- டாக்டர் கோ. லதா
சித்திரையே சீர் கொண்டு வா...
சித்திரையே வருக சீர்கொண்டு வருக
சிந்தையில் புதுமை கொண்டு வருக
முத்திரை பதிக்க முகிழ்த்தவளே வருக
முன்னேற்ற பாதை காட்டவே வருக
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்
பாரெங்கும் இன்பம் தரும் கண்ணாய்
கனிச்சாறு பிழிந்த கவிதையாய் வா
கவலைகள் தீர்க்கும் மருந்தாய் வா
மஞ்சள் வெயிலில் மலர்ந்தவளே வா
மங்கள வாழ்வை அளிப்பவளே வா
வேம்பு பூக்களில் வாசம் தருவாய்
வேகம் கொண்டு வாழ்வை உயர்த்துவாய்

அறுசுவை உணவாய் அகம் நிறைப்பாய்
அன்பு மழையாய் உயிர் நனைப்பாய்
தங்கம் திகர்த்த தையலே நீயே
தன்னிக ரில்லாத தமிழின் தாயே
புத்தாண்டுப் பூவாய் பூத்தவளே வா
புன்னகை எங்கும் பூக்கவே வா
ஞாலம் போற்றும் நன்னாளே வா
ஞானம் வளர்க்கும் பொன்னாளே வா
வெற்றித் திலகம் இட்டுத் தருவாய்
வெள்ளியாய்ப் பொழிந்து விடைகள் தருவாய்
வாழ்க சித்திரை வளமுடன் என்றும்
வாழ்க்கை சிறக்க வழிகாட்டு இன்றும்.
--
உலக கலை தினம்
உலகம் போற்றும் ஓவியக் கலைகள்
கலகம் தீர்க்கும் காவியச் சிலைகள்
இலகு மேடை நாட்டியக் கலைகள்
அலகில் மொழியில் அரும்பெறல் கலைகள்
வண்ணக் குழம்பில் வான்மழை சாரல்
எண்ணக் குகையில் ஓவியக் கீறல்
மண்ணின் மணத்தில் மண்பாண்டக் கலைகள்
பெண்ணின் நடனத்தில் பேரழகுச் சலனங்கள்
சிற்றுளி செதுக்கும் சிற்பக் கலைகள்
முற்றிலும் வியக்கும் முத்தமிழ் நிலைகள்
கற்றவர் போற்றும் கட்டடக் கலைகள்
மற்றவர் மருளும் மாயக் கலைகள்
பாடிடும் பாட்டில் பண்ணிசை ஓங்கும்
ஆடிடும் ஆட்டத்தில் அண்டமும் இயங்கும்
தேடிடும் கலையில் தேன்சுவை சொட்டும்
கூடிடும் அறிவில் கோலங்கள் இட்டும்.
கற்பனை ஊற்றில் விதைகள் பிறக்கும்
அற்புதம் யாவும் அகிலத்தில் மணக்கும்
சிற்பியின் கைகளில் பாறையும் பேசும்
கற்பினிற் கலைகள் காலத்தை ஆளும்
ஏப்ரல் மாதம் பதினைந்து நாளே
உலகக் கலைதினம் உவகை தருமே
கலையே மனிதனின் கண்ணெனக் கொள்வோம்
நிலையாய் நற்புகழ் நீடுழி பெறுவோம்!!
--
தையலர் கொண்டாடு....!
தையல் கலைத்திறன் போற்றிக் கொண்டாடு
தையலர் தன்மையை என்றும் பாராட்டு
வண்ணத் துகிலினை வகுத்தே பிரிப்பார்
எண்ணும் வடிவினை எழிலாய் இணைப்பார்
கையில் ஊசியும் கருத்தாய் ஏந்துவார்
மெய்யில் கவசமாய் மேலாடை தந்துவார்
உழைக்கும் கரங்கள் உவகையைப் பெருக்கும்
அழகு ஆடைக்குள் ஆளுமை இருக்கும்
இயந்திர ஓசையில் இசையும் பிறக்கும்
துயரங்கள் யாவும் தையலில் மறக்கும்
தன்னம்பிக்கையில் தையலர் தைக்கிறார்
பொன்னான வாழ்வினைப் புவியில் நைக்கிறார்
காலம் கடந்தும் கலைத்திறன் வாழ்க
ஞாலம் புகழவே தையலர் சூழ்க
ஒற்றுமைப் பண்பினை ஊசியால் தைப்போம்
வெற்றிச் சிகரத்தை விரைந்துமே வைப்போம்
--
தமிழ் மகளே வா....
விடியலின் புன்னகையாம் வீட்டின் பெருமையாய்
மலர்களின் மென்மையாய் மண்ணின் மங்கலமாய்
வாழ்க தமிழ் மகளே! வளங்கள் தந்து வருக!
அன்பின் வடிவமாய் அறிவின் ஒளியாய்
வானவில் வர்ணமாய் வள்ளுவர் மொழியாய்
கலைகளின் உறைவிடமாய் காவியத் தலைவியாய்
சாதனைப் பாதையில் சரித்திரம் படைக்கவே
தென்றல் காற்றாய் தமிழே வருக
அன்பு மழையாய் அறிவை வீசவே
உறவின் பாலமாய் உயர்ந்து வருக
கற்பனைத் திறனாய் கருணையின் உருவாய்
பொங்கி வருக! பூவை மகளே வருக!
தமிழன் பெருமை தழைக்க
தரணியில் நீ நிலைக்க
வணக்கம் சொல்லி அழைக்கிறோம்!
தமிழ் மகளே வருக!
--
சித்திரை மகளே வா...
சித்திரைப் பெண்ணே சிறப்பாய் வருக நீ
முத்திரைப் புன்னகை மொய்த்தே எத்திசையும்
நன்மைகள் சூழ நறுமணம் வீசிடவே
புன்முறுவல் பூத்தே புகுந்து நன்னெறி
மாங்கனித் தேறல் மதுரச் சுவையோடு
வேப்பம்பூ வாசம் விரவிடவே பாங்காக
அன்பே உருவாய் அறிவின் ஒளியாக
இன்பத் தமிழின் இளைய கொடியாக
வறுமை அகல வளங்கள் பெருக
உறுதி கொடுத்தே உதிப்பாய் நறுமலரே
மங்கலச் சோதி மனதினில் ஏற்றிடவே
பொன்னிற பூவாய் பொழிந்து நன்னலமே
நாடும் நகரும் நலம் பெறச் செய்தே நீ
நீடூழி வாழ்க நிலத்து!
--
உழவே உயர்வு...
பொன்னிறக் கதிர்கள் பூமிமேல் ஆடும்
மன்னவன் உழவன் மன்பதை காப்பான்!
சேற்றில் உழைப்பவன் சோற்றினை ஈவான்
ஏற்றினைப் பூட்டி எழிலுறச் செய்வான்.!
வைகறை விடிந்தால் வயற்பதி ஏகுவான்
கைதொழுது மண்ணைக் கனிவுடன் காப்பான்!
நாற்றினை நட்டு நலம்உறப் பார்ப்பான்
காற்றினைப் போலே கடுகி உழைப்பான்!
வாழ்க்கை ஆதாரமே உழவெனத் தேர்வோம்
தாழ்விலா மேன்மை தரணியில் காண்போம்!
உழைப்பே உயர்வு உணர்ந்திடும் காலம்
பிழைப்பின்றி நாடும் பெருமையுறும் நாளும்!
உழுபவன் செல்வம் உலகினைத் தாங்கும்
தொழில்களில் உழவே தலைப்பினை வாங்கும்!
விளைச்சல் பெருகிட வறுமை அகலும்
வளமுற வாழ வழிதனைத் தருமே!.
(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், சென்னை)
என் மகனுக்கு TVK என பெயர் வைப்பேன்.. தவெக எம்எல்ஏ எம்.ஆர்.பல்லவி அதிரடி!
விண்ணுலகமே வியந்து போகும்.. அற்புதமாக நடந்தேறிய.. வரதராஜ பெருமாள் திருத்தேர் உற்சவம்
தர்ஷனின் தரமான சம்பவங்கள்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
World Bicycle day: ஓரம்போ ஓரம்போ.. இன்னும் சைக்கிள் ஓட்டுபவரா நீங்க.. வாழ்த்துகள்ங்க!
Tamil Short story: குழூஉக்குறி.. ஒரு நிமிடக் கதை (13)
World Bicyle day: சிக்கு.. சிக்கு மிதிவண்டி.. சின்னப் பையன் மிதிவண்டி!
Kalaiyarasi Muthuvel Poem: அழகு
அறியாமை பூட்டிட வகுப்பறை திறப்போம்!
Tamil Short Story: அனுசரிப்பு
{{comments.comment}}