"நீதித்துறை தமிழ் பேச வேண்டும்".. விதை போட்ட .. மாயூரம் வேதநாயகம் பிள்ளை!

Oct 11, 2023,11:41 AM IST

- மஞ்சுளா தேவி


மயிலாடுதுறை:  புதின இலக்கியத்தின் தந்தை, நீதி நூல் தந்த முன்னோடி என்ற  பெருமைக்குரியவர்  மாயூரம் வேதநாயகம் பிள்ளை. நீதித்துறையில் உண்மையாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும் என்ற கொள்கையை கொண்டவர். நீதித்துறை தமிழிலும் பேச வேண்டும் என்ற விதையைப் போட்டவர் இவர்தான்.


மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் 197 வது பிறந்த நாள் இன்று (அக்டோபர் 11) கொண்டாடப்படுகிறது.


மாயூரம் வேதநாயகம் பிள்ளை 1826 அக்டோபர் 11 ஆம் தேதி திருச்சி மாவட்டம் குளத்தூரில் பிறந்தார். இவர் மாபெரும் எழுத்தாளர் ஆவார். இவருடைய பெற்றோர் சவரி முத்துப்பிள்ளை மற்றும் ஆரோக்கிய மரியம்மை .

வேதநாயகம் பிள்ளை தனது தந்தையிடம் தொடக்க கல்வியை கற்றுத் தேர்ந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் மொழி மற்றும் ஆங்கிலத்தை தியாகராஜர் பிள்ளை என்பவரிடம் கற்றார். தனது பதினோராவது வயதிலேயே தமிழில் புலமை பெற்று விளங்கினார்.


பின்னர்  பாப்பம்மாள் என்பவரை மணந்தார். இவருடைய சொந்த ஊர் திருச்சியாக இருந்தாலும் மயிலாடுதுறையில் பணிக்காக சென்று,  வாழ்ந்த ஊரை தான் அதிகம் நேசித்தார். இதனால்தான் தனது பெயருடன் மாயூரத்தை இணைத்துக் கொண்டார். இங்குள்ள மக்களுக்காக உண்மையாக இருக்க வேண்டும் உளமாற பணியாற்ற வேண்டும் என நினைத்தவர். அப்படியே வாழ்ந்தும் காட்டினார்.




நீதி, நிர்வாகம், இலக்கியத் துறைகளில் சிறப்பாக சாதித்ததோடு மட்டுமில்லாமல் பெண்களின் உரிமைக்காக பேசியவர்.  848 ஆம் ஆண்டு திருச்சி நீதிமன்றத்தில் ஆவணக் காப்பாளர் பணியில் சேர்ந்தார். பின்னர் உயர் நீதிமன்றத்தில் முதன் முதலாக மொழிபெயர்ப்பாளர் பதவி கிடைத்தது. இதனை தொடர்ந்து ஆங்கில அரசு நடத்திய உரிமையியல் நீதிபதி காலி பணியிடத்திற்கு தேர்வு எழுதி வெற்றி பெற்று நீதிபதி ஆனார் .


ஆங்கிலேயர் ஆட்சியில் தரங்கம்பாடியில் உரிமையியல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட 'முதல் இந்தியர்', 'முதல் தமிழர்' வேதநாயகம்  பிள்ளைதான்.  நீதிமன்றங்களில் பதிவாளராகவும், மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றினார் .1857 ஆம் ஆண்டு  தரங்கம்பாடியில் முன்ஷிசிப்பாக 13 ஆண்டு காலம் பணிபுரிந்து புகழ்பெற்றார். பின்னர் மயிலாடுதுறை நகர்மன்ற தலைவராகவும் பணியாற்றினார்.


1860 ஆம் ஆண்டு மயிலாடுதுறை நகர நீதிபதியாக பொறுப்பேற்றார். வேதநாயகம் பிள்ளை நீதியளிக்கும் விதம் மக்களுக்கு பிடித்தது. நீதிபதியாக இருந்து நியாயம் தவறாமல் வாதாடுவதில் வல்லவர். சரியான நேரத்திற்கு நீதிமன்றம் வந்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார். ஏழை மக்களிடம் நியாயமான கட்டணம் வசூலிக்க வேண்டும் என சக வழக்கறிஞர்களிடம் எடுத்துரைப்பார். தன்னிடம் பிரச்சனை என்று வரும் மக்களுக்காக எந்த நேரத்திலும் நீதி வழங்குவார்.


நீதிபதி வேதநாயகத்திடம் போனால் நீதி கிடைக்கும் என மக்களுக்கு அவர் மீது நம்பிக்கை பிறந்தது. நீதித்துறையில் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல் தமிழ் மொழிபெயர்ப்பிலும் புலமை பெற்று விளங்கினார். 1879 ஆம் ஆண்டு தமிழின் முதல் நாவலான "பிரதாப முதலியார் சரித்திரம்" என்ற நூலை எழுதி வெளியிட்டார். சமகால தமிழ் புலவர்களான மீனாட்சி சுந்தரனார், ராமலிங்க வள்ளலார், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோரிடம் நட்பு கொண்டார். 


இது மட்டுமல்லாமல் பெண் கல்விக்காக குரல் கொடுத்தவர். பெண்களின் முன்னேற்றத்திற்காக பெண் கல்வி என்ற நூலை எழுதியவர். சமய நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், பெண்கள் குறித்த நூல்கள், இசை நூல்கள் ,

போன்றவற்றை எழுதியுள்ளார். 


மாயவரத்தில் முதல்முறையாக பெண்களுக்காக பெண்கள் பள்ளியை திறந்தவர் இவரே. தமிழகத்தில் 1876 ஆம் ஆண்டு பஞ்சம் ஏற்பட்டபோது தனது சொத்துக்கள் முழுவதையும் கொடுத்த கொடை வள்ளல். 1889ம் ஆண்டு வேதநாயகம் பிள்ளை, நீதிமன்ற நடவடிக்கைகள் தமிழிலும் இருக்க வேண்டும் என்று அப்போதே வலியுறுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்