மங்கலத் தை மலர்ந்த நாள் பொங்கல் வைத்து எங்கும் இன்பம்!

Jan 15, 2026,12:53 PM IST

- எம்.கே. திருப்பதி


திங்களில் சிறந்த

தெய்வீக மார்கழி 

போகியோடு புறப்படும் 


மலர் வாசம் வீசும் 

மாதம் தை -- மறுநாள்

மணக்கும் பூவாய் 

மாலையிடும்


மங்கலத் தை 

மலர்ந்த நாள்

பொங்கல் வைத்து

எங்கும் இன்பம்




நல்வயல் ஈந்த 

நெல்லது உடைத்து 

கைவினைக் கலைஞன் 

கவித்திற குழிசி...


விரும்பிய வெல்லம்

வேண்டிய வெள்ளம் 

வேணது கலந்து 

தீயிட்ட சூட்டில் 

வாய்விட்டு சிரிக்கும்!


நாசி தீண்டும்

நுரைப்பூ வாசம் --

நாள் முழுதும்

நாக்கில் பேசும்


கருங்கன்னல் 

மொழிக்கு மொழி இனிக்கும்

மஞ்சள் கொத்து

மங்கலம் பெருக்கும் 


தையின் தொடக்கம் 

வெய்யோன் வழிநடை 

வடக்கை நோக்கும்

பிரிந்த உயிரின்

பிறவிப் பிணி போக்கும்!


நல்லவை நல்கும்

புண்ணியத் திங்கள் 

முதல் நாள் பொங்கல்...


மண்வாசம் பேசும்

தமிழ் --

மண் கடந்தும் வீசும்!


முதுமொழித் தமிழன் 

முதன்மை திருவிழா 

உழவனுக்கும் உதயனுக்கும் 

உரித்தான ஒருவிழா!


பொங்கிய பொங்கலில் 

புத்துணர்வு கொட்டட்டும் 

புது வாழ்வு எட்டட்டும்!


மூட்டிய தீயில்

முரண்பாடு களைவோம் 

இனிப்பு பொங்கலில் 

இனியவை பகிர்வோம்!


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்