- ஸ்வர்ணலட்சுமி
(அன்று என்பது 30- 40 வருடங்களுக்கு முன்).
அன்று நம் வாழ்க்கை ஒரே வீதியில், தெருவில் அக்கம் பக்கத்தினருடன் நல்ல அறிமுகமானவர்களாக ஒருவருக்கொருவர் அந்யோன்யமாக வாழ்ந்தனர்.
இன்று தனி வீடு அல்லது அப்பார்ட்மெண்ட்களில் அண்டை வீட்டுக்காரர்களுக்கே அறிமுகம் இல்லாதவர்களாக அவரவர் வீட்டில் தனித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மகிழ்ச்சி இருக்கிறதா? என்று சிந்தித்துப் பார்த்தோமா...
அன்று வேலை தேடி கிராமத்திலிருந்து மக்கள் நகரத்தை நோக்கி, பணம் திரட்ட, சம்பாதிக்க படையெடுத்தனர். இன்று நகரத்து வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை என்று கடைசி காலத்தில் கிராமத்தில் வாழலாம் என்று மன அமைதியைத் தேடி செல்கின்றனர்.
மகிழ்வுடன் இருக்கிறோமா?... சிந்தித்துப் பாருங்கள்...
அன்று செய்திகளை அறிந்து கொள்ளவும், புத்தகங்களை வாசிக்கவும், படிக்கவும் விரும்பி நூலகம் சென்றனர்.

இன்று செய்திகளை அறிந்து கொள்ள, புத்தக வாசிப்பும்,படிப்பும், காலையில் எழுவதிலிருந்து இரவு படுக்கும் வரை நம் கைவிரல்களை விட்டு பிரியாத கைக்கவச்சமாக வைத்துக் கொண்டுள்ளோம் அலைபேசியை (mobile phone ). மொபைல் போன் இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலையில் இருக்கிறோம். ஆனாலும்,சந்தோஷமாக இருக்கிறோமா? சிந்தித்துப் பாருங்கள்..
அன்று வீட்டில் ஒருவர் உழைத்து சம்பாதித்த பணம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் காப்பாற்றியது. இன்று 'நாம் இருவர் நமக்கு இருவர் 'என்ற காலம் போய், 'நாம் இருவர் நமக்கு ஒருவர் ' என்று ஒரு குழந்தையை காப்பாற்ற, படிக்க வைக்க, வாழ்க்கை தரத்தை முன்னேற்ற, குடும்பத்தில் உள்ள கணவன்,மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டி உள்ளது.
இனிவரும் காலங்களில் 'நாம் இருவர் நமக்கு ஏன்? ஒருவர் என்ற நிலை வருமோ... இப்போதே அது வரவும் ஆரம்பித்து விட்டது. ஆனாலும்,மகிழ்வுடன் இருக்கிறோமா? சிந்தித்துப் பாருங்கள்.. இன்னும் 50 வருடங்களில் யாருக்குமே அண்ணன் தங்கை, தம்பி அக்கா, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, மாமா என்ற உறவுகளே இல்லாமல் போய் விடும் சூழலும் உள்ளது.
அன்று தீபாவளி பண்டிகை என்றாலே வீட்டில் பலகாரம் செய்வது, பலருக்கும் பகிர்ந்து கொடுத்து உண்பது என்று வாழ்ந்தனர். பலகாரங்கள் செய்வதே பண்டிகையாக இருந்தது. உற்றார் உறவினருடன், கூட்டுக் குடும்பத்துடன் பகிர்ந்து உண்பதே பண்டிகையாக வாழ்ந்தனர்.
ஆனால் இன்று வீதிக்கு வீதி பத்து பலகாரக் கடைகள் உள்ளன. நாளுக்கு நாள் புதிய பலகார கடைகள் உருவாக்கிக் கொண்டே உள்ளன. எனவே எந்த சிரமமும் இல்லாமல் பலகாரங்களை வாங்கி பண்டிகையை கொண்டாடும் நிலைமையில் உள்ளோம். உற்றார் உறவினருடன் பகிர்ந்து உண்கிறோமா?.. மகிழ்ச்சியுடன் உள்ளோமா? சிந்தித்துப் பாருங்கள்...
அன்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திருமணம் என்பது ஜாதக பொருத்தமும், ஓரளவு சம்பாத்தியம் இருந்தாலே, இரு வீட்டார் சம்மதத்துடன் எளிதாக நடைபெற்றது.
இன்று திருமணம் என்பது திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது நல்ல சம்பாத்தியம் இருக்கிறதா? சிறிய குடும்பமா?
கார் இருக்கிறதா? பைக் இருக்கிறதா? வீடு இருக்கிறதா? பெரியசொத்து இருக்கிறதா? தனிக்குடித்தனமா?
பேங்க் பேலன்ஸ் இருக்கிறதா?... என பல தேவைகள் அதிகரித்துக் கொண்டு தானே இருக்கிறது. இதனாலேயே திருமணங்கள் தள்ளிப் போகின்றன. திருமணம் நடப்பதே அரிதாக உள்ளன.
நாம் எதிர்பார்க்கும் வரன் என்னும் அமையவில்லை என்று பலர் சலிப்புடன் கூறுவதை கேட்டுக் கொண்டுள்ளோம். வயது ஏறினாலும் அந்த சலிப்பையும் சகித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மகிழ்ச்சி இருக்கிறதா?..சிந்தித்துப் பாருங்கள்.
அன்று சில விஷயங்களுக்காக, அத்தியாவசிய தேவைக்காக, பணக்கஷ்டத்திற்காக, வங்கியில் கடன் வாங்கி அந்தக் கடனை திருப்பி செலுத்திய பிறகு மற்றொரு கடன் வாங்கும் நிலையில் வாழ்ந்தனர்.
இன்று ஆசைப்பட்ட அனைத்தையும் வாங்கும் நிலைமையில் இஎம்ஐ(EMI) கட்டுவதையே பெருமையாக நினைக்கும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஸ்மார்ட் போன் இஎம்ஐயில் வாங்கியுள்ளேன். பைக் வாங்கியுள்ளேன் இஎம்ஐ கட்டுகிறேன், கார் வாங்கியுள்ளேன் இஎம்ஐ கட்டுகிறேன், வீடு வாங்கியுள்ளேன் ஃப்ரிட்ஜ் வாங்கியுள்ளேன், ஸ்மார்ட் டிவி வாங்கியுள்ளேன், லேப்டாப் வாங்கியுள்ளேன் இ எம் ஐ கட்டுகிறேன் என்று நம் ஆடம்பர செலவுகள் அதிகரித்த நிலையில் இஎம்ஐ கட்டும் நிலையும், தொகையும், பெரியதாக மாறியுள்ள நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கிரெடிட் கார்டு,டெபிட் கார்டு பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பல வீடுகளில் அனைத்து பொருட்களும் பேச,பார்க்க, அரைக்க, துவைக்க, என மொபைல் போன், ஸ்மார்ட் டிவி, மிக்ஸி, கிரைண்டர்,வாஷிங் மெஷின் போன்ற பல பொருட்கள் நிரம்பி உள்ளன.
ஆனாலும் மகிழ்வுடன் வாழ்கிறோமா?..
சிந்தித்துப் பாருங்கள்.
மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை. நம்மிடம் இருப்பவற்றை ரசித்து , நல்ல எண்ணங்களுடன் நமக்குள் நாமே,நமக்கு புத்துணர்ச்சியூட்டும் ஒரு பெரிய பொக்கிஷம். அந்த பொக்கிஷத்தை பத்திரப்படுத்துங்கள் விட்டு விடாதீர்கள்.. சிறிது கடினம் தான் ஆனால் முயற்சிக்கலாமே.. முயற்சி செய்து பாருங்கள் பாஸ்..
மேலும் "சிந்திக்க சில வரிகள்" போன்ற சுவாரஸ்யமான தலைப்புகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள். தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
கே.என்.நேரு மனு தள்ளுபடி: வழக்குப்பதிவு செய்யத் தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
"தர்ப்ப சயனராமர்" என ராமர் அழைக்கப்படுவது ஏன்? - சென்னை to ராமேஸ்வரம் - ஆன்மீகப் பயணம் (3)
Monday Thoughts: சிந்திக்க சில வரிகள் - அன்றும், இன்றும் நம் வாழ்க்கை - மகிழ்ச்சி எங்கே?!
மரங்கள்.. ஒரு நிமிடக் கதை (46)
தென்தமிழ் தலையங்கம்: மக்கள் பணத்தில் விளைந்த திட்டங்கள் - கட்சிகள் உரிமை கொண்டாடுவது நியாயமா?
வங்கக்கடலில் உருவானது 'அர்னாப்' புயல்: தீவிர புயலாக வலுவடைய வாய்ப்பு
Kodaikanal Rains: கொடைக்கானலில் கொட்டித்தீர்க்கும் கனமழை- பழனி வழிப்போக்குவரத்து முடக்கம்!
5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்.. சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
அறுசுவை தாமு அண்டத்தில் சேர்ந்தார்!
{{comments.comment}}