சென்னை: மாநிலங்களவை எம்பி தேர்தலில்,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுக கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைக்கவுள்ளார் கமல்ஹாசன். அவரது அரசியல் பயணத்தில் முக்கிய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.
மிகப் பெரிய நடிகராக நாடு முழுவதும் பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் கமல்ஹாசன். அரசியல் பேசினாலும் கூட அரசியலுக்கு வர மாட்டார் என்று கருதப்பட்டவர் கமல்ஹாசன். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 2019 நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு 4,20,83,544 வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்று அனைவரையும் வியக்க வைத்தது. அனைத்து இடங்களிலும் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர். ஆனாலும் மக்களின் கவனத்தை மக்கள் நீதி மய்யம் ஈர்த்தது.
இதனை அடுத்து 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில்
மக்கள் நீதி மய்யம் சிறிய அளவிலான கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. கமல்ஹாசன், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் தோல்வியையே தழுவியது. கமல்ஹாசன், பாஜகவின் வானதி சீனிவாசனிடம் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில் காட்சிகள் மாறின. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் கட்சி போட்டியிடவில்லை. மாறாக திமுக கூட்டணியில் இணைந்த
கமல்ஹாசன், திமுக கூட்டணி ஆதரவு மட்டுமே வழங்கினார். பிரச்சாரமும் செய்தார். அதற்குப் பதில், ஒரு ராஜ்யசபா இடத்தை கமல் கட்சிக்கு வழங்க திமுக ஒப்புக்கொண்டு உடன்பாடு செய்து கொண்டது.
அந்த உடன்பாட்டின்படி தற்போது ஒரு இடத்தை
திமுக வழங்கியுள்ளது. அந்த இடத்தில் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளார். எம்.பி. ஆகவுள்ளார். ஏற்கனவே மாநிலங்களவைத் தேர்தலில்
கட்சியின் வேட்பாளராக கமல்ஹாசனை அங்கீகரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தீர்மானம் போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
களத்தூர் கண்ணாமாவில் சிறுவனாக நடிக்க வந்து, பின்னர் நடன உதவியாளராக, நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக, பாடகராக என்று பல்வேறு அவதாரங்களை எடுத்து அசத்தி வரும் கமல்ஹாசன் தற்போது அரசியல்வாதியாக ஒரு முக்கிய உயர்வைக் காணப் போவது அவரது ரசிகர்களையும், அவரது நலம் விரும்பிகளையும், தொண்டர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே கமல்ஹாசனின் "அண்ணன்" இளையராஜா ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார். தற்போது "தம்பி" கமல்ஹாசனும் அங்கு போகப் போகிறார்.. எனவே ராஜ்யசபா நிகழ்வுகள் கலகலப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
{{comments.comment}}