2026 ஜனவரிக்குள்.. 46584 பேருக்கு அரசு வேலை.. சட்டசபையில் ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்

Jun 25, 2024,08:56 PM IST
சென்னை:  அரசுப் பணியினை எதிர்நோக்கி இருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்குத் தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி. வரும் ஜனவரி 2026-க்குள், அதாவது இன்னும் 18 மாதங்களுக்குள் பல்வேறு அரசுப் பணியிடங்களுக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 17 ஆயிரத்து 595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19 ஆயிரத்து 260 ஆசிரியப் பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3 ஆயிரத்து 041 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6 ஆயிரத்து 688 பணியிடங்களும் நிரப்பப்படும். அதாவது வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மொத்தம் 46 ஆயிரத்து 584 பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் அவை விதி எண் 110ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:



இளைஞர் நலனை, இளைஞர் எதிர்காலத்தை, இளைஞர்களின் மேன்மையை எப்போதும் மனதில் வைத்து திட்டங்களைத் தீட்டி வருவது திராவிட மாடல் ஆட்சியின் தனித்தன்மை! இளைய சக்தியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மிக மிகக் கவனமாகச் செயல்பட்டு வருகிறோம். அதனை அடிப்படையாகக் கொண்ட அறிவிப்பைத்தான் இப்போது வெளியிட விரும்புகிறேன்.

வளமான அரசாக, அமைதியான அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. தொழில் வளம் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அதன்மூலம் நமது இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றிடவும் பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறோம். நமது மாணவச் செல்வங்களுக்குத் தரமான பள்ளிக் கல்வியையும் உயர்கல்வியையும் அளிக்கின்றோம். அத்துடன் அவர்களது வேலைவாய்ப்புகளைப் பெருக்கிடும் வகையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. கல்வியின் மூலமாக ஒரு அறிவுசார் பொருளாதாரத்தை நாம் உருவாக்கி வருகிறோம்.

புதுமைப்பெண் - தமிழ்ப் புதல்வன் - நான் முதல்வன்



இவற்றை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டவைதான் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்கள். 
அடுத்த தேர்தலை அல்ல, அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்கும் அரசுதான் நமது திராவிட மாடல் அரசு. கழக அரசுப் பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் வாயிலாக 32 ஆயிரத்து 774 நபர்களுக்குப் பல்வேறு அரசுத் துறைகளில் நேரடிப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன.

அதேபோல், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32 ஆயிரத்து 709 இளைஞர்கள் பணிநியமனம் பெற்றனர். மொத்தம் 65 ஆயிரத்து 483 இளைஞர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

3 ஆண்டுகளில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள்



அரசுத் துறைகளில் மட்டுமல்லாது, பெருந்தொழில் மற்றும் குறு, சிறு நிறுவனங்களின் மூலமாகவும் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளோம். நமது அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னெடுப்புகளின் காரணமாகவும், மிகச்சிறப்பான முறையிலே நடத்தி முடிக்கப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் கிடைக்கப் பெற்ற பெரும் முதலீடுகள் காரணமாகவும் இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் கடந்த 3 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெறும் வார்த்தையாக அல்ல, ஆதாரங்களோடுதான் இதனை இந்த அவைக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் அமைப்பு சார்ந்த தனியார் துறைகளில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்த புள்ளி விவரங்கள் ஒன்றிய அரசின் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தின் மூலம் பெறப்பட்டது. இது ஒன்றிய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஓர் அமைப்பாகும். இந்த நிறுவனத்தின் தரவுகளின்படி, கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 77 லட்சத்து 78 ஆயிரத்து 999 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களுக்குத் தொழிலாளர் வைப்பு நிதி கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன.

என்னுடைய கனவுத் திட்டம் - நான் முதல்வன்

இதுமட்டுமின்றி, என்னுடைய கனவுத் திட்டம் என்று நான் எப்போதும் பெருமையோடு குறிப்பிடக்கூடிய “நான் முதல்வன் திட்டம்” மூலமாகச் சிறப்பு பயிற்சிகள் தரப்பட்டு வருகிறது. இதன் மூலம் படித்த இளைஞர்களின் திறன்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலமாக இதுவரை, 3 இலட்சத்து 6 ஆயிரத்து459 நபர்களுக்குத் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையின் மூலமாக நடத்தப்பட்ட சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக கடந்த 3 ஆண்டுகளில் 2 இலட்சத்து ஓர் ஆயிரத்து 596 இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது. இந்த இரண்டையும் சேர்த்து, தமிழ்நாடு அரசின் முயற்சியினால், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், மொத்தம் 5 இலட்சத்து 8 ஆயிரத்து 55 தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

‘நம் இளைஞர்கள்தான் நம் பலம்! அவர்கள்தான் நமது எதிர்கால வளத்திற்கு அடிப்படையானவர்கள்!’ இதனை உணர்ந்த காரணத்தினால், தமிழ்நாடு அரசு இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அரசுப் பணியினை எதிர்நோக்கி இருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்குத் தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியினை பேரவையில் தங்கள் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

2026க்குள் 46,584 பேருக்கு அரசு வேலை

வரும் ஜனவரி 2026-க்குள், அதாவது இன்னும் 18 மாதங்களுக்குள் பல்வேறு அரசுப் பணியிடங்களுக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 17 ஆயிரத்து 595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19 ஆயிரத்து 260 ஆசிரியப் பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3 ஆயிரத்து 041 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6 ஆயிரத்து 688 பணியிடங்களும் நிரப்பப்படும். அதாவது வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மொத்தம் 46 ஆயிரத்து 584 பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது தவிர, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக இருக்கக்கூடிய 30 ஆயிரத்து 219 பணியிடங்களும் நிரப்பப்படும். இவற்றை மொத்தமாக சேர்த்துப் பார்க்கையில், 75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்பதை தங்கள் வாயிலாக மகிழ்ச்சியுடன் தெரிவித்து அமைகிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்