சென்னை : ஃபுட்போர்டு எனப்படும் பஸ்களில் படியில் தொங்கிய படி பயணம் செய்யும் முறை ஒரு கலாச்சாரம் போலவே தொடர்ந்து கொண்டிரு்கிறது.
இன்று நேற்றல்ல.. இது மாணவர்களிடம் பல காலமாக இருந்து வருகிறது. அந்தக் காலத்து சிவாஜி கணேசன் காலம் முதல் இந்தக் காலத்து சிம்பு காலம் வரை, இப்படித்தான் பெரும்பாலான மாணவர்கள் படிகளில் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள்.
முன்பெல்லாம் கல்லூரி செல்லும் மாணவர்கள் தான் இது போல் ஃபுட்போர்டில் தொங்கிய படி பயணம் செய்வதை பார்த்திருப்போம். கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போதெல்லாம் பள்ளி செல்லும் மாணவர்களே அப்படி செல்வதை காண முடிகிறது.
கமல்ஹாசன் - அமலா போல
70கள், 80களில் வந்த பல படங்களில் இதை வைத்து பல காட்சிகளும் கூட சித்தரிக்கப்பட்டுள்ளன. ஏன் சத்யா படத்தில் கமல்ஹாசனும், அமலாவும் கூட பஸ்சில் தொங்கியபடி பாடிச் செல்லும் பாடல் காட்சி பல காலமாகவே இன்று வரை பார்த்துப் பார்த்து சிலாகிக்கப்படத்தானே செய்கிறது. இதே காட்சியை முன்மாதிரியாக வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா - சமந்தாவுடன் புட்போர்ட் போவது போல சீன் வைத்தார்களே!
பஸ் படிக்கட்டில் தொங்கிய படி சென்ற எத்தனையோ பேர் மரணம் அடையும் செய்திகள், படியில் பயணம்... நொடியில் மரணம் என்ற அரசின் எச்சரிக்கைகள், ஃபுட்போர்டில் பயணம் செய்தால் அபராதம் என எத்தனை வந்தாலும் மாணவர்களிடம் இந்த ஃபுட்போர்டு கலாச்சாரம் கொஞ்சமும் குறைந்தபாடில்லை. பஸ்சின் படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்து, பஸ்சின் மேற்கூரையில் பயணம் செய்வது, பஸ்சின் பின்னால் இருக்கும் கம்பியில் தொங்கி கொண்டு பயணம் செய்வது என பலவற்றை இப்போதும் நாம் கண்கூடாக பார்க்கிறோம்.
கிராமங்களில் இது போல் பயணம் செய்தால் அதற்கு, அரசு போக்குவரத்து கழகம் போதிய அளவில் பஸ்களை இயக்கவில்லை. குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே ஒன்று அல்லது இரண்டு பஸ்கள் மட்டும் இயக்கப்படுவதால் வேறு வழி இல்லாமல் இப்படி பயணம் செய்வதாக காரணம் சொல்கிறார்கள். சரி பஸ் உள்ளிட்ட மற்ற பொது போக்குவரத்து வசதிகள் அதிகம் இருக்கும் நகர்புறங்களில் இந்த ஃபுட் போர்டு கலாச்சாரம் கிடையாதா என்றால், அங்கு தான் இன்னும் அதிகமாக உள்ளது. அப்படியானால் உண்மையில் இதற்கு என்ன தான் காரணம்?
அதிக பஸ்கள் தேவை
உண்மையிலேயே அரசு போதிய அளவில் பஸ்களை இயக்காததா அல்லது பெருகி வரும் மாணவர்கள் மற்றும் மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, தேவைப்படும் பகுதிகளில் அதிக பஸ்கள் இயக்கப்படாதது காரணமா? இது மட்டும் தான் காரணமா என்றால் நிச்சயமாக கிடையாது. ஆனால் இதுவும் ஒரு காரணம். அது சில பகுதிகளில் மட்டுமே. பெரும்பாலான வழித்தடங்களில் ஃபுட்போர்டில் பயணம் செய்வதை ஸ்டைல் என நினைத்து, அதனால் வரும் ஆபத்தை உணராமல் மாணவர்கள் பயணம் செய்கிறார்கள்.
பஸ்களின் டிரைவர், கண்டக்டர் கண்டித்தால் கூட, அவர்களுடன் பலர் தகராறு செய்வதையே காண முடிகிறது. அவர்களைத் திட்டுவதும், அடிப்பதும், வெட்டி விடுவேன் என்று மிரட்டுவதும் நிறையவே நடக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் அவர்களை கண்டக்டர்களும் சரி, டிரைவர்களும் சரி எதுவும் பேச முடியாத நிலை காணப்படுகிறது. உண்மை இதுதான்.
மாணவர்களிடம் விழிப்புணர்வு தேவை
பள்ளி மாணவர்களிடம் கூட இத்தகைய கலாச்சாரம் அதிகரிக்க சினிமாவின் தாக்கமே அதிக காரணமாக உள்ளது. சினிமாக்களில் ஹீரோக்கள், ஹீரோயினை அல்லது இளம் பெண்களை கவருவதற்காக படியில் தொங்கியபடி பயணம் செய்வது போலவும், ஓடும் பஸ்சில் ஏறுவது, இறங்குவது என காட்டுகிறார்கள். இதை பார்த்து இளம் பெண்கள் மயங்கி, அவர்கள் பின்னால் சுற்றி வருவது போலவும் காட்டுகிறார்கள். இந்த மாயையில் மயங்கும் மாணவர்களும் தாங்களும் இது போல் ஹீரோயிசம் காட்டினால் பல இளம்பெண்கள் நம்மை பார்ப்பார்கள், அவர்கள் மத்தியில் நாம் ஹீரோவாக தெரிவோம் என நினைக்கிறார்கள்.
பல பஸ்களில் கூட்டமாக இருக்கும் போது மட்டுமல்ல, கூட்டமே இல்லாமலும், உள்ளே செல்ல இடம் இருந்தாலும் கூட படியில் பயணம் செய்யும் மாணவர்கள் படியில் தொங்கிய படி மட்டுமே வருகிறார்கள் என்பது தான் மறுக்க முடியாத, நிதர்சனமான உண்மை. மாணவர்கள், இளைஞர்களின் மன நிலையில் மிகப் பெரிய மாற்றம் வர வேண்டும்.. நாம் செய்வது தவறு என்பதை அவர்கள் உணர வேண்டும்.. அப்போதுதான் இதை சரி செய்ய முடியும்.
மாற்றி யோசிப்போம்
அதேபோல அரசும் இந்தப் பிரச்சினையை சரி செய்ய வேறு விதங்களில்யோசிக்க வேண்டும். பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டும் போதாது. மெட்ரோ ரயில்களில் இருப்பது போல பயணிகள் ஏறியதும் தானாகவே மூடிக் கொள்ளும் வகையிலான கதவுகளை கொண்ட பஸ்களை அதிக அளவில் இயக்க வேண்டும். அப்படி செய்தால்தான் புட் போர்ட் பயணத்திற்கு நிரந்தரமாக முடிவு கட்ட முடியும். மாணவர்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதை விட அரசே, சட்டப்பூர்வமாகவும், விஞ்ஞான ரீதியாகவும் மாற்று வழிகளை யோசித்தால் நல்லது. அதுவே சரிப்பட்டு வரும்.
காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி!
பஹல்காம் தாக்குதல்: பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல்காந்தி முடிவு!
சிறிய கடைகளின் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்:டாக்டர் அன்புமணி
மனமாற்றம் வேண்டும்!!
போவோமா ஊர்கோலம்... பயணப்படுவோம் தோழி!
தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நாளை வெளியிடுகிறார் விஜய்
இந்த வாய்ப்பு உங்களுக்கு தான் மக்களே... இன்றும் தங்கம் விலை குறைவு தான்!
தமிழ்நாட்டுக்கு வழங்கப்படாத கல்வி நிதி.. மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். திடீர் கண்டனம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 29, 2025... இன்று பிறரிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
{{comments.comment}}