Sripriya Short stories: பசிக்க விடு, பலமாக வளரும்!

Apr 05, 2026,10:37 AM IST

- ச. ஸ்ரீபிரியா 


நான் எம்.ஏ. படிக்கும்போது அம்மா திடீர் உடல்நலக் குறைவால் இறந்தார். அதன் சோகத்தில், அப்பா ஏற்கனவே மூன்று அக்கா-தங்கைக்கு திருமணம் செய்துவைத்தவர்—அண்ணனும் நானும் மட்டும் இருக்க, “தான் இல்லாமல் போனால்?” என்ற பயத்தில் எனக்கு நல்ல மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துவைத்தார். கணவர் அன்பும் பண்பும் அறிவும் கொண்டவர்; இரண்டு ஆண்டில் மகன் பிறந்தான்.


குழந்தையை வளர்க்க அனுபவம் இல்லை. அம்மாவும் சகோதரியும் குழந்தைகளை வளர்ப்பதைப் பார்த்தது மட்டுமே. பையன் அழாமல் இருக்க, மணி பார்த்து திட உணவை மிக்சியில் அரைத்து திரவ உணவாகக் கொடுத்தேன்;  மாதாந்திர உணவுமுறை அட்டவணையை பின்பற்றி, அழ விடாமல் உணவை ஊட்டினேன். எடை வேகமாகக் கூடியது; “வளர்ந்தால்  குண்டாக வருவான்” என்ற மருத்துவர் எச்சரிக்கையில் பயந்து, ஒரு வயதிலேயே டயட்டை பின்பற்றினேன்.


இப்போது புரிகிறது: அழுது பசிக்க விட்டு உணவு கொடுப்பதே ஆரோக்கியம். தானாக மென்று சாப்பிடப் பழக்கினால் பலம் கூடும்; தாய் ஊட்டும் உணவு குழந்தைக்கு பிடிக்காமல் போகலாம். இது நான் செய்த தவறு. நீங்கள் செய்யாதீர்கள். குழந்தை பசித்து அழும் போது கொடுங்கள்; அவர்களே எடுத்து உண்ண விடுங்கள். அதுதான் நல்ல வளர்ப்பு.




நேரம் ஒதுக்கு, மொழி மலரும்


என் தோழி குழந்தைக்கு நேரத்துக்கு உணவு, தூக்கம், வீட்டு வேலை எல்லாம் முறையாகச் செய்தார்; ஆனால் பேச்சுக்கு நேரம் இல்லை. வேலைக்குச் செல்லும் பெண், குழந்தையை கணவர்-மாமியாரிடம் விட்டு வந்தார். ஒன்று, இரண்டு வயதாகியும் குழந்தை பேசவில்லை; பசி வந்தால் பானை, தண்ணீர் குடம் காட்டி, கைநீட்டிச் சமிக்ஞை செய்தது. பயந்து மருத்துவரிடம் சென்ற போது, “பேச வேண்டியது பெற்றோர்தான்; குழந்தைகளோடு சேர விடுங்கள், வீட்டில் பூட்டி வைக்காதீர்கள்” என்ற ஆலோசனை கிடைத்தது.


அடுத்த நாளே அருகில் இருந்த பள்ளியில் சேர்த்தார்; ஒரு வாரத்தில் “அம்மா, அப்பா, சித்தப்பா, தாத்தா, பாட்டி” என ஒவ்வொரு வார்த்தையும் மலர்ந்தது. வார்த்தைகள் வீட்டிலிருந்து பிறக்கின்றன; நாம் பேசுவதைக் குழந்தை பேசும், நாம் சொல்லுவதைச் செய்யும். இன்று நேரமில்லை என்கிறோம், ஆனால் கிடைக்கும் நேரத்தைக் குழந்தையோடு பகிர்ந்தால் போதும்—பேசுங்கள், கதைகள் சொல்லுங்கள், சேர விடுங்கள். குழந்தை பருவம் பழக்கத்தின் வயது; இப்போது பேசக் கற்றுத் தருவதுதான், நாளைய மாமனிதரை வளர்க்கும் அடித்தளம். என் தோழியின் தவறை நினைவில் கொள்ளுங்கள்.நேரம் ஒதுக்குங்கள், மொழி தானே மலரும்.


(ச. ஸ்ரீபிரியா பழனிவேல், உதவித் தலைமையாசிரியர், பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி,  பட்டுக்கோட்டை)


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்