கந்த சஷ்டி விரதம் 2026 - செவ்வாய்க்கிழமை முதல் களை கட்டும் முருகன் கோவில்கள்!

Nov 09, 2026,02:11 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


கந்த சஷ்டி விரதம் நவம்பர் மாதம் 10ஆம் தேதி முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை அன்று  துவங்குகிறது. 


முருகனுக்கு உரிய அறுபடை வீடுகள் எனப்படும்  6 ஸ்தலங்களில் - திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம்   -கந்த சஷ்டி விழா சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. 


இவற்றில் கடற்கரை கோயிலான திருச்செந்தூரில் நடக்கும் சூரசம்ஹார உற்சவமே மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. இந்த விழா "பெரிய கந்த சஷ்டி விழா" என்று அழைக்கப்படுகிறது. 


ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆறு நாட்களும் திருச்செந்தூருக்கு வந்து கடைசி நாள் நடைபெறும் போர் நிகழ்ச்சியை, கடலோர வேடிக்கையையும் கண்டு 'அரோகரா' முழக்கமிட்டு  முருகப்பெருமானை மனதார வேண்டிக் கொள்கின்றனர். ஏழாம் நாள் முருகன் திருக்கல்யாணம் காணவும் திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.


கந்தசஷ்டி விரதம் ஆறு நாட்களா? அல்லது ஏழு நாட்களா? என்று பலருக்கு ஐயம் உண்டு. கந்த சஷ்டி விரதம் ஐப்பசி மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு  நாட்களே கந்த சஷ்டி விரதம்."கந்தன்" என்பது முருகப்பெருமானின் பெயர்களில் ஒன்று, "சஷ்டி" என்பது ஆறாம் நாள். இந்த ஆறு நாட்களும் முருகப்பெருமான் சூரபத்மன் எனும் அசுரனை போரிட்டு ஆறாம் நாளான சஷ்டி அன்று அவனை வென்ற நிகழ்வை நினைவு கூர்ந்து பக்தர்கள் விரதம் இருந்து வழிபடுகிறார்கள். 


ஒவ்வொரு மாதமும் சஷ்டி திதி வந்தாலும், ஐப்பசி மாதத்தில் வரும் இந்த பெரிய கந்த சஷ்டி விழா,கோலாகலமாக திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோயில்களில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் ஆறாம் நாள் விரதம்- சூரசம்ஹாரத்திற்கு அடுத்த நாள் திருக்கல்யாணம் நடந்த பிறகு கந்த சஷ்டி விரதத்தை முடிக்க வேண்டும். எனவே 7 நாட்களும் கந்த சஷ்டி விரதம் இருப்பது சிறப்பு.




கந்த சஷ்டி விரத தேதி :

 

நவம்பர் 10, ஐப்பசி 24 செவ்வாய்க்கிழமை பிரதமை திதி - கந்த சஷ்டி முதல் நாள் விரதம்.


நவம்பர் 11, 12,13  - புதன், வியாழன்,வெள்ளி இரண்டாம் நாள், மூன்றாம் நாள்,நான்காம் நாள் விரதம்.


நவம்பர் 14: ஐந்தாம் நாள்  சனிக்கிழமை பஞ்சமி திதி. சூரசம்ஹாரத்திற்கு முந்தைய நாள் சிறப்பு அலங்காரங்கள் நடைபெறுகின்றன.


நவம்பர் 15: ஆறாம் நாள், ஞாயிற்றுக்கிழமை முருகன் -சூரபத்மன் போர் நிகழ்ச்சி,கந்த சஷ்டி விரதம் முடிவு.


நவம்பர் 16: திருக்கல்யாணம். 


திங்கட்கிழமை வள்ளி தெய்வானையுடன் முருகனின் கல்யாண உற்சவம். சூரசம்ஹார நிகழ்ச்சி திருச்செந்தூரில் மாலை வேளையில் நடைபெறும்.


எவ்வாறு கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வது?


கந்த சஷ்டி விரதம் இருப்பதற்கு அனைவரும் ஒரே விதிமுறையை பின்பற்ற இயலாது. எனவே, அவரவர் உடல் நிலைக்கும், வேலைக்கு செல்பவர்கள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் தங்களுக்கு இயன்றவரை விரதம் இருப்பது சிறப்பு.


1. அசைவம் முழுவதுமாக தவிர்க்கப்பட வேண்டும். 


2. வெங்காயம், பூண்டு இவற்றையும் 6 நாட்கள் சமையலுக்கு பயன்படுத்துவதில்லை. 


3. சிலர் ஒருவேளை மட்டும் பழமும் பாலும் உட்கொள்வார்கள்.


4. சிலர் திரவ உணவு மட்டும் உட்கொண்டு விரதம் இருப்பார்.


5. சிலர் முழுமையாக உபவாசம் இருப்பார்கள். விரதம் சூரிய உதயத்தில் தொடங்கி அடுத்த நாள் சூரிய உதயத்தில் சூரியனை வணங்கிய பிறகு முடித்துக் கொள்ள வேண்டும்.


6. அவரவர் உடல் நிலைக்கு தகுந்தவாரும், வேலைப்பளுவிற்கு தகுந்தவாரும், உபவாசத்தை மேற்கொண்டு மனத்தூய்மையுடன் வழிபாட்டில் கவனம் செலுத்துவது முக்கியம்.


7. கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்ய இயலாதவர்கள் வீட்டிலேயே தினமும் காலையிலும், மாலையிலும் முருகன் படத்திற்கு முன் விளக்கேற்றி "ஓம் சரவணபவ" எனும் ஆறெழுத்து மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருப்பது சிறப்பு. இம்மந்திரம் முருகனின் ஆறுமுகங்களையும், அவரை வளர்த்த கிருத்திகை அன்னையர் ஆறு பேரையும் குறிக்கும் சிறப்பு மந்திரம் ஆகும்.


8. முருகனுக்குரிய பாடல்கள்,கந்த சஷ்டி கவசம்,கந்த குரு கவசம்,குமாரஸ்தவம், கந்தபுராணம், சுப்ரமணிய புஜங்கம் பாராயணம் செய்வது சிறப்பு.


கந்த சஷ்டி விரத நாட்களில் முருகப்பெருமான் அருள் அனைவரும் கிடைக்கப் பெற்று நல்வாழ்வு வாழ்வோமாக.


மேலும் இதுபோன்ற  சுவாரஸ்யமான  ஆன்மீகத் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி  பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்