தேவர் குருபூஜை 2026 : சென்னை நந்தனத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்தத் திட்டம்!

Oct 28, 2026,01:21 PM IST

சென்னை:சுதந்திரப் போராட்ட வீரரும், ஆன்மீகவாதியுமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழா வரும் அக்டோபர் 30-ஆம் தேதி தமிழகம் முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவச் சிலைக்குத் தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.   


தேவர் குருபூஜை : 


ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளாகவும், நினைவுநாளாகவும் ஒரே நாளில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மாநில அரசு சார்பில் குருபூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அவரது சிலைகளுக்கும் அரசியல் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கூடி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கமாகும்.   


சென்னையில் முதல்வர் விஜய் மரியாதை : 




சென்னையில் உள்ள முக்கிய நிகழ்வாக, நந்தனம் சிக்னல் அருகே அமைக்கப்பட்டுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர். முதல்வரின் வருகையை முன்னிட்டு நந்தனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. போக்குவரத்தில் மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


முதல்வர் விஜய் பசும்பொன் செல்லாதது ஏன்?


தேவர் குருபூஜையின் போது வழக்கமாக முதல்வர்கள் பசும்பொன் சென்று, முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம். எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்தே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதனால் இந்த ஆண்டு முதல்வ விஜய்யும், முக்குலத்தோர் ஓட்டுக்களையும், தென் மாவட்ட மக்களை கவருவதற்காகவும் பசும்பொன் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் செல்வதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன.


பசும்பொன் கிராமம் மிக குறுகலான இடம்கொண்ட பகுதியாகும். பொதுவாகவே குருபூஜை சமயத்தில் அரசியல் தலைவர்களின் வருகையால் அந்த இடத்தில் பாதுகாப்பு, போக்குவரத்து பெரும் சவாலாக இருக்கும். விஜய், ஸ்டார் நடிகராக இருந்து முதல்வரானவர் என்பதால் ஏற்கனவே அவர் செல்லும் இடங்களில் அவரை காண வரும் மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். இப்போது பசும்பொன்னிற்கு அவர் வந்தால் அது முதல்வர் மட்டுமின்றி, பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் சிக்கலை ஏற்படுத்தும். இதன் காரணமாக தான் விஜய், பசும்பொன் செல்வதை தவிர்த்திருக்கலாம். அவருக்கு பதிலாக அமைச்சர்கள் குழு பசும்பொன் சென்று மரியாதை செலுத்த வாய்ப்புள்ளது. 


தேசியமும் தெய்வீகமும் போற்றிய தலைவர்: 


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், "தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்" எனக் கொண்டு வாழ்ந்தவர். சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுடன் இணைந்து தீவிரமாகப் பணியாற்றியவர். சமூக நீதிக்காகவும், உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் போராடிய அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், இந்த ஆண்டின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழாவைக் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அன்பில் மகேஷிற்கு ஜாமீன் கிடைக்குமா? மனு மீது நாளை விசாரணை

news

பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான இடைவேளை நேரத்தில் கட்டுப்பாடு! பள்ளிக் கல்வித்துறை அதிரடி

news

யார் அரசியலுக்கு வந்தாலும் அதுக்கு பாஜக தான் காரணமா? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

news

தேவர் குருபூஜை 2026 : சென்னை நந்தனத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்தத் திட்டம்!

news

சிறையில் அன்பில் மகேஷ்...திமுக.,வில் அடுத்து சிக்க போவது யார்? எல்லாம் இவர் கையில் தான் இருக்கு

news

வங்கக்கடலில் உருவான 'அர்னாப்' புயல் கரை கடந்தது:மணிக்கு 150 கி.மீ வேகத்தில் சுழன்றடித்த சூறைக்காற்று

news

காங்கோவில் தீவிரமடையும் எபோலா வைரஸ் : 10,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; 4,887 பேர் உயிரிழப்பு!

news

ரயில்களில் இரவு 11 மணிக்கு மேல் சார்ஜ் போடக் கூடாது : ரயில்வே நிர்வாகம் அதிரடி

news

சிறையில் இருந்து கைதிகள் தப்பிக்க முயன்றால் துப்பாக்கிச்சூடு? - சிறைத்துறை அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்