- டி. ஜெனிட்டா ரீனா
வகுப்பறைக்குள் நான் நுழைந்ததும், செங்கல் சூளையில் பணிபுரிபவர்களின் குழந்தைகள் எனக்குப் பரிசுகளை வழங்கினர். அதைக் கண்டு, "எதற்காகப் பரிசு தருகிறீர்கள்?" என்று கேட்டேன். அவர்களுக்கு உடனே பதில் சொல்லத் தெரியவில்லை. இருப்பினும், "எங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக நாங்கள் வாங்கி வந்த இந்தப் பரிசை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்கள்.
"8ம் தேதி உலக மகளிர் தினம், அதற்காக எனக்குப் பரிசு தருகிறீர்களா?" என்று நான் கேட்டவுடன், "ஆமாம் டீச்சர்" என்று மகிழ்ச்சியுடன் கூறி, என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த ஐந்து ரூபாய் பரிசை அவர்கள் கொடுக்கும்போது அடைந்த மகிழ்ச்சியை விட, அதைப் பெற்றபோது நான் அடைந்த மகிழ்ச்சி அளவிடற்கரியது. அதன் மதிப்பை நான் மிக உயர்ந்ததாகக் கருதினேன்.
இதைப் பார்த்த வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களும், தன்னிடம் இருந்த பென்சில், பேனா, ரப்பர் போன்றவற்றை வழங்கினர். நான் அவர்களுக்குக் காகிதக் கலை மூலம் 'புகையில்லாப் பட்டாசு' செய்யச் சொல்லிக் கொடுத்திருந்தேன். என் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் ஷாமும், நிவாஷும், "டீச்சர், நாங்க பட்டாசு வெடிக்கப் போறோம்" என்று கூறி முன்னே வந்தார்கள். சரி, கற்றுக்கொடுத்த புகையில்லாப் பட்டாசை வெடிக்கப் போகிறார்கள் என்று நான் காத்திருந்தேன்.

அவர்கள் அதை வெடித்தபோது, அதிலிருந்து சிதறிய சிறு காகிதத் துண்டுகளைப் பார்த்த எனக்குப் பிரமிப்பாக இருந்தது. சிறு வயதில் திரையரங்குகளில் நமக்குத் பிடித்த நடிகர், நடிகையர் திரையில் வரும்போது காகிதங்களை விசிறி எறிந்து கொண்டாடுவதைப் பார்த்திருக்கிறேன். இன்று என் மாணவர்கள் எனக்காக அதைச் செய்தபோது மெய்சிலிர்த்துப் போனேன். அவர்களின் மனதில் நான் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை அந்தத் தருணம் எனக்குப் புரிய வைத்தது.
அதே மாணவர்கள் பின்பு காகிதத்தில் ராக்கெட் செய்து வந்தார்கள். என்னுடன் புகைப்படம் எடுக்கத்தான் வருகிறார்கள் என்று நினைத்தால், அப்பொழுதும் ராக்கெட் விடுவது போல் அதிலிருந்து காகிதத் துண்டுகளைத் தூவி மகிழ்ந்தனர். அவர்களின் அந்தச் செயலில் ஒளிந்திருந்த அறிவியல் ஆர்வத்தைக் கண்டேன். நம் மாணவர்களிடம் அனைத்து விதமான ஆற்றல்களும், புத்தி கூர்மையும், சிந்திக்கும் திறனும் கொட்டிக் கிடக்கின்றன. அதை நாம் இன்னும் ஆழப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் வேண்டும் என்ற எண்ணம் என்னுள் தோன்றியது.
பெண் குழந்தைகளும் தங்களுக்குத் தெரிந்த படங்களை வரைந்து, அதை ஒரு பரிசுப் பேப்பராக அலங்கரித்து, அதில் என் பெயரை எழுதிப் பரிசளித்தார்கள். அந்தப் பரிசின் விலையை விட, அவர்கள் காட்டிய அன்பின் வெளிப்பாட்டை, நான் ஒரு ஆசிரியராக இருப்பதற்கு எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன்.
"வகுப்பறைக்குள் ஆசிரியர் நுழையும்போது, அவர் வெறும் அறைக்குள் நுழைவதில்லை; மாணவர்களின் மனதிற்குள் நுழைகிறார்" என்ற கல்வியாளர் ராஜேந்திரன் ஐயாவின் பொன்மொழி என் மனதில் ஆழமாகப் பதிந்தது. அதன் உண்மையை இன்று நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். என் வாழ்நாளில் ஒரு பொக்கிஷமான தருணம் இது.

இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் சர்வதேச மகளிர் தினத்தை இவ்வளவு சிறப்பாகக் கொண்டாடியது என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. "ஆசிரியர் பணி அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி" என்பார்கள். அதற்கேற்ப, நான் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் வீட்டு நினைவுகளை மறந்து மாணவர்களோடு ஐக்கியமாகிவிடுவேன். என் கடமையைச் சரியாகச் செய்ததற்கு மாணவர்கள் காட்டிய இந்த நன்றி கலந்த அன்பு, எனக்கு ஆச்சரியத்தையும் மட்டற்ற மகிழ்ச்சியையும் அளித்தது.
இன்று எனக்கு ஒரு பொன்னாள்; அது என் வாழ்வின் பொருள் நிறைந்த நாள்.
(டி. ஜெனிட்டா ரீனா, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர்)
விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்...யாருப்பா அந்த ஜோசியர்?
துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரின் பெரிய வேன் முன் செல்ல.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 3)
சமையல் துணுக்குகள்: ஹோட்டல் ஸ்டைல் பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா!
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. சிவப்பு மை கொடுத்த சிகரம்!
மனத்தின் மடை திறந்ததே!
Trust is based on the actions .. செயல்களில்தானே எல்லாமே!
Tireless Days .. சத்தமில்லாமல் வரும் விடியல் எனும் தோழன்!
Right people will stay to figure it out with you
சிந்தனைச் சிதறல். . உணவும் ஓய்வுமே உழைப்பிற்கான ஆற்றல் மூலம்!
{{comments.comment}}