சப்தம் இல்லாமல் இருந்தால் கிடைப்பது.. அமைதி அல்ல!

Sep 22, 2026,12:08 PM IST

- ஜெயபாரதி மதிவாணன், விருதுநகர்


அமைதி என்பது ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு தீவில் எந்த ஒரு சப்தமும் இன்றி இருந்தால் கிடைக்கும் என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் அமைதி வெளியில் இருந்து வருவதல்ல. நம் உள்ளத்தில் இருந்து பொங்கிப் பெருகி வர வேண்டும். அதுதான் நமக்கு இறுதி வரை கிடைக்கும் அமைதி.


பாரதியார் மன அமைதிக்கு அழகாக ஒரு பாட்டு பாடுகிறார்.


"காணி நிலம் வேண்டும் -பராசக்தி

காணி நிலம் வேண்டும் -அங்குத்

தூணில் அழகியதாய் -நன்மாடங்கள்

துய்ய நிறத்தின் வாய்......"


ஓர் மாளிகை வேண்டும், கிணற்றுக்கு அருகில் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள் வேண்டும். நிலாவொளி முன்பு வர வேண்டும். கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும். குயில் கூவும் என்பது வழக்கு. இங்கு பாரதியார் கத்தும் குயில் என்கிறார். அமைதியாக இருக்கும் போது பல குயில்கள் சேர்ந்து கூவினால் அது குயில் கத்துவது போல இருக்கும் என்பது பாரதியாரின் கருத்து. இவ்வாறு மன அமைதிக்கு பராசக்தியை வேண்டுகிறார் பாரதியார்.


நாம் அமைதியாக இருக்க என்ன செய்ய வேண்டும்? நிலத்தில் விதைக்கப்படும் விதைக்கு ஏற்பவே பயிர் விளைகிறது என்பதை நாம் யாவரும் அறிவோம். மனம் எனும் நிலத்தில் நல்ல எண்ணங்களாகிய விதைகளையே விதைக்க வேண்டும். அப்படி விதைத்தால் இனிய வார்த்தை எனும் மரம் வளரும்.நல்ல செயல் எனும் பழம் கிடைக்கும். நாம் செய்யும் செயல்கள் தாம் நம்முடைய வாழ்க்கை. நம்உடன் வருபவை அச்செயல்களே.அவைதாம் நம் விதியாய் அமைபவை.




நல்ல செயல்களின் விதை நல்ல எண்ணங்கள் தாம்.ஒரு குளத்தில் கல்லைப் போட்டால் அலைகள் உண்டாகின்றன. அந்த அலைகள் குளக்கரையில் மோதி மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து ஓயும்.இதுதான் உலக இயல்பு.


"எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறோன்று அறியேன் பராபரமே"

என்கிறார் தாயுமானவர்.


எல்லா உயிர்களும் நலமாக வாழ வேண்டும் என்று நாம் நினைக்க வேண்டும். அந்த தூய நினைவு அலைகள் உலகில் சென்று அதைப் போன்ற ஒத்த தூய அலைகளுடன் சேர்ந்து நம்மிடமே வந்து ஒடுங்கும்.


நல்லனவற்றை நினைந்து நினைந்துப் பழகி விட வேண்டும். நாளடைவில் நம் இரத்தத்தில் நல்ல எண்ணங்கள் கலந்து விடும். மனம் அமைதியாக இருக்கும். தூய (நல்ல) நினைவால் நாம் வாழ்வோம்.மனம் போல அமைதியான வாழ்வு கிடைக்கும்.


மனதில் அமைதி வேண்டுமானால் பிறரைக் குறை கூறாதீர்கள். நல்லதையே மற்றவர்களிடம் பாருங்கள். உங்களைத் 

துன்புறுத்துபவர் மீது உங்கள் இதயத்தில் பகை உணர்ச்சியை வளர்க்காதீர்கள். மன்னித்து மறந்து விடுங்கள்.மன அமைதி உண்டாகும்.


மனம் ஓர் அணைக்கட்டு. அதில் நிரம்பி உள்ள நீர் ஆத்ம சக்தி அல்லது ஜீவ சக்தி. பொறாமை, புறங்கூறுதல், பொய் பேசுதல், கோபம், பேராசை,பிறர் பொருள் விரும்புதல், வஞ்சனை,கஞ்சத்தனம் ஆகியவை மனம் எனும் அணைக்கட்டின் ஓட்டைகள் ஆகும். இத்தீய குணங்கள் ஆத்ம சக்தியை அழித்து விடும். இக்குணங்கள் மனத்திற்குள் நுழைய விடாமல் தடுப்பதுதான் நம்முடைய கடமை. இத்தீய குணங்களை அழித்து விட்டால் மனம் அமைதியாக இருக்கும்.


பிறர் மீது பொறாமைப் படாதீர்கள்.பொறாமை உங்கள் மன அமைதியைக் கெடுத்து விடும். 


"அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் 

இழுக்கா இயன்றது அறம்"-குறள்.


பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கையும் விலக்கி செயல் படுவதே அறம் ஆகும். இந்த அறத்தைச் செய்தால் மன அமைதி கிடைக்கும். எது நடந்தாலும் அதைப் பொறுத்துக் கொள்ளுங்கள். எதற்கும் வருத்தப் படாதீர்கள். சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் நினைக்கிற மாதிரி எல்லோரும் இருக்க வேண்டும் என்று நினைத்தால் மனதில் அமைதி கிடைக்காது. 


உங்களை முதலில் மாற்றுங்கள். அமைதி கிடைக்கும். யாருக்கும் அறிவுரை கூறாதீர்கள். அதன்படி அவர்கள் நடக்கவில்லை என்றால் மன அமைதி கெடும். நம்மைத் தேடி உதவிக்கு வந்தாலன்றி யாருக்கும் புத்திமதி சொல்ல வேண்டாம். நாம் உண்டு, நம் வேலை என்றிருந்தால் மன அமைதி கிடைக்கும்.


கோபம் பலரையும் எதிரிகளாக மாற்றி விடும். நம்மை நாமே திருத்திக் கொண்டால் கோபம் வராது. யாவரையும் இறைவனின் அம்சமாகவே நினைத்தால் கோபம் யார் மீதும் வராது. மன அமைதி கிடைக்கும். பிறரை சந்தோஷப்படுத்துங்கள். பிறரிடம் அன்பாக இருங்கள்.


"அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையத்து

இன்புற்றார் எய்துஞ் சிறப்பு" என்கிறார் திருவள்ளுவர்.


மற்றவர்கள் மகிழ்ச்சியில் நீங்கள் மனநிறைவை அடையலாம். ஏழைகளைப் பகவானின் உருவமாகக் கருதி உதவி செய்யுங்கள். பிரதிபலன் எதிர்பாராத உள்ளத்தில் அமைதி கிடைக்கும்.


"பயன் தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலிற் பெரிது"


என்ன பயன் கிடைக்கும் என்று கருதாது ஒருவர் செய்த உதவியின் பெருமையை ஆராய்ந்தால் அது கடலை விடப் பெரியதாகும்.


ஆசைகளும் தேவைகளும் குறையுமளவு மன அமைதி பெருகும். திருப்தியுள்ள உள்ளமே அமைதி பெறும். ஆசையை அழிக்க இறை நாமம், பஜனை மிகவும் உதவும். ஆசை, உலகப் பற்று ஆகியவை குறையும் போது மனம் அமைதி பெறும்.


இறைவனை நினைத்து தியானம் செய்தால் ஆன்மீக முன்னேற்றம் அடையலாம். ஆன்மீக முன்னேற்றத்தால் மன அமைதி கிடைக்கும். எந்த காரியம் செய்தாலும் பகவானைத் துணையாக வைத்து அவருடைய துணையாலே முழு நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள். சதா உங்கள் மனத்தைத் தூய எண்ணங்களால் நிரப்புங்கள். எண்ணம், பேச்சு,செயல் யாவற்றிலும் பணிவுடன் இருக்கப் பழகுங்கள். பகவான் எந்த நேரமும் உங்கள் கூடவே இருப்பதாக நினையுங்கள். தெய்வீக குணங்களைப் பெற்று மன அமைதி அடையுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி

news

அறிந்த பழமொழிகளும், அறியாத அர்த்தங்களும்.. கழுதைக்குத் தெரியுமா??

news

திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி

news

நன்றி சொல்லவே எனக்கு.. நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்.. மனசுக்கு நல்லது!

news

சப்தம் இல்லாமல் இருந்தால் கிடைப்பது.. அமைதி அல்ல!

news

World Rose Day: உலக ரோஸ் தினம் ஏன் இன்னிக்கு கொண்டாடுறோம் தெரியுமா?

news

போலி நம்பர் பிளேட் காரில் பயணித்தாரா திருமாவளவன்? - இணையத்தில் வைரலாகும் சர்ச்சைச் வீடியோ

news

Swarnalakshmi Writes: செப்டம்பர் 22.. இன்னிக்கு என்ன நாள் தெரியுமா..?

news

Inclusive Education in My Classroom: Every Child Matters

அதிகம் பார்க்கும் செய்திகள்