நான் பொய் சொல்லவில்லை.. ரயில்வே அமைச்சர் உண்மை பேசவில்லை.. சு. வெங்கடேசன் எம்.பி

Aug 02, 2024,06:32 PM IST

சென்னை:  மத்திய பட்ஜெட் குறித்த மதுரை எம்.பி. சு. வெங்கடேசனின் லோக்சபா பேச்சு குறித்து கோவை தெற்குத் தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்திருந்தார். அதற்கு தற்போது சு. வெங்கடேசன் பதில் கொடுத்துள்ளார்.


லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும்போது சு. வெங்கடேசன் மத்திய அரசை விமர்சித்துக் கருத்துக்களைக் கூறியிருந்தார். குறிப்பாக ரயில்வே திட்டங்களில் மதுரையும், தமிழகமும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருந்தார். இதற்கு வானதி சீனிவாசன் நேற்று ஒரு விளக்கம் அளித்து விமர்சித்திருந்தார்.


அதில், இன்னும் எத்தனைப் பொய்களைக் கட்டவிழ்த்து விடப்போகிறீர்கள் சு. வெங்கடேசன் ? “ஒரு காலத்தில் இரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் இருந்தது, ஆனால் தற்போழுது அந்த பட்ஜெட்டே இல்லை” என்று உணர்ச்சி பொங்க பேசி, தனது கட்டுக்கதைகள் மூலம் தமிழக மக்களை மீண்டும் ஏமாற்ற முயற்சிக்கிறார் வெங்கடேசன்.




2024-25 நிதியாண்டில் இரயில்வே அமைச்சகத்திற்கு ரூ.2.55 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற குறைந்தபட்ச தெளிவு கூட இல்லாமல் பேசியுள்ளார் திமுக கூட்டணிக் கட்சியான CPI(M)- இன் மக்களவை உறுப்பினர்.  மேலும், பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், இரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூ. 6,362 கோடி நிதி அதிகளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் தெளிவுபடுத்திய பிறகும், தமிழகத்திற்கு நிதியே கொடுக்காமல் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று சு. வெங்கடேசன்  அவர்கள் கூறுவது ஆச்சரியமாக உள்ளது. 

 

UPA ஆட்சிக் காலத்தில்  தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இரயில்வே துறைக்கான நிதி ரூ. 879 கோடி, ஆனால் இன்றைய NDA ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் அதே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 6,362 கோடியாக, எட்டு மடங்கு அதிகரித்துள்ளது என்பதை சு. வெங்கடேசன் சற்று சிந்தித்து தெளிவு பெறவேண்டும்.


இதனைத்தவிர, 6 வந்தே பாரத் ரயில்கள் மற்றும் 77 மாதிரி அமிர்த் ரயில் நிலையங்களின் வளர்ச்சி ஆகியவற்றால் தமிழகம் மிகுந்த பயனடைந்துள்ளது என்பதையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு, எவ்வித ஆதாரமுமில்லாமல் வாய்க்கு வந்த பொய்க்கதைகளை கட்டவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கிறார் சு. வெங்கடேசன் என்று கூறியிருந்தார்.


சு. வெங்கடேசன் பதிலடி


இதற்கு இன்று வெங்கடேசன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


மக்களவையில் இரயில்வே துறையின் வரவு செலவு அறிக்கை மீதான எனது பேச்சு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக தலைவர்  வானதி சீனிவாசன்  அவர்கள், நான் உணர்ச்சி பொங்க பேசி கட்டுக்கதைகள் மூலம் தமிழக மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.


மரியாதைக்குரிய வானதி சீனிவாசன் அவர்களே, இரயில்வே பட்ஜெட்டை பாஜக அரசு தான் ஒழித்தது. இது உண்மையா இல்லையா?


வருடந்தோறும் 12 கோடி பேர் பலன் பெற்ற மூத்த குடிமக்களுக்கான பயணச்சலுகையை பாஜக அரசு தான் ஒழித்தது. இது உண்மையா, இல்லையா?




இவ்வளவு விபத்துகள் நடந்த பின்பும் பாதுகாப்புக்கான கவச் எந்திரம் என்ற சொல்லே இல்லாமல்,அதற்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விபரமே இல்லாமல் பொது பட்ஜெட் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இது உண்மையா, இல்லையா?


இரயில்வேயின்  ஒவ்வொரு திட்டத்துக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள் அடங்கிய "பிங்க் புத்தகம்" இப்பொழுது வரை வெளியிடப்படவில்லை. இது உண்மையா, இல்லையா?


ஆவணங்களை வெளியிடாமலே இரயில்வே துறையின் விவாதங்களை நடத்தி முடித்துவிட்டது மோடி அரசு. இது உண்மையா, இல்லையா?


இந்த ஆண்டு இரயில்வேக்கு 2 லட்சத்து 55,000 கோடி ஒதுக்கப்பட்டதாக கூறுகிறீர்களே, அதில் தமிழகத்தின் அகலப்பாதை திட்டத்துக்கு எவ்வளவு? இரட்டை பாதை திட்டத்துக்கு எவ்வளவு? புதிய வழித்தடங்களுக்கு எவ்வளவு? மின்மயமாக்கலுக்கு எவ்வாளவு? இந்த ஒதுக்கீட்டு விபரங்கள் அடங்கிய பிங்க புத்தகம் எங்கே? இந்த எளிமையான கேள்விகள் தான் எங்களுடையது. இதில் கட்டுகதைகளும், மக்களை ஏமாற்றும் முயற்சியும் எங்கே இருக்கிறது? முழுமையான ஆவணங்களை வெளியிடுங்கள். தமிழ்நாட்டு மக்கள் உண்மைகளை தெரிந்து கொள்ளட்டும். 


தமிழகத்தின் 10 புதிய பாதை திட்டங்களுக்கும் மூன்று முக்கிய இரட்டை பாதை திட்டங்களுக்கும் கடந்த காலத்தில் வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதனை நான் சுட்டிக்காட்டிய பின் 2023 -24 பட்ஜெட்டில் 50 கோடி 100 கோடி என்று ஒதுக்கப்பட்டது. ஆனால் அது பாதுகாப்பு நிதி என்று கூறி திரும்பப் பெறப்பட்டது. இறுதியாக கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது பூஜ்ஜியம் தான்.


இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2024-25  இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் புதிய திட்டங்களுக்கு 150 கோடி ஒதுக்கப்பட்டது. அது தேர்தலுக்காக செய்யப்பட்ட வெற்று அறிவிப்பா? அல்லது உண்மையான ஒதுக்கீடா என்பது பிங்க் புத்தகம் வந்தால் தெரிந்துவிடும்.


தேர்தலுக்காக வந்த பாஜக அமைச்சர்கள் மதுரை எய்ம்ஸ்கான வேலையெல்லாம் முடிந்து கட்டிடப்பணி துவங்கிவிட்டது என்று கூறினார்கள். ஆனால் இன்று மக்களவையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் திரு நட்டா அவர்கள் ஒப்பந்தத்தில் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விரைவில் சரிசெய்யப்பட்ட பின்னர் பணிகள் துவக்கப்படும் என்கிறார். 


வானதி சீனிவாசன் அவர்களே! இரயில்வே துறையில் தமிழ்நாட்டின் உரிமை, பயணிகளின் பாதுகாப்பு, ஊழியர்களின் நலன், இவைகளுக்காக தொடர்ந்து நாங்கள் குரல்கொடுப்போம். அவைகள் மக்களை ஏமாற்றும் முயற்சி அல்ல. ஏமாற்ற நினைப்போரை அம்பலப்படுத்தும் முயற்சி என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ் பட்டிமன்ற உலகின் ஆளுமை சாலமன் பாப்பையா.. அரசு மரியாதையுடன் இன்று உடல் தகனம்

news

போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!

news

RIP Solomon Pappaiah: என்றும் நினைவோடு!

news

Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!

news

Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!

news

கொந்தளித்த திருமாவளவன்.. கோபம் திமுக மீதா.. முதல்வர் விஜய் மீதா?.. இது தான் காரணமா?

news

தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு: தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இரங்கல்!

news

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்

news

"தலஜோ".. சாலமன் பாப்பையா ஐயாவின் மறக்க முடியாத வகுப்பறை நினைவுகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்