அண்ணாநகர் பாலியல் வழக்கு.. அதிமுக செயலாளர் அதிரடி கைது.. கட்டப் பஞ்சாயத்து செய்த கொடுமை!

Jan 08, 2025,06:48 PM IST

சென்னை: அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த வழக்கில் குற்றவாளி சதீஷுக்கு பல்வேறு வகையான உதவிகளைச் செய்ததாக அதிமுக 103வது வட்ட செயலாளர் சுதாகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 


இதைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகி சுதாகரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.


சென்னை அண்ணா நகரை சேர்ந்த  பத்து வயது சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிறுவன் உட்பட சிலர் மீது சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். 




ஆனால் புகாரின் அடிப்படையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க மறுத்ததோடு, சிறுமியின் பெற்றோரை வற்புறுத்தி குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரை புகாரிலிருந்து நீக்கும்படி போலீசார் கூறியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் குற்றம்சாட்டப்பட்டவரின் பெயரை நீக்க சொல்லி தங்களை துன்புறுத்துவதாக வீடியோ ஒன்றை பதிவிட்டு வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலானதுடன் சிறுமி பாலியல் விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியது. 


இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை வழக்காக விசாரித்தது. சிறுமியின் பெற்றோரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. உச்சநீதிமன்றம் காவல்துறையின் போக்கைக் கடுமையாக கண்டித்ததோடு, இந்த வழக்கை தமிழ்நாடு காவல்துறையே விசாரிக்கலாம் என்று கூறி சிறப்புப் புலனாய்வுப் படை ஒன்றை தானாக நியமித்தது. 


இதைத் தொடர்ந்து தற்போது உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளது. இதில் அடுத்தடுத்து பலர் சிக்கி வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணையின்போது, சிறுமியின் பெற்றோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும், குற்றவாளிக்கு ஆதரவாக 103 வது அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் நேரடியாக காவல் நிலையம் வந்து சிறுமியின் பெற்றோரை மிரட்டி உள்ளதும் தெரியவந்தது.


இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் என்பவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக நேற்று அதிமுக 103வது வட்டச் செயலாளர் சுதாகரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அதேசமயம் இந்த வழக்கை முறையாக விசாரிக்காத மகளிர் காவல் ஆணைய ஆய்வாளர் ராஜியும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். 


பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் இழப்பீடாக பணம் வாங்கித் தருவதாகவும்,  வழக்கை வாபஸ் பெறும்படியும் கட்டப் பஞ்சாயத்து செய்து மிரட்டியுள்ளார் சுதாகர். மேலும் குற்றவாளி சதீஷுக்கு ஆதரவாகவும் இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 


இந்த நிலையில் அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி சுதாகரை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்