மறைக்கப்பட்ட உண்மை.. கடைசி பெஞ்சில் இருந்த பெண்... (3)

Oct 29, 2026,10:05 AM IST

- கே.பிரியங்கா


பிரியா அந்தக் குழந்தைகள் இல்லத்திலேயே காத்திருந்தாள். மாலை 5 மணி ஆனது. வாசலில் ஒரு பெண் வந்தாள்.

வெள்ளை நிறச் சுடிதார் அணிந்திருந்தாள். முகத்தில் சோர்வு. கையில் ஒரு சிறிய துணிப்பை.


அவள் உள்ளே வந்து பொறுப்பாளரிடம் பேசினாள். பிரியாவிற்கு அவளுடைய முகம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அந்தப் பெண் திரும்பியபோது, அவளுடைய கண்களைப் பார்த்ததும் பிரியாவின் இதயம் வேகமாகத் துடித்தது.

அந்தக் கண்கள்! பள்ளியில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த சாரதாவின் கண்கள்!


"சாரதா"


அந்தப் பெண் நின்றாள். சில நொடிகள் இருவரும் பேசவில்லை. பிறகு சாரதா மெதுவாகச் சொன்னாள்: “நீ என்னை இன்னும் நினைவில் வைத்திருக்கியா?


பிரியா அவளை அணைத்துக்கொண்டாள். 


உன்னை எப்படி மறப்பேன்? எத்தனை வருஷமா உன்னைத் தேடிட்டு இருக்கேன் தெரியுமா?” ஆனால் சாரதா அவளை இறுக அணைக்கவில்லை. அவள் மெதுவாக விலகினாள்.


“பிரியா, நான் உன்னைப் பார்க்க விரும்பல. ஆனா உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டியிருந்தது.”




“என்ன விஷயம்?”


சாரதா அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.


நான் பள்ளியில் படித்தபோது என் அப்பா தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். அம்மா ஏற்கெனவே இறந்துவிட்டார். வீட்டில் என்னைச் சாப்பிடக்கூட விடமாட்டார். பல நாட்கள் பசியோடுதான் பள்ளிக்கு வருவேன்.”

பிரியாவின்  கண்களில் கண்ணீர் வழிந்தது.


“அதை ஏன் என்கிட்ட சொல்லல?”


“சொல்லத் தைரியம் இல்லை. எல்லாரும் என்னைப் பார்த்துச் சிரிப்பாங்கன்னு பயந்தேன்.” சாரதா தொடர்ந்தாள்.


ஒருநாள் என் அப்பா என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். நான் எங்கே போவது என்று தெரியாமல் பள்ளிக்கு வந்தேன். அன்றுதான் நீ உன்னுடைய டிபன் பாக்ஸை எனக்குக் கொடுத்தாய்.”


பிரியாவிற்கு  அந்த நாள் நினைவுக்கு வந்தது. அது ஒரு சாதாரண மதிய உணவு நேரம் என்று அவள் நினைத்திருந்தாள். ஆனால் சாரதாவிக்கு அது வாழ்க்கையின் மிக முக்கியமான நாளாக இருந்தது.


அன்று நீ எனக்கு உணவு மட்டும் கொடுக்கல, பிரியா. என்னை ஒரு மனிதராக மதித்தாய். யாரும் என்னிடம் அன்பாகப் பேசியதில்லை. நீ மட்டும் என்னை உன் நண்பியாக ஏற்றுக்கொண்டாய்.” பிரியா அவளுடைய கையைப் பிடித்தாள்.

“அதுக்காக என்னை ஏன் இவ்வளவு வருஷம் பார்க்க வரல?”


சாரதா தலைகுனிந்தாள்.


ஏன்னா, நான் உன்னுடைய வாழ்க்கையைப் பார்த்தேன்.”


“என்ன?”


“நீ நல்ல குடும்பத்தில் வளர்ந்தாய். படித்தாய். வேலைக்குப் போனாய். உன்னுடைய வாழ்க்கையைச் சரியாக அமைத்துக்கொண்டாய். நான் மட்டும் ஒவ்வொரு நாளும் உயிர் வாழப் போராடினேன். உன்னைச் சந்திக்க எனக்குத் தைரியம் வரவில்லை.”


“சாரதா, அது உன்னுடைய தவறு இல்லையே!” என்றால் பிரியா.


தெரியும். ஆனால் சில நேரங்களில் நம்மை யாரும் நிராகரிக்காவிட்டாலும், நாமே நம்மை மற்றவர்களிடமிருந்து விலக்கிக்கொள்கிறோம்.” பிரியா அவளைப் பார்த்தாள்.


“இப்போ என்ன செய்கிறாய்?” சாரதா சிறிய புன்னகையுடன் சொன்னாள்.


நான் இப்போது ஒரு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்க்கிறேன். என்னைப் போலக் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்பதுதான் என் ஆசை.”


பிரியாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.


“அப்படியென்றால் உன்னுடைய வாழ்க்கை நல்லபடியாக மாறியிருக்கிறதே! சாரதாவின் முகத்தில் மீண்டும் சோகம் தெரிந்தது.


ஆனால் நான் இங்கே வந்ததற்குக் காரணம் அது மட்டும் இல்லை.” அவள் தன்னுடைய பையிலிருந்து ஒரு பழைய காகிதத்தை எடுத்தாள். அது பிரியா பள்ளியில் எழுதிய ஒரு சிறிய கடிதம். 


அதில்:


“சாரதா, நீ எப்போதாவது கஷ்டத்தில் இருந்தால் என்னிடம் வா. உனக்கு உதவ நான் எப்போதும் இருப்பேன்.”


பிரியாவிற்கு அந்தக் கடிதம் நினைவில்லை. இதை நான் எப்போது எழுதினேன்?


“நீ பள்ளியை விட்டுச் செல்லும் கடைசி நாளில் இதைக் கொடுத்தாய். ஆனால் நான் அதை உன்னிடம் சொல்லவே இல்லை. அன்றைக்குப் பிறகு உன்னைத் தொடர்புகொள்ள என்னிடம் வழி இல்லை.” பிரியா அவளைக் கட்டிப்பிடித்தாள்.


“இனிமேல் நீ தனியாக இல்லை.” சாரதா அழுதாள். பல வருடங்களாக மனதில் வைத்திருந்த வலியை அன்று அவள் வெளியே விட்டாள்.


ஆனால் பிரியா வீட்டுக்குத் திரும்புவதற்கு முன்பு சாரதா ஒரு விஷயத்தைச் சொன்னாள். “பிரியா, உன்னிடம் ஒரு உதவி கேட்க வேண்டும்.”


“சொல்லு.”


“நான் வேலை பார்க்கும் மருத்துவமனையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளுடைய வாழ்க்கையும் என்னுடைய வாழ்க்கையைப் போலவே இருக்கிறது. அவளுக்கு உதவ உன்னால் முடியுமா?”


பிரியா உடனே சம்மதித்தாள். ஆனால் அந்தப் பெண்ணின் பெயரைக் கேட்டதும் அவள் அதிர்ச்சியடைந்தாள்.

அந்தப் பெண் பிரியாவின் சொந்த அம்மா!


(தொடரும்)


(கே.பிரியங்கா, M.Sc., M.Ed. படித்தவர். 2019ல் ஜெட்லி உலக சாதனை புத்தகத்தின் "சமூகப் பிரச்சினைகளும் தீர்வுகளும்" தொடர் சொற்பொழிவு. 2019ல் ஜெயா தொலைக்காட்சியின் "உன்னை அறிந்தால்" நிகழ்ச்சியில் பங்கேற்பு. 2019ல் சென்னை விமான நிலைய ஆணையத்தின் "மெகா சுவர் ஓவியப் போட்டியில் பங்கேற்பாளர். 2021ம் ஆண்டு, அசிஸ்ட் உலக சாதனையின் "ஆசிரியர்களின் பங்கு" இணையவழி கருத்தரங்கில் பங்கேற்பாளர். அதே ஆண்டில் அகில இந்திய சாதனை புத்தகத்தின் "145 மணி நேரத் தமிழ் இணையவழி விவாதத்தில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்