மும்பை: கடந்த சில ஆண்டுகளாக மந்தமாக இருந்த பாலிவுட் திரையுலகம், 2026-ன் தொடக்கத்திலேயே மிகப்பெரிய எழுச்சியைக் கண்டுள்ளது. தியேட்டர்களுக்கு மக்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்துள்ளது. இதற்குக் காரணம் 2 பிளாக்பஸ்டர் படங்கள்.
இந்த இரண்டு முக்கியத் திரைப்படங்களும், இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. சமீப காலமாக கோலோச்சி வந்த தெலுங்குப் படங்கள் சற்று தொய்வடைந்துள்ள நிலையில் இந்தி மீண்டும் எழுச்சி பெற ஆரம்பித்துள்ளது, இந்தித் திரையுலகையும், அதன் ரசிகர்களையும் உற்சாகத்தில் மூழ்கடித்துள்ளது.
சன்னி தியோல், வருண் தவான் மற்றும் தில்ஜித் தோசாஞ்ச் நடிப்பில், அனுராக் சிங் இயக்கத்தில் உருவான பார்டர் 2, கடந்த ஜனவரி 23 அன்று வெளியானது. 1971-ஆம் ஆண்டு நடந்த ஆபரேஷன் செங்கிஸ் கான் பின்னணியில் உருவான இப்படம், பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பி வருகிறது.
வெளியான மூன்றே நாட்களில் ₹121 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. குறிப்பாக, முதல் ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் ₹57.20 கோடி ஈட்டியுள்ளது. தற்போது இப்படம் ரூ. 300 கோடியை வசூலில் தாண்டி அதிர வைத்துள்ளது.
பெருநகரங்கள் மட்டுமின்றி, சிறு குறு நகரங்களிலும் இந்தப் படத்திற்குப் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. குடியரசு தின விடுமுறை இப்படத்தின் வசூலுக்குப் பெரும் பலமாக அமைந்தது.
பார்டர் 2 படத்திற்கு முன்பு வசூலில் வேட்டையாடிய படம் துரந்தர். 2025 டிசம்பர் இறுதியில் வெளியான ரன்வீர் சிங் மற்றும் அக்ஷய் கண்ணாவின் துரந்தர், பாலிவுட் வரலாற்றிலேயே ஒரு மைல்கல்லாக மாறியுள்ளது.
இப்படம் வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்ட நிலையிலும், உலகளவில் இப்படம் சுமார் ₹1,240 கோடி வசூலித்து மலைக்க வைத்துள்ளது. ஹிந்தித் திரையுலகின் டாப்-10 படங்களில் ஒன்றாக இது இடம்பிடித்துள்ளது. ரன்வீர் சிங்கின் திரைப்பயணத்தில் இது மிக முக்கியமான வெற்றியாகக் கருதப்படுகிறது.
தொடர்ச்சியான இந்த இரண்டு மெகா ஹிட் வெற்றிகளால் பாலிவுட் தயாரிப்பாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இது குறித்து பிரபல இயக்குனர் கரண் ஜோஹர் மகிழ்ச்சி தெரிவிக்கும்போது, பாலிவுட் மீண்டும் தனது பழைய பலத்துடன் மீண்டு வந்துவிட்டது எனக் கொண்டாடியுள்ளார்.
திரையரங்குகளில் பிரம்மாண்டமான காட்சிகளைக் கொண்ட படங்களுக்கு எப்போதும் வரவேற்பு குறையாது என்பதை இந்தத் திரைப்படங்கள் மீண்டும் நிரூபித்துள்ளன. வர்த்தக ஆய்வாளர் தரன் ஆதர்ஷ், இந்த எழுச்சி இந்தியத் திரையுலகிற்கு ஒரு ஆரோக்கியமான அறிகுறி என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தி சினிமா மிகப் பெரிய பின்னடைவில் இருந்து வந்தது. இதன் காரணமாக பல நடிகர்கள் நடிப்பையே விட்டு விட்டனர். அமைதியாகி விட்டனர். தெலுங்கு, கன்னடம், தமிழ்ப் படங்கள்தான் வசூலில் அசத்தி வந்தன. மலையாளத் திரையுலகமும் கூட அவ்வப்போது ஏதாவது பிளாக்பஸ்டரை கொடுத்தபடி இருந்தது. இந்த நிலையில் மீண்டும் இந்தித் திரையுலகுக்கு உயிர் கிடைத்திருக்கிறது, துரந்தர் மற்றும் பார்டர் 2 மூலம்.
{{comments.comment}}