- கோ. பாமா
நடுநிசி இரவு சுமார் ஒரு மணி இருக்கும். வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து, பூந்தமல்லி பைபாஸ் அருகே வந்து நின்றது. பேருந்து நடத்துநர் பூந்தமல்லி வந்துவிட்டது. இறங்க வேண்டியவர்கள் இறங்குங்கள் என்று கூறியதும், திவ்யா மனதிற்குள் ஒருவித அச்சத்துடன் இறங்கினாள். அந்த இடம் ஆள் அரவமற்று வெறிச்சோடி இருந்தது. எப்போதுமே வெளியூரில் இருந்து வருவதாய் இருந்தால் 10:30 மணிக்குள்ளாகவே திரும்பி விடுவாள் திவ்யா. ஆனால் இன்றோ நடந்தது வேறு. பேருந்திலிருந்து இறங்கிய திவ்யாவிற்கு வயது சுமார் 24 இருக்கும்.
சீக்கிரமே பேருந்தில் வேலூரில் இருந்து புறப்பட்டு விட்டாள். எப்படியும் சென்னைக்கு 10:30 மணிக்குள்ளாகச் சென்று விடலாம் என்று நினைத்த திவ்யாவிற்கு பெருத்த ஏமாற்றம் காத்துக் கொண்டிருந்தது. பேருந்து கிளம்பிய சிறிது நேரம் வரை அனைத்தும் சரியாகத்தான் சென்று கொண்டிருந்தது. என்னவென்று சொல்வது சிறிது நேரம் கழித்து நடுவழியில் வந்தவுடன், பேருந்து பழுதாகி வழியிலேயே நின்று விட்டது. பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் அதைச் சரி செய்ய முயன்று கொண்டிருந்தனர். ஆனாலும் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஒரு மணி நேரம் கழித்து ஒவ்வொரு பயணிகளையும், வேறு பேருந்தில் ஏற்றி விட ஆரம்பித்தனர் நடத்துநரும் ஓட்டுநரும். அதன் காரணமாக பூந்தமல்லி வந்து சேருவதற்கு மிகுந்த நேரம் ஆகிவிட்டதை உணர்ந்து மனதில் பயம் தொற்றிக் கொண்டது திவ்யாவிற்கு. திவ்யாவும் அவளது அக்கா பிரியாவும் சென்னையில் உள்ள ஆவடியில் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இருவருடைய சொந்த ஊர் திருவண்ணாமலை. அங்கு பாட்டியின் மற்றும் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர்கள் தான் இருவரும். சிறுவயதிலேயே விபத்து ஒன்றில் திவ்யாவின் தந்தை உயிரிழந்து விட்டார். தந்தை இல்லாவிட்டாலும் மகள்களின் படிப்பை எக்காரணம் கொண்டும் நிறுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்து அதைச் சாதித்தும் காட்டினார் திவ்யாவின் அம்மா.
இன்று திவ்யாவும், அவளுடைய அக்கா பிரியாவும் சென்னையிலிருந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேலை விஷயமாகத்தான் திவ்யா வேலூர் வரை சென்று இருந்தாள். வரும் வழியிலேயே நடந்த விவரங்கள் அனைத்தையும் அக்காவிடம் கூறி இருந்ததால்,அக்காவும் பயப்படாதே எவ்வளவு சீக்கிரமாக வர முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக வந்துவிடு என்றும் கூறி இருந்தாள். ஆனாலும் சீக்கிரமாக வர இயலவில்லை.
அந்த பைபாஸ் நிறுத்தத்தில் தூரத்தில் ஒரே ஒரு ஆட்டோ மட்டுமே நின்று கொண்டிருந்தது. அதிலும் ஓட்டுனர் எவரும் இல்லாமல் காணப்பட்டது. மனதிற்குள் அச்ச உணர்வுடன் தனது அலைபேசியை எடுத்து வண்டிய ஏதாவது கிடைக்கிறதா என்பதற்காக உபர் மற்றும் ஓலா ஆஃப் ல் தேட ஆரம்பித்தாள். எதிலுமே வண்டி கிடைத்தபாடில்லை.
அதே சமயத்தில் ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் வண்டியில் வேகமாக வந்த இளைஞர்கள் இருவர் இவளைப் பார்த்து "ஊஊ" என்று ஊளையிட்டுக் கொண்டே திரும்பிப் பார்த்தபடியே சென்றனர். அது திவ்யாவிற்கு மேலும் கலக்கத்தை உண்டு பண்ணியது. இந்த நேரத்தில் தான் பயணம் செய்து வந்தது தவறோ என்று எண்ணும் அளவிற்கு மனம் அடித்துக்கொண்டது.

சில வாரங்களுக்கு முன்பு இதேபோன்று கேரளாவில் இரவு நேரத்தில் நடுவழியில் ஒரு பெண்ணை இறக்கி விட நேர்ந்த போது, பெண்ணின் பாதுகாப்பு கருதி ஓட்டுநரும் நடத்துநரும் மொத்தப் பேருந்துடன் காத்திருந்து, வீட்டிலிருந்து அந்தப் பெண்ணைப் பத்திரமாக அழைத்துச் செல்லும் வரை அங்கேயே இருந்து வழி அனுப்பியது இணையத்தில் படித்தது திவ்யாவிற்கு ஞாபகத்தில் வந்தது. அதேபோன்று ஏதாவது அதிசயம் இங்கும் நடந்திருக்கக் கூடாதா? என்ற எண்ணமும் தோன்றியது.ஆனால் நடக்கவில்லையே.
இப்பொழுது பூந்தமல்லியில் இருந்து ஆவடி எப்படியாவது சென்றாக வேண்டும், வெகு நேரம் இங்கு நிற்பது தவறு என்பதைப் புரிந்து கொண்ட திவ்யா எப்படியாவது ஓலாவில் வண்டி கிடைக்க வேண்டுமே என்று மனதில் வேண்டிக் கொண்டாள்.
அதேசமயம் சிறிது நேரத்திலேயே காஞ்சிபுரத்திலிருந்து ஒரு பேருந்து அங்கு வந்து நின்றது. அதிலிருந்து 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், பத்து வயது ஆண் குழந்தையும் இறங்கினர். அந்த குட்டிப் பையன் துருதுருவென தனது அம்மாவிடம் ஏதேதோ கேள்விகளை கேட்டுக் கொண்டே இறங்கினான். அம்மாவும் சளைக்காமல் மகனுக்கு பதிலைக் கூறியபடியே, பார்த்து இறங்கு என்று மகனுக்கு அன்புக் கட்டளை இட்டுக் கொண்டே இறங்கினார்.
அந்தக் குட்டிப் பையன் தனது அம்மாவிடம் "அம்மா, இங்கே யாருமே இல்லையே! இருட்டாக வேறு இருக்கிறது. நாம் எப்படி அம்மா வீட்டிற்குப் போகப் போகிறோம்? அப்பா எப்பொழுது வந்து நம்மை அழைத்துச் செல்வார்?" என்று கேட்டுக் கொண்டிருந்தான். அதற்கு அம்மாவும் "கவலைப்படாதே, அப்பா ஆவடியில் இருந்து புறப்பட்டு விட்டார். இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார்" என்று கூறி அவனை சமாதானப்படுத்தினார். இதையெல்லாம் அருகில் இருந்த திவ்யா கேட்டுக் கொண்டே தனது அலைபேசியில் வண்டி கிடைக்கிறதா என்று பார்த்துக் கொண்டே இருந்தாள்.
திவ்யாவின் கலவரமான முகத்தைப் பார்த்த அந்த அம்மா "நீ எங்கு செல்ல வேண்டும் ? ஏன் அம்மா இவ்வளவு பதட்டத்துடன் காணப்படுகிறாய்? உன்னை அழைத்துச் செல்ல யாரும் வரவில்லையா" என்று கேட்டார்.
அறிமுகம் இல்லாத நபரிடம் எப்படிச் சொல்வது என்று திவ்யா தயங்கினாள்.
அதற்கு அந்த அம்மாவோ "இரவு வெகு நேரம் ஆகிவிட்டது அம்மா. இங்கு நிற்பது அவ்வளவு பாதுகாப்பு இல்லை. நீ எங்கு செல்ல வேண்டும்?" என கேட்கவும், திவ்யா தயங்கிக்கொண்டே தான் ஆவடி செல்ல வேண்டும் என்பதைக் கூறினாள்.
அந்த அம்மாவும் உடனே "நானும் ஆவடி தான். எனது கணவர் சிறிது நேரத்தில் காரை எடுத்துக்கொண்டு என்னை அழைத்துச் செல்வதற்கு வருகிறார். நீயும் எங்களுடன் வந்துவிடம்மா. இங்கே இந்த நேரம் நிற்பது மிகவும் ஆபத்து. பாதுகாப்பானது அல்ல" என்று கூறினார்.
திவ்யா தயங்கினாள். அவளுடைய தயக்கத்தைப் பார்த்த அந்த அம்மா மீண்டும் "பயப்படாதம்மா! உன்னை பாதுகாப்பாக நான் அழைத்துச் சென்று விட்டு விடுகிறேன். நீ தாராளமாக என்னை நம்பலாம் " என்று கூறிக் கொண்டே தான் ஒரு ஆசிரியர் என்பதையும்,தனது பெயர் சித்ரா என்பதையும், தனது மகனின் பெயர் வெற்றிவேல் என்று கூறி அறிமுகப்படுத்திக்கொண்டார்.
பிறகு திவ்யாவிடம் ஏன் இவ்வளவு நேரம் கழித்து இங்கு நிற்கிறாய்? என்று சித்ரா கேட்டார். அதற்கு திவ்யா நடந்த விவரங்கள் அனைத்தையும் கூறுகிறாள். திவ்யாவிடம் சித்ராவும் இனி இவ்வாறு இரவுப் பயணங்களை மேற்கொள்வதை தவிர்த்து விடம்மா என அறிவுரை கூறினார்.

சிறிது நேரத்தில் சித்ராவின் கணவர் காரை ஓட்டிக்கொண்டு சித்ரா இருக்கும் இடத்தை வந்தடைந்தார். காரிலிருந்து இறங்கிய சித்ராவின் கணவர் "நீ பேசாமல் காலையிலேயே வந்திருக்கலாம். பார்! எவ்வளவு நேரமாகிவிட்டது." என்றார்.
திவ்யா இவ்வளவு நேரம் கழித்து வருவதற்கான காரணத்தை ஏற்கனவே நாம் தெரிந்து கொண்டோம். சித்ரா ஆசிரியர் ஏன் இவ்வளவு நேரம் கழித்து வந்தார்? என்ற எண்ணம் தோன்றுகிறது அல்லவா!
சித்ரா ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காஞ்சிபுரத்தில் இருந்து கிளம்ப நேரமாகிவிட்டது. அது மட்டுமல்ல உறவினர் வீட்டு திருமணம் தான் என்பதால் உறவினர்களும் இவ்வளவு நேரம் கழித்து செல்லாதேம்மா. அதுவும் வெற்றியுடன் நீ செல்கிறாய். காலையிலேயே செல்லலாம் என்று கூறினர்.
ஆனால் சித்ரா தன்னுடைய கணவர் மறுநாள் அலுவலகம் சீக்கிரம் செல்ல வேண்டும் என்பதால் தான் வீட்டிற்கு செல்ல விரும்புவதாகக் கூறிவிட்டு, கவலை வேண்டாம் எவ்வளவு நேரம் ஆனாலும் தன் கணவர் பூந்தமல்லிக்கு வந்து காரில் அழைத்துச் சென்று விடுவார் என்று கூறிய பின்னர் தான் உறவினர்கள் அவளை பேருந்தில் ஏற்றிவைத்து வழி அனுப்பினர்.
"சரி! சரி! நேரமாகிவிட்டது. இருவரும் கிளம்புங்கள்" என்றார் சித்ராவின் கணவர்.
சித்ரா தனது கணவரை பார்த்து "ஏங்க! இந்தப் பெண்ணும் ஆவடி தான் செல்ல வேண்டுமாம். நமது காரிலேயே அழைத்துச் சென்று இவளையும் இறக்கி விடலாம்" என்று திவ்யாவைப் பார்த்து கைகாட்டி நடந்ததை தனது கணவரிடம் கூறினார்.
சித்ராவின் கணவர் சுந்தரும் சரிம்மா என மறுமொழி கூறினார். அவருமே அக்கா, தங்கைகள் என கூட்டுக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் பெண்களின் முக்கியத்துவத்தையும், பாதுகாப்பையும் நன்கு உணர்ந்தவராக இருந்தார். இப்படியாக சித்ரா, திவ்யா மற்றும் குட்டி பையன் வெற்றியும் என மூவரும் காரில் ஏறிக்கொண்டனர்.
காரில் ஏறியதும் எப்போதும் போல வெற்றி துருதுருவென தனது அம்மாவிடம் பேசிக்கொண்டே வந்தான்.
"அம்மா! யார் இந்த அக்கா ? நம் காரில் ஏன் இவரை ஏற்றி இருக்கிறோம்? இவர் நமது வீட்டிற்கு வருகிறாரா? இவர் நமது சொந்தக்காரரா? என்றபடி சரமாரியாக கேள்விகளை கேட்டுக் கொண்டே வந்தான்.
அதற்கு ஆசிரியர் சித்ராவும் "தம்பி! நாம் இறங்கும் பொழுதே இரவு மணி ஒன்றாகி விட்டது அல்லவா. நீயும் பார்த்தாயே! அங்கு சுற்றி யாராவது இருந்தார்களா?" எனக் கேட்டார்.
"இல்லை அம்மா! அங்கு யாருமே இல்லை. நாம் மூன்று பேர் மட்டும் தான் இருந்தோம்"என மறுமொழி கூறினான் வெற்றி.
"தம்பி! இரவு வெகு நேரம் கழித்து இவ்வாறு நிற்பது பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல. ஆகவே தான் இந்த அக்காவை நமது காரில் ஏற்றி இருக்கிறோம். இவருடைய வீடும் ஆவடியில் தான் இருக்கிறது. நாமும் ஆவடி தாண்டித்தான் செல்ல வேண்டும். ஆகவே செல்லும் வழியில் இவரை பத்திரமாக நாம் வீட்டில் இறக்கி விடுவோம்" என்று ஆசிரியை சித்ரா கூறினாள்.
அதற்கு வெற்றியோ "அம்மா! அங்கே தான் ஒரு ஆட்டோ இருந்துச்சு இல்லையா அதுல ஏத்தி விட்டு இருக்கலாமே" என்று கேட்டான்.
அதற்கு சித்ரா தனது மகனிடம்" தம்பி! உன் பெரியம்மா மகள் மாலினி அக்கா, இந்த நேரத்தில் பேருந்து இல்லாமல் தனியாக நின்றிருந்தால் நீ என்ன செய்திருப்பாய்? என்று கேட்டார். வெற்றி உடனே சட்டென்று எதுவுமே யோசிக்காமல், அம்மா அக்காவை நான் பத்திரமாக வீட்டிற்கு நமது காரில் அழைத்துச் சென்றிருப்பேன் என்று மறுமொழி கூறினான்.
"சரியாகச் சொன்னாய் தம்பி . உன் அக்கா போலத்தான் இந்த அக்காவும். இவரையும் உன் அக்கா போலவே நினைத்துக்கொள். இம்மாதிரியான சூழ்நிலைகளில் நமது உறவுகளுக்கு மட்டுமே உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கக் கூடாது. அனைவருமே நம் உறவினர்தான். அது மட்டுமில்லாமல் உதவி செய்வதற்கு நமக்கு எப்போதெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் கட்டாயமாக நாம் உதவ வேண்டும். அதுவும் இம்மாதிரியான இக்கட்டான சமயங்களில் நாம் நிச்சயமாக உதவி செய்ய வேண்டும்" எனவும் தனது மகனுக்கு கூறிக் கொண்டே வந்தார் சித்ரா.
வெற்றியும் மிகவும் பொறுப்பாக தனது அம்மா கூறியவற்றை கேட்டுக் கொண்டே வந்தான். "அம்மா! நானும் பெரியவன் ஆனதும், அப்பாவைப் போல, உன்னைப் போல நிச்சயமாக மற்றவர்களுக்கு உதவுவேன்" என்று கூறிக் கொண்டே வந்தான்.
இவற்றையெல்லாம் திவ்யா கேட்டுக் கொண்டே வந்தாள். நம்மைச் சுற்றி இருக்கும் அனைத்து ஆண்களும் இவ்வாறு பொறுப்புடனும், சமூகச் சிந்தனையுடனும் இருந்தால் சமூகத்தில் குற்றங்கள் என்பதே இருக்காது என்பதை உணர்ந்து கொண்டு மானசீகமாக சித்ராவின் கணவர் சுந்தருக்கு நன்றி கூறினாள். மேலும் வெற்றியை வளர்க்கும் விதத்தையும் எண்ணிக் கொண்டே நிச்சயமாக எதிர்காலத்தில் இவன் சிறந்த இளைஞனாக வருவான் என்ற நம்பிக்கை மனதில் திவ்யாவிற்கு ஏற்பட்டது.
அதே நேரத்தில் சிறிது நேரத்திற்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் ஊஊ என்று கத்திக் கொண்டே சென்ற இரு இளைஞர்களையும் எண்ணி வேதனை அடைந்தாள். பெற்றோர்களுடைய வளர்ப்பு சரியாக இருந்தால் நிச்சயமாக இளைஞர்கள் சமுதாயம் நன்றாக இருக்கும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே காரில் பயணித்தாள்.
சிறிது நேரத்திலேயே ஆவடியும் வந்துவிட்டது. வீட்டின் அருகிலேயே கொண்டு சென்று விடுவதாக சித்ரா கூற மிகுந்த நன்றி உணர்வுடன் திவ்யா அவரைப் பார்த்தாள்.
"தாங்கள் யார் என்றே எனக்குத் தெரியாது. இந்த நேரத்தில் எனக்கு மிகப்பெரிய உதவியை நீங்கள் செய்திருக்கிறீர்கள். இதை நான் என்றும் மறக்க மாட்டேன். உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் மேடம். உங்கள் மகனிடம் கூறியதைப் போலவே, நிச்சயமாக உதவும் சந்தர்ப்பம் வரும்பொழுது நானும் மற்றவர்களுக்கு உதவுவேன். தங்களுக்கு மிகுந்த நன்றி அம்மா! இன்று ஒரு நல்ல விஷயத்தை நான் தங்களிடம் கற்றுக் கொண்டேன்" என திவ்யா நன்றி கூறினாள்.
தான் தங்கியிருக்கும் இடத்தை வழிகாட்ட சிறிது நேரத்திலேயே திவ்யா தங்கி இருக்கும் வீடும் வந்து சேர்ந்தது. வாசலில் பதபதைப்புடன் நின்று கொண்டிருந்தாள் அவளுடைய அக்கா.
காரில் இருந்து திவ்யா இறங்கியதும், அவளுடைய அக்கா ஓடி வந்து ஆசிரியருக்கும் அவரது கணவருக்கும் "மனமார்ந்த நன்றிகள் இருவருக்கும்! நீங்கள் மட்டும் இல்லை என்றால் இவள் எப்படி வந்திருப்பாளோ? எனக்கு மிகுந்த பயமாகிவிட்டது " என்று நன்றி கூறினாள்.
சித்ராவின் குடும்பத்தினர் மூவரும் சிரித்துக் கொண்டே இருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு, பத்திரமாக இருங்கள் என்று கூறிவிட்டு, காரில் தங்களுடைய வீட்டை நோக்கிப் பயணமானார்கள்.
(கோ பாமா, கணித பட்டதாரி ஆசிரியர், சென்னை நடுநிலைப்பள்ளி, செட்டியார் அகரம்)
Tamil Life Qoutes: தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் .. அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.!
Tamil Short story: இருளில் ஓர் இதயம்!
லீவு முடிஞ்சாச்சு.. பள்ளிக்கூடம் திறந்தாச்சு.. உற்சாகமாக திரண்டு வந்த மாணவ, மாணவியர்!
என் மகனுக்கு TVK என பெயர் வைப்பேன்.. தவெக எம்எல்ஏ எம்.ஆர்.பல்லவி அதிரடி!
விண்ணுலகமே வியந்து போகும்.. அற்புதமாக நடந்தேறிய.. வரதராஜ பெருமாள் திருத்தேர் உற்சவம்
தர்ஷனின் தரமான சம்பவங்கள்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
World Bicycle day: ஓரம்போ ஓரம்போ.. இன்னும் சைக்கிள் ஓட்டுபவரா நீங்க.. வாழ்த்துகள்ங்க!
Tamil Short story: குழூஉக்குறி.. ஒரு நிமிடக் கதை (13)
World Bicyle day: சிக்கு.. சிக்கு மிதிவண்டி.. சின்னப் பையன் மிதிவண்டி!
{{comments.comment}}