முதல்வரை சந்தித்தது ஏன்.. இதையெல்லாமா அரசியலாக்குவீங்க.. ஓ.பி.எஸ். ஆவேச அறிக்கை

Aug 04, 2025,10:27 AM IST

சென்னை: முதலமைச்சர் அவர்களின் இல்லத்திற்கு சென்றதை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்  கண்டித்துள்ளார்.


ஓபிஎஸ்ஸின் சமீபத்திய செயல்பாடுகள் பரபரப்பைக் கிளப்பி வருகின்றன. அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை ஒரே நாளில் 2 முறை சந்தித்துப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிமுக, பாஜக வட்டாரங்கள் அதிர்ச்சி அடைந்தன. பாஜக தரப்பில் ஓ.பி.எஸ்ஸை சமாதானப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.


மேலும் பிரதமரை சந்திப்பது தொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் 6 முறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் கூட அவர் போனை எடுக்கவில்லை என்று ஓ.பி.எஸ், குற்றம் சாட்டியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஓபிஎஸ் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியவர்களை அவர்களது இல்லம் தேடிச் சென்று நலம் விசாரிப்பதும், உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து துக்கம் விசாரித்து அஞ்சலி செலுத்துவதும் தமிழ்ப் பண்பாடு. இந்த வகையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகு பூரண குணமடைந்து இல்லம் திரும்பிய நிலையில், அவரது வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன். 




இதேபோன்று அவரது மூத்த சகோதரர் மு.க. முத்து அவர்கள் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்தேன். இந்தச் சந்திப்பு தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடு. என்னுடைய மனைவியும், என்னுடைய தாயாரும் இறந்தபோது, என்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தச் சந்திப்பில் எவ்வித அரசியலும் இடம்பெறவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஆனால், இந்தச் சந்திப்பை வைத்து என்னை தி.மு.க.வின் 'B' Team என்றும், நான் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கப் போவதாகவும், தி.மு.க.வில் இணையப் போவதாகவும் பல்வேறு வதந்திகளை சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பும் நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களும் இதுகுறித்த செய்திகளை கற்பனையாக வெளியிட்டு வருகின்றன. இதில் எள்ளளவும் உண்மையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


என்னைப் பொறுத்தவரையில், மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில் பயணிப்பவன். 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் 

மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சியை அமைக்க வேண்டுமென்பதுதான் எங்களின் நோக்கம் என்பதையும், அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தமிழ்ப் பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் நான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்தேனே தவிர, இதில் துளியும் அரசியல் ஏதுமில்லை. இதனை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களைப் பார்க்கும்போது, பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழியான “பண்பு தெரிந்தவர்கள் பாராட்டுகிறார்கள். அது இல்லாதவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்” என்பதுதான் என் நினைவிற்கு வருகிறது.


அடுத்தபடியாக, சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நிதியை நான் ஏதோ இப்போதுதான் வெளியிடுவதுபோல சில விமர்சனங்கள் எழுகின்றன. இது முற்றிலும் தவறு. சமக்ரா சிக்ஷா திட்டத்திற்கான நிதியை விடுவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி 29-08-2024 அன்றே அறிக்கை வெளியிட்டவன் நான். இதேபோன்று, தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவைப் பற்றி விமர்சித்து பேசிய இந்து முன்னணிக்கு கண்டனம் தெரிவித்து 25-06-2025 அன்று அறிக்கை வெளியிட்டவன் நான்.


மாண்புமிகு அம்மா அவர்களை பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் விமர்சித்தபோது அதற்கு கண்டனம் தெரிவித்து 12-06-2023 அன்று அறிக்கை வெளியிட்டவன் நான். இதே போன்று, இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாக என்னுடைய கருத்தை பதிவு செய்து இருக்கிறேன். இஸ்லாமிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வக்ப் வாரிய சட்டத்திற்கு எதிராக மாநிலங்களவையில் வாக்களிக்க உத்தரவிட்டேன். நான் எங்கு இருந்தாலும், தமிழக மக்களின் உரிமை, தமிழக மக்களின் நலன் என்று வந்துவிட்டால் மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் செயல்படக் கூடியவன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.


ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பூட்டு




இதேபோல நேற்று ஒரு அறிக்கை விடுத்திருந்தார் ஓ.பி.எஸ். அதில் தனது ஆதரவாளர்களுக்கு கூட்டணி குறித்து எதுவும் பேச வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து மக்களின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.


மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக் காக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துரோகக் கூட்டத்திடமிருந்து மீட்டெடுப்பதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை ஏற்படுத்தி நாம் போராடி வருகிறோம். இதில் நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.


இந்தச் சூழ்நிலையில், வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை நாம் எதிர் கொள்ளும் வகையில், மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் பட்தொட்டி எங்கு எடுத்துச் செல்லவும், தி.மு.க. ஆட்சியில் தற்போது மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் மற்றும் தமிழ்நாட்டிற்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்லவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லப்படுவதை மக்களுக்கு எடுத்துக் காட்டவும் பொதுக் கூட்டங்களை கழக நிர்வாகிகள் ஆங்காங்கே நடத்த வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.


மேலும், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் செய்தித் தொடர்பாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன். இதனை மீறிச் செயல்படுபவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


கூட்டணி குறித்த முடிவு தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்டவர்களின் கருத்தினைக் கேட்டு, கள நிலவரத்தை ஆராய்ந்து, அதற்கேற்ப தக்க நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுகவின் சுரண்டல் கொள்கையால் மக்கள் வாழ்க்கை நடத்தவே வழியின்றி தடுமாறுகின்றனர்: டாக்டர் அன்புமணி!

news

வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடுதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

news

முதல்வருடன் சந்திப்பு.. ஓபிஎஸ் திடீர் அறிக்கைக்கு இது தான் காரணமா.. அடுத்து என்ன செய்வார்?

news

சிபு சோரன்.. மறக்க முடியாத அரசியல்வாதி.. ஜார்க்கண்ட் அரசியலில் ஒரு சகாப்தத்தின் முடிவு!

news

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.40 உயர்வு!

news

TN Assembly elections 2026: அதிகமான கட்சிகள் கூட்டணிக்கு வருவது திமுக.,விற்கு சாதகமா, பாதகமா?

news

2வது மாநில மாநாடு.. விஜய் போடும் செம ஸ்கெட்ச்... கோர்ட்டிற்கு செல்லுமா தவெக.. என்ன செய்யும் திமுக?

news

ஆடிப் பட்டம் தேடி விதை.. ஏன் அப்படி சொன்னாங்க தெரியுமா நம்ம முன்னோர்கள்?

news

முதல்வரை சந்தித்தது ஏன்.. இதையெல்லாமா அரசியலாக்குவீங்க.. ஓ.பி.எஸ். ஆவேச அறிக்கை

அதிகம் பார்க்கும் செய்திகள்