- சு.தா.அறிவழகன்
மக்களாட்சித் தத்துவத்தில் 'அரசு' என்பதும் 'அரசியல் கட்சி' என்பதும் இரு வேறு தளங்களில் இயங்கக்கூடியவை. தேர்தல் களத்தில் வெற்றிபெற்றுப் பொறுப்பேற்கும் ஒரு கட்சி, ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த கணத்திலிருந்து அது குறிப்பிட்ட ஒரு கட்சியினருக்கு மட்டுமே உரியதல்ல; ஒட்டுமொத்த மாநிலத்திற்குமான அல்லது தேசத்திற்குமான அரசாக மாறுகிறது. ஆனால், இப்போதைய அரசியல் சூழலில், அரசு செய்யும் நலத்திட்டங்களைத் தங்கள் கட்சிக்கு மட்டுமே உரித்தான சாதனையாகச் சுருக்கிக் காட்டுவதும், அதற்கு உரிமை கொண்டாடுவதும் வாடிக்கையாகி விட்டது. இது எந்த வகையில் நியாயமாகும்?
ஒரு அரசு தொலைநோக்குப் பார்வையுடன் பல திட்டங்களைக் தீட்டுகிறது. அவை அனைத்தும் யாருக்காக உருவாக்கப்படுகின்றன? மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யவுமே அத்திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. மிக முக்கியமாக, இத்திட்டங்களுக்கான நிதி எங்கிருந்து வருகிறது? அது, சாமானிய மக்கள் நாள்தோறும் செலுத்தும் வரிகளிலிருந்தே திரட்டப்படுகிறது. எனவே, மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் எந்தவொரு திட்டமும் 'அரசுத் திட்டம்'தானே தவிர, அது எந்தவொரு தனிப்பட்ட தலைவருக்கோ அல்லது அரசியல் கட்சிக்குமோ சொந்தமான "சொத்து" அல்ல.
ஆட்சி மாற்றங்கள் நிகழும்போது, புதிதாகப் பொறுப்பேற்கும் அரசுகள் முந்தைய அரசு கொண்டுவந்த நல்ல திட்டங்களைத் தொடர்ந்து நடத்துவதுதான் ஜனநாயகத்தின் இயல்பு. அதற்கு மிகச் சிறந்த உதாரணம், பெருந்தலைவர் காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டம். அவருக்குப் பின் வந்த திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த அரசுகளும் அத்திட்டத்தைக் கைவிடவில்லை; மாறாக அதைச் சத்துணவுத் திட்டமாகவும், காலை உணவுத் திட்டமாகவும் மேம்படுத்தவே செய்தன. காரணம், அது காமராஜர் என்ற தனிநபரின் திட்டமல்ல, அரசின் திட்டம்.

காங்கிரஸ் கட்சி இத்திட்டத்தைத் தங்கள் கட்சியின் சொந்தத் தயாரிப்பாக மட்டுமே உரிமைகோரி, "எங்கள் திட்டத்தால்தான் பிந்தைய அரசுகள் மக்கள் ஆதரவைப் பெற்றன, அரசை நடத்த முடிந்தது" என்று தம்பட்டம் அடித்தால், அது எத்தனை அல்பத்தனமாக இருக்குமோ, அதேபோல்தான் தற்போதைய கட்சிகளின் உரிமை கோரல்களும் அமையும். வரலாற்றில் அத்தகைய மகத்தான திட்டங்களை உருவாக்கியதற்காகப் பெருமைப்பட்டுக்கொள்ளலாமே தவிர, அதை சுய தம்பட்டத்திற்கான கருவியாக மாற்றுவது பொருத்தமான செயல் அல்ல.
இந்தத் தலைவர்தான் அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார், மக்களுக்காக அதைச் செய்தார் என்பதை வரலாறு அழகாக பதிவு செய்து கொள்ளும். வரலாறு எப்போதுமே எதையுமே மிஸ் பண்ணாது. அதுவே போதுமானது. அதைத் தவிர்த்து தமக்குத் தாமே இதை நான் கொண்டு வந்தேன். இதை நான்தான் செய்தேன் என்று தலைவர்கள் சொல்லிக் கொள்வது பொருத்தமாக இருக்காது. சுய பெருமையாகவே பார்க்கப்படும்.
அரியணையில் அமரும் கட்சி, மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றுவது அதன் முதன்மையான கடமையே தவிர, சலுகையோ அல்லது தர்ம காரியமோ அல்ல. ஆட்சிப் பொறுப்பேற்ற பின், கட்சியைக் கடந்து 'அரசு' என்ற உயர்ந்த நோக்கில் செயல்படுவதே முதிர்ச்சியான அரசியலுக்கு அழகு.
அரசுத் திட்டங்களைத் தங்களின் கட்சித் திட்டமாக உரிமைகொண்டாடுவதும், விளம்பர வெளிச்சத்தில் தங்களைத் தாங்களே போற்றிக்கொள்வதும் மக்களிடையே சுய விளம்பர உத்தியாகவே பார்க்கப்படும். இதை அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்ந்து, கட்சி அரசியலையும் அரசு நிர்வாகத்தையும் தனித்தனியே பிரித்துப் பார்த்துச் செயல்பட வேண்டும் என்பதே காலத்தின் எதிர்பார்ப்பு.. அதுவே முதிர்ச்சியும் கூட!
"தர்ப்ப சயனராமர்" என ராமர் அழைக்கப்படுவது ஏன்? - சென்னை to ராமேஸ்வரம் - ஆன்மீகப் பயணம் (3)
Monday Thoughts: சிந்திக்க சில வரிகள் - அன்றும், இன்றும் நம் வாழ்க்கை - மகிழ்ச்சி எங்கே?!
மரங்கள்.. ஒரு நிமிடக் கதை (46)
தென்தமிழ் தலையங்கம்: மக்கள் பணத்தில் விளைந்த திட்டங்கள் - கட்சிகள் உரிமை கொண்டாடுவது நியாயமா?
வங்கக்கடலில் உருவானது 'அர்னாப்' புயல்: தீவிர புயலாக வலுவடைய வாய்ப்பு
Kodaikanal Rains: கொடைக்கானலில் கொட்டித்தீர்க்கும் கனமழை- பழனி வழிப்போக்குவரத்து முடக்கம்!
5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்.. சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
அறுசுவை தாமு அண்டத்தில் சேர்ந்தார்!
"சோறு கண்ட இடம் சொர்க்கம்".. இந்தப் பழமொழியின் உண்மை அர்த்தம் என்ன தெரியுமா?
{{comments.comment}}