பெண்கள் படிக்கணும்.. கத்துக்கிட்டே இருக்கணும்.. உதாரண நாயகியாக திகழும் டாக்டர் உஷா தண்டாயுதபாணி!

Oct 11, 2025,11:09 AM IST

திருமதி உஷா தண்டாயுதபாணி ஆகிய நான் என்னுடைய வெற்றிப்பாதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். எனக்கு வயது 58. நான் ஒரு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணி செய்து வருகிறேன். எனது கணவர் திருச்சி பாய்லர் தொழிற்சாலையில் பணி செய்து ஓய்வு பெற்று இருக்கிறார். இரண்டு மகள்கள். இருவரும் திருமணம் முடிக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளனர். அறிமுகம் போதும்.. வாங்க நான் கடந்து வந்த பாதையை உங்களுக்குக் காட்டுகிறேன்..!


அப்போதெல்லாம் பெண் பிள்ளைகளுக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்க. எனக்கும் 15 வயதில் திருமணம் நடந்தது. நான் அது சமயம் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனது கணவர் எனக்கு நெருங்கிய உறவுமுறை. அதனால் என்னுடைய பெற்றோரும் என்னுடைய தாத்தாவும் எனது திருமணத்தை முடிவு செய்தார்கள். திருமணம் என்றால் என்ன என்று புரியாத நிலை. ஆனால் வீட்டில் உள்ள பெரியோர்களின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நான் அதை ஏற்றுக் கொண்டேன். ஆனால் என்னுடைய பெற்றோரும் தாத்தாவும் எனது கணவர் இடத்தில் ஒரு நிபந்தனையை வைத்தார்கள். அவரும் ஒப்புக்கொண்டார். 


அதுதான் நான் இன்று வாழ்க்கையில் சாதிப்பதற்கு எனக்கு பெரும் துணையாக இருந்தது. அது என்னவென்றால் நான் விரும்பும் வரை எனது கல்வியை தொடரச்செய்ய வேண்டும் என்பதாகும். கல்விக்கு தடையை என் கணவர் விதிக்கக்கூடாது என்பதில் என்னுடைய பெற்றோரும் தாத்தாவும் உறுதியாக இருந்தனர். கணவரும் எனக்கு பேருதவியாக இருந்தார்.. பத்தாம் வகுப்பு முடித்தேன். அன்றைய காலகட்டத்தில் பத்தாம் வகுப்பு முடித்தால் ஆசிரியர் பயிற்சியில் சேரலாம். உடனே ஆசிரியர் பயிற்சி யில் சேர்ந்தேன். பயிற்சி முடித்தவுடன் எனது மூத்த மகள் பிறந்தாள். என்னுடைய கல்வியும் தொடர்ந்தது.




சென்னை பல்கலைக்கழகத்தில் பி லிட் படிப்பை தொடங்கினேன். அந்த ஆண்டிலேயே எனக்கு ஆசிரியர் பணியும் கிடைத்தது. தொடர்ந்து பிஎட் படித்தேன். அதன் பின்னர் எம் ஏ படித்தேன். என்னுடைய மகள் பத்தாம் வகுப்பு வரும் வரை நான் என்னுடைய கல்வியை தொடர்ந்து கொண்டே இருந்தேன். அதன் பின்னர் அவர்களின் மேல் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக என் கல்வி நிலையை நான் தொடராமல் அவர்களை கவனிப்பதிலேயே நான் கவனமாக இருந்தேன். என்னுடைய ஆசிரியர் பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக பணி உயர்வு பெற்று பணியைச் செய்து கொண்டிருக்கிறேன். 


சரிங்க மேடம்.. அப்படி என்ன வெற்றிப் பாதையை நீங்கள் எட்டி விட்டீர்கள்.. என்றுதானே நீங்க நினைக்கறீங்க.. உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கும் கேட்குது.. இருங்க அதுக்கும் பதில் சொல்றேன்..


நான் பத்தாம் வகுப்பு படிப்பதற்காக திருமணமாகி பள்ளிக்குச் சென்றபோது என்னுடைய நெருங்கிய தோழிகளே என்னை விட்டு விலகிச் சென்றனர். எந்த இடத்திற்கு நான் சென்றாலும் பள்ளி வளாகத்தில் என்னை வேறுபடுத்தி மட்டுமே பார்த்தனர். காரணம் எனக்கு திருமணம் ஆனது தான். அப்பொழுதெல்லாம் மனதுக்கு மிகவும் வலிக்கும். என்னுடைய காயங்களுக்கு யாரும் ஒத்தடம் கொடுக்கவில்லை. திருமணமானது ஒரு தவறா? என்று எனக்கு நானே கேட்டுக் கொள்வேன். வேறு யாரிடமும் கேட்கத் தெரியாது. அந்தப் பாதையை நான் கடந்து வந்தேன். நல்ல மதிப்பெண்ணுடன் எனது பள்ளி படிப்பை முடித்தேன்.


அடுத்த ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கு வந்தேன். அங்கும் இதே நிலைதான் தொடர்ந்தது. இந்த சமுதாயத்திலே ஒரு சராசரி பெண்ணாக நான் வாழ்ந்ததே ஒரு பெரிய போராட்டம். ஆனால் குடும்பத்தில் எனக்கு பெரும் ஆதரவு. அதனால்தான் என்னால் எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய முடிந்தது. நான் பணி செய்யும் பள்ளியிலும் மாணவர்கள் சக ஆசிரியர்கள் பெற்றோர்கள் எம் பள்ளியின் கடைநிலை ஊழியர்கள் அனைவரின் நன்மதிப்பையும் பெற்று இது நாள் வரை பணி செய்து வருகிறேன். என்னுடைய வயதிலே, வாலிப வயதிலே நான் சாதிக்க நினைத்த விஷயங்கள் பல பல. அவை ஒவ்வொன்றையும் இன்று மிக்க மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்துடன் இணைந்து பல விஷயங்களையும் சாதித்துக் கொண்டிருக்கிறேன்.


திருவாசகம் முற்றும் எழுதுவதில் தொடங்கியது என் வெற்றிப் பாதை. அடுத்தது எட்டு மணிநேர உலவை சாதனை .ஆம் ஏழாம் திருமுறையான சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்தை பாராயணம் செய்தேன். அடுத்து ஏபிஜே அப்துல் கலாம் நினைவு தினம் ஐந்து நாட்கள் சாதனை நிகழ்வு 99 பேர் நிகழ்த்திய சாதனையில் நானும் ஒருத்தி மிகவும் பெருமையாக இருக்கிறது. அதன்பின்னர் முப்பால் தமிழ் தென்றல் விருது. ஆசிரியர் தின நிகழ்விலே என்னைக் கவர்ந்த ஆசிரியர் என்ற தலைப்பில் நான் ஆசிரியராக பணியேற்ற போது எனக்கு இருந்த தலைமை ஆசிரியரின் பெருமைகளை பதிவு செய்தேன் அதற்கு ஒரு விருது. திருக்குறள் அறத்துப்பால் வாசித்தேன். அதற்கு ஒரு அங்கீகாரம்.


ஹிரோஷிமா நாகசாகி தினம் குறித்தும் போரால்ஏற்படும் அழிவுகள் குறித்தும் இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் குரல் பதிவு செய்தேன், அதற்கு ஒரு விருது. ஐயா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்தேன், அதற்கும் ஒரு சான்றிதழ். பத்தாம் திருமுறையான திருமந்திரம் எழுதி நிறைவு செய்தேன் அதற்கும் ஒரு சான்று. சுவாமி விவேகானந்தர் அவர்களின் சீடரான குட்வின் குரு பக்தியில் வந்து விளங்கியவர் யார்? ஏகலைவன் குட்வின் பட்டிமன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் அதற்கும் ஒரு சான்றிதழ். வள்ளலார் அகவல் பாராயணம் செய்தேன். அதற்கு ஒரு சான்றிதழ்.


நவராத்திரி விழாவில் பத்து நாள் கவிதையை தொடர்ந்து எழுதினேன். முப்பெரும் தேவியரின் பாடல்களை பாராயணம் செய்தேன். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை எழுதியுள்ளேன். சகோதரி நிவேதிதாவை பற்றி அவரது சேவையைப் பற்றி ஆன்மீக வாழ்வை பற்றி எழுதியும் குரல் பதிவு செய்தோம் உள்ளேன். இத்தனைக்கும் காரணம் எனக்கு படம் பதிக்கும் தள்ளீர்கள் பன்னாட்டு மையம் திருவண்ணாமலை கொடுத்த அங்கீகாரமே காரணம். என்னுடைய இளமை காலத்திலே நான் செய்ய நினைத்தது அத்தனையும் இப்பொழுது புதிதாய் பிறப்பெடுத்ததைப் போல் சாதித்துக் கொண்டிருக்கிறேன். 


நான் பல சந்தர்ப்பங்களில் நினைத்துப் பார்ப்பேன் என்னுடைய கடந்த கால வாழ்க்கையில் எனக்கு என்று நான் எதையும் செய்து கொள்ளவில்லை. எனக்கு பிடித்தது எது? எதை செய்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்றெல்லாம் கூட தெரியாமல் இருந்தேன். ஆனால் எனது மகிழ்ச்சியையும் எனக்குள் இருக்கும் சிறு சிறு பொறிகளையும் தட்டி எழுப்பு இருப்பது தடம் பதிக்கும் தளிர்கள் என்பதை இங்கே பதிவு செய்கிறேன். எனக்கு மட்டுமல்ல என்னைப் போல பல சகோதரிகள் இங்கே தட்டி எழுப்பப்பட்டுள்ளார்கள் என்பதையும் நான் கூறிக் கொள்கிறேன். இந்த 58 வயதிலும் என்னால் ஒவ்வொரு நிகழ்விலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஒரு சிறிதும் குறையாமல் பள்ளிப் பணியோடு இவற்றையும் ஆர்வம் குன்றாமல் செய்து வருகிறேன்.


பெண்கள் அனைவருமே குடும்பத்துக்காக பிள்ளைகளுக்காக மனதுக்குப் பிடித்த எத்தனையோ விஷயங்களை மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். பிள்ளைகள் நம்மை விட்டு பிரிந்து செல்லும் தருணங்களில் இருக்கும் பெண்களுக்கெல்லாம் ஒரு சிறப்பான சேவையை செய்து அனைவரையும் மகிழ்ச்சியோடும் அன்போடும் வழிநடத்துகிறது தளிர்கள் அமைப்பு என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் உஷா தண்டாயுதபாணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆப்கானிஸ்தான் அமைச்சரின் பிரஸ்மீட்டில் பெண்களுக்கு அனுமதி இல்லை.. கிளம்பிய சர்ச்சை!

news

என்னாது நோபல் அமைதிப் பரிசு லீக் ஆய்ருச்சா.. சூதாட்டக் கும்பல் அட்டகாசம்.. அதிர்ச்சியில் நார்வே

news

அனல் பறக்கும் மாதம்பட்டி விவகாரம்.. பாலைவன பூமியில் ஓய்வெடுக்கும் மனைவி ஸ்ருதி

news

பேசாம ஹனிமூனையும் கூட நீங்களே முடிவு செஞ்சு சொல்லிடுங்களேன்.. திரிஷா நச் பதிலடி!

news

அக்.,17ல் கரூர் செல்லும் விஜய்?... கல்யாண மண்டபத்தில் பாதிக்கப்பட்டோரை சந்திக்க திட்டம்!

news

ஐயா அப்பத்தாவே ஆணிவேர் !

news

பெரியார் வழியைக் காட்டிய தந்தை.. அடுத்தடுத்து படித்து.. அசர வைக்கும் பேராசிரியை மஞ்சரி!

news

அம்மாவுக்குள் இருந்த ஏக்கம்.. அவருக்கும் சேர்த்து வட்டியும் முதலுமாக மேடையில் கலக்கும் தன்யா!

news

பெண்கள் படிக்கணும்.. கத்துக்கிட்டே இருக்கணும்.. உதாரண நாயகியாக திகழும் டாக்டர் உஷா தண்டாயுதபாணி!

அதிகம் பார்க்கும் செய்திகள்