டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் பிரதமருக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்

Oct 10, 2026,03:17 PM IST

புதுடெல்லி:இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், நாட்டின் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் டெல்லியில் எதிர்க்கட்சிகள் மற்றும் வழக்கறிஞர்கள் நடத்திய பேரணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற வழக்கறிஞர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 


'எமர்ஜென்சியை விட மோசம்' - கெஜ்ரிவால் தாக்கு:


இந்தச் சூழலில், டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துள்ளார். "தற்போது நாட்டில் நிலவும் சூழல் அவசரநிலை (எமர்ஜென்சி) காலத்தை விட மிகவும் மோசமானது" என்று தெரிவித்த அவர், நாட்டின் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகக் குற்றம் சாட்டினார். மேலும் பேசிய அவர், "நாம் பிரதமர் மோடியின் முழுமையான சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 




வாக்குத் திருட்டு மூலமாக மட்டுமே தன்னால் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை பிரதமர் மோடி நன்கு அறிந்திருக்கிறார். எனவே, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருடன் சேர்ந்து பிரதமர் மோடியும் உடனடியாகப் பதவி விலக வேண்டும்" என வலியுறுத்தினார்.   


பத்திரிகையாளர்கள் கைது :


போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் எதிர்க்கட்சித் தலைவர்களையும் வழக்கறிஞர்களையும் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். செய்தி சேகரிக்கச் சென்ற Scroll மற்றும் Newslaundry உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களின் பத்திரிகையாளர்களையும் காவல்துறை கைது செய்துள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.   


உச்சநீதிமன்றத்தில் அவசர முறையீடு:


டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடை விதிக்கும் காவல் துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக 'கரப்பான் ஜனதா' கட்சி  சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. போராட்டங்களுக்கு முழுமையான தடை விதிக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. "Uphold The Constitution" (அரசியலமைப்பை உயர்த்திப் பிடியுங்கள்) என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதான சம்பவம், தேசிய அளவில் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்