சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் பெறுவதற்கான டோக்கன் விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் இந்த டோக்கன் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் வசதிக்காக வீடு வீடாக ரேஷன் கடை ஊழியர்கள் நேரிலேயே சென்று டோக்கன் வழங்கி வருகின்றனர். டோக்கன் பெற்றோர் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி ரேஷன் கடைகளில் தர வேண்டும்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று மகளிர் உரிமைத் தொகைத் திட்டம். இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக தனது வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றவுள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வருகிறது. அதற்கான டோக்கன் விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. ரேஷன் ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் மற்றும் விண்ணப்பங்களை விநியோகிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்தப் பணிக்காக தமிழ்நாடு முழுவதும் தன்னார்வலர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பத்தைப் பெற்று அதை நிரப்பி ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும். அதன் பின்னர் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்தவர்களுக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்படும். அவர்களது வங்கிக் கணக்குகளிலேயே இது போடப்பட்டு விடும். வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு சிறப்பு முகாம்களிலேயே வங்கிக் கணக்கு திறந்து தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
{{comments.comment}}