கரூர் வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர்? பரபரக்கும் அரசியல் களம்

Jan 19, 2026,02:33 PM IST

சென்னை : தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பெயர் சிபிஐ தாக்கல் செய்யவுள்ள குற்றப்பத்திரிகையில் இடம்பெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


செப்டம்பர் 27ம் தேதியன்று கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ (CBI) விசாரணை நடத்தி வருகிறது. இந்த "கரூர் துயரம்" தொடர்பான வழக்கில், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே ஏறக்குறைய சிபிஐ விசாரணையை முடித்து விட்டது. தற்போது தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.




சிபிஐ அனுப்பிய சம்மன் தொடர்பாக ஜனவரி 12ம் தேதி டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜரான நிலையில், இன்று இரண்டாவது முறையாக அவர் ஆஜராகி உள்ளார். இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்யப்போகும் அதிகாரப்பூர்வ குற்றப்பத்திரிகையில் (Charge sheet), தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பெயர் சேர்க்கப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிபிஐ தனது விரிவான குற்றப்பத்திரிகையை வரும் பிப்ரவரி மாதம் மத்தியில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியலில், நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பேசப்பட்டு வரும் சூழலில், இந்தச் சட்ட ரீதியான நடவடிக்கை அவருக்கு ஒரு சவாலாக அமையலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும், இது அரசியல் ரீதியான பழிவாங்கல் நடவடிக்கையா அல்லது வழக்கின் நியாயமான நகர்வா என்பது சிபிஐ அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடும்போது தான் தெரியவரும்.


கரூர் வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் விஜய் பெயர் சேர்க்கப்பட்டால், விஜய் கைது செய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த தமிழக அரசியல் களமே பரபரப்பாகி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்