- ஈரோடு மாலதி
நளாயினி என்கிற திரௌபதி முற்பிறவியில் வனத்தில் சிவபெருமானை வேண்டித் தீவிரத் தவத்தில் இருந்தாள். அப்பொழுது சிவபக்தரான முனிவர் ஒருவர் மிகவும் பசியோடு வந்து, அம்மா எனக்கு மிகவும் பசிக்கிறது, உணவு கொடு என்று கேட்டார். அதற்கு நளாயினி, ஐயா சற்றுப் பொறுங்கள், நான் சிவபூஜையை முடித்துவிட்டு வந்து உங்கள் பசியைப் போக்குகிறேன் என்று கூறிவிட்டுத் தவத்தில் மூழ்கினாள்.
தவத்தின் ஆழ்ந்த நிலைக்குச் சென்றதால் நீண்ட நேரமாகியும் அவள் தியானத்தில் இருந்து வெளிவரவில்லை. பசியோடு காத்திருந்த முனிவரும் அங்கிருந்து மறைந்துவிட்டார். தவத்தை முடித்து எழுந்த நளாயினி, முனிவரைக் காணாமல் ஐயோ என்று தேடிப் பார்த்தாள். அப்பொழுது அவள் பின்னே தோன்றிய முனிவர், அம்மா நீ சிவனை வழிபடும் போது பசியோடு இருந்த என்னை மறந்துவிட்டாய். பசியோடு இருப்பவருக்கு உணவளிக்காமல் நீ என்ன தவம் செய்தாலும் அது பலிக்காது. இது உன்னைச் சேரும் கர்மா, இதற்கான சாபத்தை நீ அடைவாய் என்றார்.
நளாயினி வருந்தி மன்னிப்புக் கேட்டு, இதற்குக் பரிகாரம் இல்லையா என்று வினவினாள். அதற்கு முனிவர், நீ மறுபிறவியில் திரௌபதியாக அவதரிக்கும் போது, உன்னிடம் வரும் முனிவர்கள், ரிஷிகள், சிவபக்தர்கள் என அனைவரின் பசியையும் போக்கும் வண்ணம் அள்ள அள்ளக் குறையாத அக்ஷய பாத்திரம் உனக்குக் கிடைக்கும். பிறருக்கு உணவளிக்கும் அந்தப் பாக்கியத்தின் மூலமே உன்னுடைய கர்மா கழியும் என்று கூறி மறைந்தார்.
இதைக் கேட்ட திரௌபதி கண்ணீர் விட்டு, இந்தச் சோதனையை நான் அனுபவிக்க வேண்டுமா மாதவா என்று கிருஷ்ணரிடம் முறையிட்டாள். அதற்கு கிருஷ்ணர், சகி இதுமட்டுமல்ல, இன்னும் ஒன்று நடக்கும் என்று கூறித் தொடர்ந்தார். வரவிருக்கும் குருக்ஷேத்திரப் போரில், மிகப்பெரிய பீஷ்மர், துரோணர் மற்றும் பல தர்மத்தின் தலைவர்கள் தலைகுனிந்து நிற்பார்கள். உன்னுடைய ஐந்து கணவர்களும் உதவி செய்ய இயலாத நிலையில், நீயே சுயமாகத் தர்மத்தைக் கையில் எடுத்து இறைவனை அழைப்பாய். அப்போது உனக்கு உதவ நான் வருவேன்.
துரியோதனன் உன்னைத் துகிலுரிந்து அவமானப்படுத்த முயலும் போது, இறைவனின் அருளை நீ அறிவாய். நான் என்ற ஆணவத்தில் அவர்கள் உன்னை அவமானப்படுத்தினாலும், தர்மத்திற்காக நான் எப்போதும் உன் கூடவே இருப்பேன்.
தர்மத்திற்காகப் பாண்டவர்களுக்காகக் கௌரவர்களிடம் ஐந்து ஊர் நிலம் கேட்பேன். அதை அவர்கள் நியாயமாகக் கொடுக்கவில்லை என்றால் போர்க்களம் அமையும். அந்தப் போரில் மிகப்பெரிய ஜாம்பவான்களும் வீரர்களும் மடிவார்கள். அதர்மம் அழிந்து தர்மம் காக்கப்படும் போது, நீ தர்ம தேவதியாக இந்த உலகத்தில் போற்றப்படுவாய். வரவிருக்கும் பெண்களுக்கு உன்னுடைய வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணமாக மாறும். எப்பேர்ப்பட்ட போராட்டத்திலும் உன் உடன் நான் இருப்பேன். பல சோதனைகளைக் கடந்து வரும்போது மட்டுமே, மகாபாரதத்தின் உச்சகட்டத்தில் என்னால் தர்மத்தை நிலைநாட்ட முடியும் என்று கிருஷ்ணர் திரௌபதிக்கு ஆறுதல் கூறினார்.
அங்காள பரமேஸ்வரியின் அம்சமாகவும் அக்னி தேவியாகவும் அவதரித்த பாஞ்சாலிக்கு, கர்மாவை தர்மத்தால் எப்படி வெல்ல வேண்டும் என்ற போதனையை கிருஷ்ணர் வனவாசத்தில் வழங்கினார். எவரொருவர் ஒரு பெண்ணை அவமானப்படுத்தினாலும், தர்மத்தின் வழியில் நின்று மாதவா என்று அழைக்கும் போது அவர்களுக்குத் துணையாக நிற்பேன் என்பதை உணர்த்தினார். தர்மத்தின் வழியில் நடக்கும் போது இறைவன் நிச்சயம் துணையாக இருப்பான் என்பதே இந்த வனாந்தர உபதேசத்தின் இரகசியமாகும்.
(கட்டுரையாளர் மாலதி, நசியனூர், நெசவாளர் காலனி, சிந்தன்கோட்டை, எம்ஜிஆர் ரோடு, ஈரோடு)
{{comments.comment}}