சொல்லாத சொல்லும் சுடும்...!

Nov 16, 2026,04:31 PM IST
- முனைவர் தி.தங்கலட்சுமி


சொல்லாத சொல்லும் சுடும்...!
சில நேரங்களில் காட்டப்படும்
கருணையும் இரக்கமும்கூட 
கொல்லாமல் கொல்லும்...!

வகுப்பறையின் அட்டகாசங்கள் 
எல்லாம் அடங்கிப்போய்
பூரண அமைதி நிலவும் 
தருணங்கள் வெகு சில 
நேரங்களே! 

ஒன்று அவ்வகுப்பறை 
தேர்வறையாய் 
உருமாறும் போழ்தில்...

மற்றொன்று 
ஆசிரியர் கைகளால்
தேர்ச்சித்தாள் மதிப்பெண்
அறிந்திடும் 
கனத்த கணங்களில்...

தேர்வின் முடிவறியும் 
ஆவல் பொழுதில்,
இதயத்தின் திக்..திக்.. 
தருணம் ஒன்றில், 



பேராசிரியர் தனது 
பெருமையின் எல்லையில்
பொறுமையின் எல்லையைக் 
கட்டிக்காத்தே... 

மாணவக் கண்மணிகள் பெற்ற
மதிப்பெண் இலட்சணங்களைப் பொறுத்தே
அன்னாரின் ஆசி மொழிகளை
முடிவு செய்யும் தருணங்கள்...

சிற்சிலருக்கு இன்மொழியும்
சிற்சிலருக்கு மௌனமொழியும்
இன்னும் சிலருக்கு இதந்தரும் மொழியும்
வேறு சிலருக்கு இதயத்தின் 
ஓரத்தைப் பதம் பார்க்கும் கூர்மொழியும் 
ஏராளமாய் தாராளமாய் கிடைத்தபோழ்தில்...

ஏனோ... 
மதிப்பெண் குறைந்து தேறத்தவறிய 
என்னை மட்டும் எனது பேராசிரியரின் 
வசையோ, இசையோ அற்ற 
வெறுமையான நிமிடம்... 
அவரின் கவனத்தில்கூட இடம்பெறாத 
ஓர் தருணம் நிகழ்ந்தது...

வகுப்பின் நேரம் நிறைந்ததென
மணியும் ஒலித்து...
கடுமொழிகளின் அபாயத்தில் இருந்து
அபயம் தந்தது...
அன்றைய தினம் நிறைந்ததென
கல்லூரியும் முடிந்தது!

ஆனால் ஏனோ...
மனம் கிடந்து துடித்தது....
மதிப்பெண் குறைந்தவர்கள்
எல்லோரையும் திட்டியதுபோல், 
நம்மையும் ஓரிரு  சொல்கொண்டு 
குட்டி இருக்கலாமே...?

சொல்லாத சொல் சுட்டது...!

தன்பிழையைத் தானே உணரச் செய்தது...
இதயத்தை இடித்துக் காட்டியது... 
மனதைப் போட்டு வாட்டியது...
புத்தியைப் பக்குவப்படுத்தியது...


சொல்லாது விடுத்ததிலும்
தொக்கி நின்றே...  
வழி நடத்துகிறது! 

சொற்கள் கொண்டு அடுக்கியதைவிட
சொல்லாத சொல்லே திருத்தியது!
மனம் வருந்தி உணர்ந்ததால், 
பின்னாளில்...
தேர்ச்சி சதவீதம் எழுச்சி பெற்றது! 

சொல்லாத சொல்லால் 
சொர்க்கம் கண்டடையச் செய்த 
சொக்கத் தங்கமான பேராசிரியருக்கு
சொல்லாது விடுத்த நன்றிமலர்களை...
இப்போது...
என்ன செய்வது...?! 


(முனைவர் தி.தங்கலட்சுமி, எங்கும் நீக்கமற நிறை ஈசனின் திருவருளால் கல்விக்கண்தந்த பெருந்தலைவர் அவதரித்த விருதை மண்ணில் வசிக்கும் பாக்கியம் பெற்றவர். பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் 
பிறந்தாரோட ஆனந்தமாக இன்பம் களிக்கும் ஆனந்தப் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்.)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்