நம்பிக்கை அதானே எல்லாம்!

Mar 04, 2026,03:06 PM IST

- ந. தீபலட்சுமி


வீட்டை சுற்றி செடிகள் வளர்ப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. 


தோட்டம் அமைப்பது போன்று மிகப்பெரிய இடமெல்லாம் இல்லை. ஆனாலும் இருக்கும் இடத்தில் எந்தெந்த செடிகளை வளர்க்க முடியுமோ அவை அனைத்தையும் வளர்த்து வருகிறோம். 


ஆனால் என் மகனின் விருப்பத்திற்கேற்ப வீட்டிற்குள் வளர்க்கும் செடிகளை வளர்ப்பது என்பது ஒரு புது ஹாபியாக உருவெடுத்தது.


அப்படி அமேசான் மூலம் வாங்கிய செடி யைப் பற்றி தான் இங்கு சொல்லப் போகிறேன்.


அதன் பெயர் தெரியாது, பயன் தெரியாது. ஆனால் பார்க்க அழகாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக ஆர்டர் பண்ணியாச்சு, இதோ வந்தும் விட்டது.




அப்புறம் என்ன! என் மகனின் அலப்பறைகள் தாங்க முடியவில்லை.


Indoor Plant என அவன் உள்ளே வைத்து தண்ணீர் ஊற்ற, காலையில் கிளம்பும் அவசரத்தில் என் கணவர் அதில் காலை வைக்க, பள்ளிக்கு நேரமாகிறதே என நான் தவித்து நிற்க....பிறகு என்ன நடந்திருக்கும் என நான் சொல்லாமலே உங்களுக்கு புரிந்திருக்கும்.


அவ்வளவுதான், அப்பாவும் பிள்ளையும் உள்ளே, வெளியே என போட்டியிட்டதில் ஜெயித்தது என் கணவர் தான்.


ஆசையாய் ஆன்லைனில் வாங்கிய அழகிய செடி ....தற்பொழுது போர்டிகோவில்!


அறிவாளிகள் எந்த இடத்தில் இருந்தாலும் தனித்துவத்துடன் இருப்பார்கள் என்பது போல , இந்த செடியும் அழகாக, அமைதியாக, கம்பீரமாக இருப்பது போன்று எனக்குத் தோன்றியது.


சில மாதங்கள் கழிந்தது. மெதுவாக,ஒரு சிறிய தலை போன்று வெளிவந்த மொட்டினைப் பார்த்த பொழுது...

அப்பப்பா! ஆனந்தம் தாங்க முடியவில்லை.

வெறும் இலைகள் மட்டுமே இருக்கும் என்று எண்ணிய செடியில் மலர்...!


ஒரு தாய் தன் மகளின் பிரசவத்திற்கு காத்திருப்பது போல் நானும் காத்திருக்க ஆரம்பித்தேன்.


தினமும் பள்ளிக்கு செல்லும் முன் குட்மார்னிங்கும், வீட்டிற்கு வந்தவுடன் குட் ஈவ்னிஙகும் மானசீகமாக சொல்ல ஆரம்பித்தேன்.


அந்த நாளும் வந்தது.

பூ....பூத்தே விட்டது....


ஓ!!!!!!!!

அதனைப் பார்த்தவுடன் இத்தனை நாள் இருந்த ஆர்வம் சந்தோஷம் அனைத்தும் காணாமல் போனது. 


ஆம்.... அந்த வடிவம் அந்த மலரின் வடிவம் .....நாக வடிவம்.


" பாம்பு என்றால் படையும் நடுங்கும்" அதுபோலத்தான் பாம்பு வடிவில் இருந்த மலரைப் பார்த்து நானும் நடுங்கினேன்.


ஒரே குழப்பம்... நிம்மதியே பறி போனது போல தோன்றியது.


இந்தச் செடியின் வீட்டில் வைக்கலாமா வேண்டாமா இது நல்லதா கெட்டதா இதனால் யாருக்கேனும் எதுவும் நேருமோ.. என்ற அச்சம் தலை தூக்க ஆரம்பித்தது.


பள்ளியில் சக ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய பொழுது அவர்களுக்கும் இதைப் பற்றி எதுவும் தெரியவில்லை. 


சரி நமக்கு ஒரு தோழன் இருக்கு பயமேன்? என கூகுளில் தேடிய பொழுது கிடைத்த தகவல்கள் என்னை நிம்மதி பெருமூச்சு விட வைத்தது. 


நான் அறிந்தவற்றை நீங்கள் தெரிந்து கொள்ள இதோ உங்களுக்காக.....


படத்தில் உள்ள தாவரம் 


ஸ்பாதிஃபில்லம் (Spathiphyllum), பொதுவாக 'பீஸ் லிலி' (Peace Lily) என்று அழைக்கப்படுகிறது. 


இது ஒரு பிரபலமான வீட்டுத் தாவரமாகும். 


இது அதன் அழகிய வெள்ளை நிற பூக்கள் மற்றும் பளபளப்பான பச்சை இலைகளுக்குப் பெயர் பெற்றது.  இந்த தாவரங்கள் குறைந்த அல்லது மிதமான ஒளியில் செழித்து வளரும். உயிர்வாழ அதிக அளவு ஒளி அல்லது நீர் தேவையில்லை. 


இது நாசாவின் சிறந்த காற்று சுத்திகரிப்பு தாவரங்களின் பட்டியலில் உள்ளது. காரணம் காற்றை சுத்திகரிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. 


பீஸ் லிலி பூக்கள் உலகம் முழுவதும் அமைதி மற்றும் அன்பின் அடையாளமாக கருதப்படுகின்றன.


பெயர் என்னவோ.. Peace Lily , ஆனால் அது வந்தவுடன் எங்கள் வீட்டில் நடந்தவை...?


மனிதனின் மூடநம்பிக்கைகளுக்கு.. பாவம் ...செடிகள் என்ன செய்யும்??


நாசாவின்  சிறப்புப் பட்டியலில்  இருக்கும் தாவரம் எங்கள் வீட்டு தாழ்வாரத்தில்..!


(ந. தீபலட்சுமி, பி.டி. ஆசிரியர், ஆங்கிலம், கிரியேட்டிவ் ரைட்டர், வேலூர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

RIP S Janaki: இனியவளே! தாயே! இன்னிசைக் குயிலே!!

news

ஆயிரம் பாடல் பாடி, அமுதம் போல் தந்தவளே!

news

RIP S Janaki: நான் போன பின்னும் நீ வாழ வேண்டும்.. பாட்டுக்குயில் ஜானகி அம்மா!

news

மறைந்தார் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி.. 3 தலைமுறையாக ரசிகர்களை மகிழ வைத்த வானம்பாடி!

news

Vietnam boat tragedy: வியட்நாட் துயரத்தில் 10 தமிழர்கள் பலி.. முதல்வர் சி. ஜோசப் விஜய் வேதனை

news

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.. உங்களிடம் கேட்கப்படவுள்ள 33 கேள்விகள்!

news

அண்ணாமலையின்'We The Leaders' பொள்ளாச்சியில் நாளை முதல் மாநாடு

news

வாரிசுகளுக்கு அரசு வேலை வேண்டும் : பாமக அன்புமணி வலியுறுத்தல்

news

Jananayagan release update விரைவில் ஜனநாயகன் ரிலீஸ்...போஸ்டருடன் வந்த புதிய அப்டேட்

அதிகம் பார்க்கும் செய்திகள்