புனித ரமலான் மாதமும் நோன்பும்!

Feb 19, 2026,02:27 PM IST
- க. யாஸ்மின் சிராஜூதீன்

புனித ரமலான் மாதம் பிறந்தது . 

நோன்பு என்னும் ஒழுக்கம் கற்பிக்கும் ஆசான் நமக்குள் வந்தார்..  சிறுவர் முதல் மூத்தோர் வரை மகிழ்ச்சி அலை வீசுகிறது.. 

சின்னஞ்சிறு பிள்ளைகளின் ஆர்வம் மிகப் பெரியது. நோன்பு நோற்பதில் அவ்வளவு பெரிய மகிழ்ச்சி அடங்கி உள்ளது.. 


ரமலான் மாதத்தின் சிறப்பு



ரமலான் (Ramadan) என்பது இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டின் 9-ஆம் மாதம் ஆகும். இது முஸ்லிம்களுக்கு மிகப் புனிதமான மாதம் ஆகும். இந்த மாதத்தில் தான் திருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றது.அனைவரும் திருக்குர்ஆன் முழுவதும் இம்மாதம் ஓதிமுடிப்பர். 

ரமலான் நோன்பு நோற்பது இஸ்லாமின் ஐந்து கடமைகளில் (Five Pillars of Islam) ஒன்றாகும். ரமலான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் வைகறை (பஜ்ர்) முதல் சூரிய அஸ்தமனம் (மஃரிப்) வரை உணவு உண்ணாமல் தண்ணீர் குடிக்காமல் தீய செயல்களை தவிர்த்து அல்லாஹ்வை நினைத்து நோன்பு நோற்பார்கள்.

சிறிய வயதுக் குழந்தைகள் (நானும் சிறுவயதில்)  எப்போது நோன்பு திறப்போம்  அம்மா. அம்மா இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு என அம்மாவிடம் கோட்பார்கள்.. வீட்டில் பெரியவர்கள் கொடுத்த காசில் நோன்பு திறந்து உண்பதற்கு வாங்கி வைத்துக் கொள்வர் அப்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பார்கள். நண்பர்கள் உடன் விளையாடுவார்கள்.. நோன்பு திறக்க வழங்கப்படும் கஞ்சியை மசூதிக்கு சென்று வாங்கி வருவதும் நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து அதை அருந்துவதும் சிறுவர்களின் வாழ்நாள் முழுவதும் மனதில் அலைமோதும் ஓயாத அலைகள் ( தற்போது என் மனதிலும் அலை மோதுகிறது. (நினைவலைகள்) ) 

இது வெறும் உணவைக் கைவிடுவது மட்டும் அல்ல; மனம், நாவு, கண், காது ஆகியவற்றையும் கட்டுப்படுத்துவதாகும்.
இரவு அலாரம் வைத்து சரியான நேரத்தில் எழுந்து உணவை தயாரித்து நோன்பு நோற்கத்தயாராவது மகிழ்ச்சியான தருணங்கள்.. 

சஹர் விடியற்காலைக்கு முன் உண்ணும் உணவு

இஃப்தார் (Iftar) – சூரிய அஸ்தமனத்தில் நோன்பு திறப்பது பேரிச்சை, தண்ணீர் கொண்டு தொடங்குவது வழக்கம். 
கஞ்சி மசூதியில் தயார் செய்வார்கள்.. குளிர் பானங்கள், உணவு,போன்ற வற்றை தினமும் பகிர்ந்து நோன்பு திறப்பார்கள்.. 

தரவீஹ் தொழுகை (Taraweeh) – இரவு சிறப்பு தொழுகை தொழுவார்கள். தினம் தினம் பண்டிகையே , வீடும், பள்ளி வாசலும் கோலாகலமே..

பெண்கள் வீட்டிலும் ஆண்கள் மசூதியிலும் நோன்பு திறப்பது  , தொழுகை நடத்துவது நடைபெறும்.. 

நோன்பின் நோக்கங்கள்

தன்னடக்கம் மற்றும் ஒழுக்கம் வளர்த்தல், பசி, தாகம் அனுபவித்து ஏழைகளின் நிலையை உணருதல்,  அல்லாஹ்வின் பயமும் பக்தியும் அதிகரித்தல், மன மற்றும் ஆன்மீக சுத்திகரிப்பு, ஆரோக்கியம் பாதுகாப்பு, ஒழுக்கம் பேணுதல்ஆகியன. 

செய்யப்படும் நற்செயல்கள்

திருக்குர்ஆன் ஓதுதல்,  தர்மம் (சகாத்) வழங்குதல் ஏழைகளுக்கு உதவி செய்தல்,  பொய், பழிசொல், கோபம் போன்றவற்றை தவிர்த்தல். 

லைலத்துல் கதர் (Laylatul Qadr)

ரமலானின் கடைசி பத்து நாட்களில் வரும் மிகப் புனிதமான இரவு. இந்த இரவில் செய்யப்படும் தொழுகை மற்றும் துஆக்கள் ஆயிரம் மாத தொழுகைக்கு சமமான பலனை தரும் என்று நம்பப்படுகிறது.

ரமலான் நோன்பு என்பது உடல் ஆரோக்கியத்திற்கும், மன அமைதிக்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் உதவும் ஒரு புனித கடமை. இது மனிதனை நல்ல ஒழுக்கம் உடையவராக மாற்றி, அன்பும் கருணையும் நிறைந்த வாழ்க்கையை வாழ கற்றுத்தருகிறது. 

பண்டிகைக்கு துணி எடுப்பதும் அதை நண்பர்களிடம் காட்டி மகிழ்வதும் (அப்போது புதிய ஆடைகளை அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் காட்டி மகிழ்வர்). ஏழை எளியவர்களுக்கும் ,உறவினர்களுக்கும் ஆடைகளை வாங்கித்தருவதும் தேவையான உதவிகளைச் செய்வதும்  மகிழ்ச்சியான தருணங்கள்.. அதிலும் தாய் வீட்டிலிருந்து பெண்களுக்கு வழங்கப்படும் புதிய ஆடைஅணிமணிகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் உண்டு. பெண்களின் மகிழ்ச்சியே அதில் பெருமை கொள்கிறது . 

சாதி ,மதம், இனம் கடந்து ஒருவருக்கொருவர் அன்பு பகிர்ந்துவாழ வழிவகை செய்யும் புனித மாதம் ரமலான்.  நாம் அனைவரும் ஒழுக்கம்,அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, தான தர்மங்களை வழங்கி சிறப்புடன் வாழ அல்லாஹ் அருள் புரிவானாக. சீறும் சிறப்பும் வாய்ந்த ரமலான் நம் அனைவரின் எஜமான்... இறை நம்பிக்கையும் ,தன் நம்பிக்கையும் கொண்டால் நம் செயல்கள்  வெற்றி அடையும் என்பதில் ஐயமில்லை. 
எல்லா புகழும் இறைவனுக்கே.

(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்