- முனைவர் தி. தங்கலட்சுமி
மாவட்ட மைய நூலகம்
பிரதி வெள்ளி மற்றும்
மாதத்தின் இரண்டாம் சனி விடுமுறை!
பல நாளாய்க் காத்திருந்த
இருநாள் விடுமுறையைக்
கொண்டாடும் குதூகலத்தில்
எட்டுத் தொகையைத்
தேடிய என்னை
எட்டடிக்கும் முன்
சிறை வைத்தார்
நூலகப் பொறுப்பாளர்!
எட்டடித்த பின்
எட்டிப் பார்த்தால்
எவரையும் காணோம்!
கிழித்தெடுக்கப்பட்ட
பக்கங்களாகப்
படபடத்தது இதயம்!

திருடரிடம்
சிக்கிய புத்தகமாகச்
செயலிழந்தது புத்தி!
நல்ல வேளையாக
நானிருந்த
கடைக்கோடி வரிசையின்
நான்கு மின் விளக்கினை
அணைக்காத பொறுப்பாளருக்குக்
கோடி புண்ணியம்!
தட்டுத் தடுமாறி
மின் விசையைத் தட்டி
எட்டெடுத்து வைத்துத்
தனிமையின் பயம்
தாங்கிய
தயங்கிய நடையோடு
தொலைபேசியைத்
துழாவின கண்கள்
பந்தயக் குதிரையாய்
ஓடியது இதயம்!
உறுதியாகத்
தேட மாட்டார்கள்
தூரத்தூரில்
துஷ்டி வீட்டின்
இறுதி ஊர்வலத்தில்!
வர இரண்டு நாளாகும்
வீட்டைப் பூட்டிக்
கொண்டிரு பத்திரமாய்!
வீடு, பூட்டித்தான் இருக்கிறது;
நானும் பத்திரமாய்ப்
பூட்டப்பட்டுதான் இருக்கிறேன்!
கண்ணாடி அறை
பூட்டிய நிலையில்
தொங்கிய சாவி!
கை நடுங்கக்
கதவைத் திறந்து
உள் நுழைந்த பின்
செய்வதறியா தவிப்பில்
அறை முழுதும்
வட்டமிட்டன கண்கள்!
திறந்த நிலையில்
ஊழியர் வருகைப்
பதிவேட்டுப் புத்தகம்;
மூடாத பேனா
அழியாத மையில்
அழுத்தமாய்க்
கிறுக்கப்பட்ட
முகவரியுடன்
தோண்டாத தொலைபேசி
இலாக்காவைச் சேர்ந்த
செல்லிடை பேசி
எண்கள் பளிச்சென!
இறுதியாகக்
கையொப்பமிட்டுச்
சென்றிருந்த
பொறுப்பாளர் பெயர்
புண்ணியகோடி!
எண்களைச் சுழற்றினால்
வாடிக்கையாளர்
தொடர்பு எல்லைக்கு
வெளியே!
பயம் வெளியேறிவிட்டது
பசி உள்ளே வரவும்!
கண்களின்
தேடுதல் வேட்டையில்
சிக்கியது...
பிரிக்கப்படாத
உணவுப் பொட்டலம்
உள்ளே
புரோட்டா – சால்னா!
மூலையில்
மூடிய நிலையில்
அரைக் குடம்
தண்ணீர்!
உண்ட மயக்கம்
பொறுப்பாளர்
நாற்காலியிலேயே
உறக்கம்!
தூக்கமோர் தொற்றுநோய்
நாற்காலியின் மகிமையோ
பொறுப்பாளரின் உபயமோ
நானறியேன்
நல்ல நித்திரை!
குழப்பமான ஒலிகள்
குதிரையின் குளம்படி
யானையின் பிளிறல்
வாளோடு வாள்
வேலோடு வேல்
உரசிடும் ஓசை
உயிர்விடும் ஓலம்!
உயிர் குலுங்க
உலுக்கி எழுந்தால்
கண்ணாடிக்குப் பின்னால்
புறநானூற்றுப்
போர்ப் பாசறை!
பதைபதைத்த
உள்ளத்தோடு
பதுங்கிச் சென்று
பார்த்தால்...
பாரியென்ற பித்தன்,
இருப்பவன் கொடுத்ததை
இல்லாதவன் எடுத்துக்
கொள்வான் என்பதை
அறியா மூடன்
முல்லைக்குத் தேரைக்
கொடுத்துவிட்டுத்
திருட்டு பயமின்றி
வெறுங்காலில்
நடந்து செல்கிறான்
நடுத் தெருவில்!
இது ஒருபுறமிருக்க
அங்கே
நற்றிணைக்
காதலி ஒருத்தி
புன்னையைத் தன்
தங்கை என்று
புகழ்ந்து கொண்டிருந்தாள்
காதலனின் கள்ளமனம்
புரியாது!
உன் தங்கை
புன்னையாக
இல்லாமல் ஒரு
புவனாவாக
இருக்கக் கூடாதா?
ஆணாதிக்கத் திமிர்
இதுதான் என்று
மேடை போட்டுக்
கட்சி கட்டிப்
பெண்ணியம் பேசியது
ஒரு கூட்டம்!
பகலில்
கல்லறைத் தோட்டமாய்க்
காட்சியளிக்கும்
நூலகம்
இரவில்
இயங்கும் உலகமானது!
சில வேளைகளில் அலங்காரமாயும்
பல நேரங்களில் அலங்கோலமாயும்
அடுக்கப் பெற்றுள்ள
நூல்கள் அருங்காட்சியகப்
பொருளல்ல;
சாகாவரம் பெற்ற
ஜீவிக்கும் சிரஞ்சீவிகள்!
உலக அறிவின்
ஒட்டு மொத்தப்
புதையல் பெட்டகம்!
பெட்டகங்களிலிருந்து
புதிது புதிதாக
வெளிக் கிளம்பினர்
மனிதர்கள்
உலவத் தொடங்கினர்
நூலகம் முழுவதும்!
உயிர்த்தெழுந்து
உலவினர்
புராணப் புனிதர்கள்
வரலாற்று வள்ளல்கள்
காவியக் காதலர்கள்
நாவலின் நாயகர்கள்
தத்துவ வித்தகர்கள்
சிந்தனைச் சித்தர்கள்!
கூட்ட நெருக்கடி
மொழிகளின் சந்தடியில்
விழி பிதுங்கி நிற்கையில்...
அலாரம் அடிக்க
அலறிப் புடைத்தெழுந்தேன்!
அதிசய உலகிலிருந்து
ஆதவன் கரத்தில் விழுந்தேன்!
அதிகாலை ஆறு மணிக்கு!
சொந்த சோகங்கள் மறந்து
கற்பனை சோகங்கள் சுமந்த
சுகமான இரவுகளைத்
தந்த சுவையான
என்றென்றும் தொலைந்து போக ஆசை!!!
(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).
Tn elections 2026 தமிழக தேர்தலுக்கு இன்னும் 2 நாள் மட்டுமே... பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது
திடீரென வரும் உறவும்… திடீரென விலகும் மனமும்!
சிந்தனைச் சிதறல்.. உலகின் உன்னதமான மொழி எது தெரியுமா?
M Bharathi Poem: காற்று
When Care Turns Blind.. அன்போடு சுட்டிக் காட்டப்படும் தவறுகள்.. நல்லதே!
Deepa Ravi Poem: நீலவானும் நீயும் நானும்
குடைக்குள் மழை
Amarnath Yathra.. எனது கண்ணோட்டத்தில் அமர்நாத் யாத்திரை.. ஒரு பயணக் கட்டுரை (1)
Monday Motivational Poem: தொலைந்து போக ஆசை!
{{comments.comment}}