அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!

Dec 25, 2025,11:01 AM IST

கோயம்புத்தூர்: தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பமாக, அதிமுக-வின் முன்னாள் சீனியர் தலைவரும் தற்போதைய தமிழக வெற்றி கழகத்தின் உயர்நிலை குழு ஒருங்கிணைப்பாளருமான கே.ஏ. செங்கோட்டையன், அதிமுக நிர்வாகிகள் பலர் விரைவில் விஜய் தலைமையில் இணையக்கூடும் என்ற அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார்.


கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், தமிழக அரசியலில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும் என்று ஆரூடம் கூறியுள்ளார்.


முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் அரசியல் நகர்வுகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, அவர்கள் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுக-வில் இணைய வாய்ப்பில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். மேலும், அவர்கள் தவெக போன்ற மாற்று சக்திகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சூசகமாகத் தெரிவித்தார்.




அதிமுக-வில் அதிருப்தியில் இருக்கும் மற்றும் அக்கட்சியின் தற்போதைய செயல்பாடுகளால் சோர்வடைந்துள்ள பல முக்கிய நிர்வாகிகள், விஜய்யின் "தூய்மையான அரசியல்" கொள்கையால் ஈர்க்கப்பட்டு தவெக-வில் இணையத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.


இதற்கிடையே, நடிகர் விஜய் வரும் டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மலேசியாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும், அவர் திரும்பிய பிறகு தமிழகம் தழுவிய மாவட்ட ரீதியான சுற்றுப்பயணம் மற்றும் அரசியல் வியூகங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில், தமிழகத்தில் ஒரு புனிதமான மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய தலைமைக்கான தேடல் மக்களிடையே வலுவாக உள்ளது. அதிமுக-விலிருந்து விலகியவர்கள் மட்டுமல்ல, தற்போது பொறுப்பில் உள்ள சில முக்கிய நபர்களும் தவெக நோக்கி வர வாய்ப்புள்ளது. இது வெறும் ஆரம்பம்தான் என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்