படுகிறது. சிலர் கீர்த்தனை,வழிநடை சிந்து முதலியவை எழுதியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.


கோவில் சிறப்புகள்:


இங்குள்ள அம்மன் எந்த ஒரு சிற்பியின் கைவண்ணமும் இன்றி இயற்கையாகவே தோன்றிய சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.மற்ற அம்மன் கோவில்களை போல் அல்லாமல்,இங்கு அம்மனின் சன்னதியில் உள்ள புற்று மண் தான் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. பண்ணாரி மாரியம்மன் கோவிலின் பிரசித்தி பெற்ற முக்கியமான விசேஷம்.

ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், பௌர்ணமி நாட்களிலும் பிற விசேஷ காலங்களிலும் அலங்கார ஸ்வரூபிணியாக ஜொலிக்கும் அன்னை பண்ணாரி மாரியம்மன் மனதார வேண்டி தரிசிக்க நமக்கு ஏற்படும் தீமைகள் யாவும் அகன்று நலம் பிறக்கும். இத்திருத்தலத்திற்கு வந்திருந்து  அம்பாளை  மனமுருக வேண்டி கோவிலில் வழங்கப்படும் அம்மன் தீர்த்தத்தை பருகிட, கண் சம்பந்தப்பட்ட வியாதிகள் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதி உள்ளவர்கள் அம்பிகையின் அருளால் அனைத்தும் குணமாகிறது.


கம்பீரமான ராஜகோபுரம் காட்சி தரும் திருக்கோவிலின் உள்ளே தெற்கு முகமாய் அமர்ந்து தரிசனம் தருகிறாள் பண்ணாரி அம்மன். பல கோடி புண்ணியங்கள் சேர்ந்திடவும் பண்ணாரிக்கு வந்து மாரியம்மனை தொழுது வேண்டுவோர்க்கு  எப்பொழுதும் அருள் பாலிக்கிறாள். பண்ணாரி  அம்மனை தரிசிக்க நாள்தோறும் பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.


பிரசித்தி பெற்ற குண்டம் திருவிழா :


பண்ணாரி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 20 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.


வெள்ளிக்கிழமையான இன்று பண்ணாரி அம்மன் நம் அனைவருக்கும் நல் அருள் புரிவாளாக.

 

மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கான விசா கட்டணம் அதிரடி உயர்வு!

news

சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன்?...இபிஎஸ் சரமாரி கேள்வி

news

தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி

news

மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

news

'தடை நியாயமானதே..' டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்க மறுப்பு!

news

பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில்.. தெற்கு திசை நோக்கிய ஆலயம்!

news

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்

news

ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து

news

முதல் முறை வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு இபிஎஃப் ரூ.15,000 ஊக்கத்தொகை

அதிகம் பார்க்கும் செய்திகள்