கனவு மெய்ப்பட வேண்டும்!

Feb 16, 2026,11:32 AM IST

- வி.எமல்டா குயின் மேரி 


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இடையத்தான்குடி. அந்தப் பள்ளியின் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த "அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான ஆங்கிலப் பேச்சுப்போட்டி" அறிவிப்பு, ஆசிரியை மேரிக்கு ஒரு புதிய கனவைத் தந்தது. அவர் தேர்ந்தெடுத்தது எளிய குடும்பத்தைச் சேர்ந்த, ஆனால் கூர்மையான அறிவு கொண்ட தர்ஷினி என்ற மாணவியை.


"டீச்சர், எனக்கு இங்கிலீஷ் வராதுங்க டீச்சர்..." எனத் தயங்கிய தர்ஷினியின் கைகளைப் பற்றிக்கொண்டார் மேரி. 


"உனக்கு வராதது எதுவுமே இல்லை தர்ஷினி. நான் இருக்கேன், நாம ஜெயிப்போம்," என்ற அந்த வார்த்தைதான் அந்தப் பயணத்தின் தொடக்கம்.


பயிற்சி தொடங்கிய சில நாட்களிலேயே மேரி டீச்சருக்குக் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஒருபுறம் தீவிரமான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு, மறுபுறம் தர்ஷினியின் உச்சரிப்புப் பயிற்சிகள். மருத்துவர்கள் "ஓய்வு எடுக்காவிட்டால் நிலைமை மோசமாகும்" என எச்சரித்தனர். ஆனால், மேரி டீச்சரோ மாத்திரைகளை விழுங்கிவிட்டு, பள்ளி முடிந்த பின்னும் தர்ஷினிக்காகக் காத்திருந்தார்.




அவருக்கு இன்னொரு சவாலும் இருந்தது. போட்டிக்குத் தேவையான தரவுகளைச் சேகரிப்பதிலும், தர்ஷினியின் தயக்கத்தைப் போக்குவதிலும் அவர் இரவு பகலாக உழைத்தார்.


வட்டார அளவில் தர்ஷினி எளிதாக வென்றாள். ஆனால், மாவட்ட அளவிலான போட்டிக்குச் சென்றபோதுதான் உண்மையான 'அரசியல்' முகம் தெரிந்தது. அது அரசுப் பள்ளிகளுக்கான போட்டிதான் என்றாலும், அங்கு செல்வாக்கு மிக்க சில ஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நெருக்கமான மாணவர்களை ஜெயிக்க வைக்க வேண்டும் எனச் சில நடுவர்கள் திரைமறைவில் காய் நகர்த்தினர்.


தர்ஷினி மிகச்சிறப்பாகப் பேசியும், அவளுக்குக் குறைவான மதிப்பெண்களை வழங்க நடுவர்கள் திட்டமிட்டனர். அவளது தலைப்பில் இல்லாத குறைகளைக் கண்டுபிடித்து அவளைக் கீழிறக்க முயன்றனர். மேரி டீச்சருக்கு இதயம் படபடத்தது. உடல்நிலை ஒத்துழைக்காத அந்த நேரத்திலும், அவர் நடுவர்களின் பாரபட்சமான கேள்விகளை எதிர்த்துத் துணிச்சலாக வாதிட்டார்.


"திறமைக்கு முன்னால் உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் எடுபடக்கூடாது" என மேரி டீச்சர் ஆதாரங்களுடன் பேசியது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது. மேரியின் உறுதியைக் கண்டு அஞ்சிய நடுவர்கள், தர்ஷினியின் அசைக்க முடியாத திறமைக்கு முதலிடம் வழங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். சூதுகளைத் தாண்டி உண்மை வென்றது.


மாவட்ட அரசியலைத் தாண்டி, மாநிலப் போட்டிக்குச் சென்றபோது தர்ஷினி ஒரு முதிர்ந்த பேச்சாளராக மாறியிருந்தாள். மேரி டீச்சரின் மெலிந்த உடல், தர்ஷினியின் வெற்றியைக் கண்டபோது புதுத்தெம்பு பெற்றது. மாநில அளவில் தர்ஷினி பேசியபோது, எந்தச் சூழ்ச்சியாலும் அவளைத் தடுக்க முடியவில்லை.


"இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி தர்ஷினிக்கு மாநில அளவில் முதல் பரிசு!" - இந்த அறிவிப்பு கேட்டபோது மேரி டீச்சர் தேம்பித் தவித்தார். அத்தனை அவமானங்கள், உடல்நலக் குறைவு, மாவட்ட அளவில் சந்தித்த அதிகார துஷ்பிரயோகங்கள் என அனைத்திற்கும் மருந்தாக அமைந்தது அந்த வெற்றி.


பள்ளியும் ஊரும் மேரி டீச்சரையும் தர்ஷினியையும் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அந்த வெற்றியின் பலனாக தர்ஷினிக்கு அரசு சார்பில் மலேசியா செல்லும் அரிய வாய்ப்பு கிடைத்தது. வானூர்தியில் (விமானம்) அமர்ந்து மேகங்களைக் கடந்தபோது, தர்ஷினிக்குத் தன் மேரி டீச்சரின் முகம் தான் நினைவுக்கு வந்தது. மலேசியாவின் அழகிய இடங்களைச் சுற்றிப் பார்த்தபோதும், அந்நாட்டு உணவுகளைச் சுவைத்தபோதும் அவள் ஒரு தேவதையைப் போல உணர்ந்தாள்.


ஒரு சாதாரண கிராமத்துப் பெண்ணை, அதிகார வர்க்கத்தின் அரசியலை உடைத்து, கடல் தாண்டிப் பறக்க வைத்தது மேரி டீச்சரின் அயராத உழைப்பும், அறச்சீற்றமும் மட்டுமே.


எந்த ஒரு சவாலான சூழலிலும், நேர்மையையும் உழைப்பையும் ஆயுதமாகக் கொண்டு போராடினால் நிச்சயம் வெற்றி பெறலாம். உடல்நலக்குறைவு, அரசியல் சூழ்ச்சிகள் எனத் தடுத்த அனைத்தையும் மீறி, தர்ஷினியை வெற்றி பெற வைத்த மேரி டீச்சரின் கதை நமக்கு உணர்த்தும் பாடம் இதுவே.


முயன்றால் முடியாதது எதுவும் இல்லை!


(வி.எமல்டா குயின் மேரி, ஆங்கில பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இடையத்தான்குடி, 

அரியலூர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

news

ஜெம் கிரானைட் வீரமணி மீது மேலும் ஒரு பெண் புகார்: தீவிரமடையும் விசாரணை

news

Malliga Selvaraj Poem: கோலங்கள்!

news

கோவில்களில் காட்டப்படும் தீபாராதனைகளுக்கு விதம் விதமான அர்த்தம் இருக்கு தெரியுமா?

news

கிருஷ்ணர் ஏன் ராதையைக் காதலித்து ருக்மணியை மணந்தார் தெரியுமா?

news

Chennai Marina beach: 140 வருஷத்துக்கு முன்னாடி மெரீனா கடற்கரை எப்படி இருந்துச்சு தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்