- தென்றல்
நான் பழைய தலைமுறை. இந்த காலத்து இளையவர்களின் வாழ்க்கை நோக்கங்கள், தத்துவங்கள், ஒழுக்கங்கள், நம்பிக்கைகள், புரிதல்கள் எனக்கு விளங்குவதில்லை. இவர்கள் பிரயோகிக்கும் சொற்றொடர்கள் கூட என்னைப் போன்றவர்களுக்கு அந்நியம் தான்.
Breakup, patchup, relationship, living together, long distance relationship, two timing,போன்ற பல சொற்கள் அன்றாடம் இவர்கள் வாயிலிருந்து விழுகின்றன. இவர்களுக்கு முன்னால் தலைமுறையினரின் அகராதியில் இவற்றுக்கான அர்த்தங்கள் வேறாக இருந்தன.
தொன்று தொட்டு, புராண இதிகாசங்கள் முதற்கொண்டு, காதல் உணர்வு, கந்தர்வ மணம் போன்றவை இருந்திருக்கின்றன.
அரசன், ஜமீன்தார் போன்ற அதிகார வர்க்கம் பலதார மணம் செய்ததும், பெண்களை பாலியல் பொருளாக மட்டுமே பயன்படுத்தியதும் வரலாற்றுப் பக்கங்களில் நிறைந்துகிடக்கிறது.
தோப்புகளிலும், வயல்வெளிகளிலும் கள்ளக்காதல் என்று சொல்லப்படும் சில திருமணத்தைத் தாண்டிய உறவுகள் அரங்கேறின என்பதை மறுப்பதற்கு இல்லை. அர்த்தம் பொதிந்ததோ, வேடிக்கையோ எப்படிச் சொல்லப்பட்டாலும் "விருந்தாளிக்கு பொறந்தவனே! " போன்ற பழிச்சொற்கள் புழக்கத்தில் இருந்தன.

இதனூடே ஒருவனுக்கு ஒருத்தி என்ற கற்பு நெறியும் தமிழ் மண்ணில் மணம் வீசியது. ஒரு ஆண் பெண் காதலின் நோக்கம் திருமணமாக, இல்லறமாக, அடுத்த தலைமுறையை உருவாக்கும் நல்லறமாக இருந்தது.
தொழில்நுட்பம், வாழ்க்கை முறையை தீர்மானித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், பல ஆண்களுக்கும் பெண்களுக்கும் காதலின் நோக்கம் திருமணமாக இருப்பதில்லை. Just hanging out! அவ்வளவுதான்!
காதலை முறித்துக்கொண்டால் இவர்கள் கண்ணீர் சிந்தி தேம்பித் தேம்பியெல்லாம் அழுவதில்லை. மாறாக, அடுத்த காதலை தேடி கொள்கிறார்கள். திருமண பந்தத்தின் மீது நம்பிக்கையை இழந்து, அது அவசியம் இல்லை என்ற எண்ணத்தையும் பரவலாக, அதிலும் குறிப்பாக, பெருநகரத்துப் பெண்களிடம் பார்க்க முடிகிறது.
Premarital sex! தவறென்ன? என்ற மனநிலையில் சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. பரஸ்பர ஒப்புதல்களோடு நடப்பவை ஒருபுறம் இருக்க, இன்றைக்கும் ஏமாறுபவர்களும் ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள்.
வேலை நிமித்தம் பெருநகரத்தில் வசிக்கும் படித்த பெண்ணொருத்தி, சிறுவயதில் தன்னோடு சேர்ந்து விளையாடிய ஒருவனை முகநூலில் பார்த்துவிட்டு, விட்டுப் போன உறவை தொட்டுத் தொடர்ந்திருக்கிறாள். நீ அவள் தானே! நீ அவன் தானே! என்ற பரஸ்பர மறு அறிமுகத்திற்குப் பிறகு, நீ என்ன செய்கிறாய்? நான் இன்னது செய்கிறேன் என்ற விலாவரிகள் முடிந்து, நான் தனியே வீடு எடுத்து தங்கி இருக்கிறேன் நீ எங்கே இருக்கிறாய் என்ற விவரனை பரிமாறப்பட்டு, உறவு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்த வாட்ஸ்அப் மெசேஜ்களும், சந்திப்புக்களும், காதல் என்று பெயரிடப்பட்ட உணர்வாக மயக்கம் கொடுக்க, living together வரை சென்று விட்டது. அந்த ஆண் அடிக்கடி போனில் ரகசியமாய் பேசுவது ஒரு கட்டத்தில் இந்த பெண்ணுக்கு சந்தேகத்தை ஏற்படுத்த, கிண்டி கிளறியதில் அவன் ஏற்கனவே திருமணமானவன் என்பதும் ஒரு குழந்தைக்கு தகப்பன் என்பதும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.
இப்படிச் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கத்தால் இங்கே அரங்கேறிக் கொண்டிருக்கும் கேலிக்கூத்துகளும் ஏராளம். தெரிந்தவர் தெரியாதவர், அறிந்தவர் அறியாதவர், பால்ய சிநேகம், ரயில் சிநேகம் என அவசியமின்றி பலரையும் கோர்த்து விடுகின்றன சமூக வலைதளங்கள். அதைக் குறுக்கு வழியில் பயன்படுத்துவோர் பலரும் இருக்கிறார்கள், கவனமாக இருக்க வேண்டியது நம் பொறுப்பல்லவா!
வாழ்க்கைக் குறுகியதாக இருந்தபோது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த தர்மம், அறம் சார்ந்த வழிமுறைகள், கற்பு நெறிகள் இன்றைக்கு காற்றில் பறக்கின்றன. தவறென்று வரையறுக்கப்பட்டிருந்தவை, அங்கீகரிக்கப்பட்ட சாதாரண வழக்கமாகிறது.
உடலுக்கும் நினைவு உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட Multiple partners வைத்துக் கொள்ளும் போது ஏற்படும் மோசமான விளைவுகளை அறிவியலும் ஆன்மீகமும் எடுத்துரைப்பது, கல்வி கற்ற, பொருளாதார சுதந்திரம் பெற்ற பலர் காதில் விழுவதில்லை.
இன்றைய பெண்களுக்குக் கல்வியும் பொருளாதார சுதந்திரமும் அடிப்படை அத்தியாவசிய தேவை. கல்யாணத்துக்கு அவசரப்படாதே!உத்தியோகம் தான் முதல் புருஷன்! முதலில் படித்து சொந்தக்காலில் நிற்க கற்றுக்கொள்! என்பதெல்லாம் இன்றைய பெண்களுக்கான மந்திர சொற்றொடர்கள்! ஆனால், இதற்கும் மேல் ஒரு விழிப்புணர்வு இன்றைக்கு மிக மிக அவசியம்:
பெண்ணே! கல்யாணத்துக்கு மட்டுமல்ல, காதலுக்கும் அவசரப்படாதே! காமத்துக்கும் அவசரப்படாதே! எத்தனை மாமாங்கமானாலும், முள்ளு மேல சேலை விழுந்தாலும், சேலை மேல முள்ளு விழுந்தாலும், சேதமாவது சேலை தான்! என்பதை என்றும் மறந்து விடாதே.
அமெரிக்கத் தொலைக்காட்சியில் Paternity Court என்றொரு நிகழ்ச்சி இருக்கிறது. நம்ம ஊரு சேனல்களில் நடத்தப்படும் குடும்பப் பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் போல அதுவும் ஒருவகை பஞ்சாயத்து தான்!
பிள்ளைக்கு யாரு அப்பன்? என்ற பஞ்சாயத்து! அறிவியல் பூர்வமாக டிஎன்ஏ டெஸ்ட் செய்து, யார் தகப்பன் என்று கண்டுபிடித்துச் சொல்லி அனுப்பி வைப்பார்கள்.
தாய் கை காட்ட, இவனா? இவனா? இவனா? என்று மூன்று நான்கு ஆண்கள் வரிசையில் நிற்கும் அவலங்களும் அதில் உண்டு. பல வருடங்களாக இவரைத் தகப்பனாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது எனக்கு சந்தேகமாக இருக்கிறது, கண்டுபிடித்துச் சொல்லுங்கள்! என்று வளர்ந்தவர்களும் வந்து நிற்கிறார்கள்.
இவள் மீது சந்தேகமாக இருக்கிறது, இவள் பெற்றது என் பிள்ளை அல்ல! என்று ஆண்களும் வருகிறார்கள். கருவுற்ற மாதத்தில் இந்த இந்த ஆணிடம் எல்லாம் படுக்கையைப் பகிர்ந்து கொண்டேன், யாருடையது என்று தெரியவில்லை! என்று பெண்களும் வருகிறார்கள்.
அழுகைகளும் அலறல்களும் கோபங்களும் ஏமாற்றங்களும் நிறைந்திருக்கும் நிகழ்ச்சி அது.
அது நிஜமான நீதிமன்றம் இல்லையென்றாலும், அந்த மனிதர்களும் அவர்கள் கொண்டுவரும் பிரச்சனைகளும் நிஜம். இந்த வழக்கை நடத்துவதும் நீதிபதி தான்.
தமிழ்நாட்டிலும், சமீபத்தில் புருஷனா இல்லையா? பிள்ளை அவனுடையதா இல்லையா? என்ற பஞ்சாயத்தில் DNA test, DNA test என்ற அலறல் கேட்கிறது.
வெளிநாட்டில், அவர்கள் கலாச்சாரத்திற்கு ஏற்ப நடத்தப்படும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, நாமும் இறக்குமதி செய்து கொண்டாடிக் கொண்டிருப்பது ஒன்றும் புதிதல்ல. DNA test நிகழ்ச்சியும் நடத்தும் அளவு நமது சமூகம் சீரழிந்து விடக்கூடாது என்று நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக!
TAPS: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கொடுத்த ஹேப்பி நியூஸ்.. அறிக்கையின் முழு விவரம்!
I am Coming.. திரும்பி போற ஐடியாவே இல்ல.. விஜய்யின் ஜனநாயகன் பட டிரைலர் எப்படி இருக்கு?
வெனிசுலா அதிபர் சிறைபிடிக்கப்பட்டு, நாடு கடத்தல்...டிரெம்ப் அறிவிப்பு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்...முதல்வர் அறிவிப்பு
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லத் தயாரா?... 150 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல்? நிர்மலா சீதாராமன் படைக்கப்போகும் புதிய சாதனை
காவல்துறையினர் மரியாதை, புன்னகை, அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!
திமுக தேர்தல் அறிக்கை: மொபைல் செயலியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!
{{comments.comment}}